4.1 சோழர் கோயிற் பணிகள்

    முற்காலச் சோழர்களும், விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர்களும் ஆலயங்களைப் புதியனவாகக் கட்டியும், சிறிய ஆலயங்களாக இருந்தவற்றைப் பல கட்டட உறுப்புகளைச் சேர்த்து விரிவாக்கியும், பெருங்கோயில்களைச் செப்பனிட்டுப் புதுப்பொலிவோடு ஆக்கியும் பல வகைகளிலும் பெருந்தொண்டு புரிந்துள்ளனர். அதிலும், நாயன்மார்களாலோ, சிறப்பாகச் சைவ சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் எனும் அருளாளர்களாலோ, பாடல் பெற்ற சிவாலயங்களுக்கும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திவ்ய தேசங்களுக்கும் கோயிற் பணிகள் பல புரிந்துள்ளனர். தேர்ந்தெடுத்த சில ஆலயங்களின் கட்டடக் கலை இங்கே எடுத்துரைக்கப்படுகின்றது.

    விசயாலயன் எனும் சோழன், தஞ்சையையும் வல்லத்தையும் வென்ற மகிழ்ச்சியில், தான் வழிபடும் தெய்வமாகிய நிசும்பசூதனி என்ற துர்க்கைக் கோயிலைத் தஞ்சாவூரில் கட்டியுள்ளான். பக்தியார்வத்தால் நார்த்தா மலையிலுள்ள விசயாலய சோளீச்சுவரம், காளியாபட்டியிலுள்ள சிவன் கோயில், பனங்குடியிலுள்ள அகத்தீசுவரம் என்ற பரமேசுவரன் கோயில், விராலியூரிலுள்ள பூமீசுவரர் கோயில், விசலூரிலுள்ள மார்க்கசகாயேசுவரம், திருப்பூரிலுள்ள சிவன் கோயில், ஏனாதியிலுள்ள சிவன் கோயில் ஆகியவை விசயாலயன் காலத்தவையாகும்.

    நகரத்தார் மலை என்பது நார்த்தா மலை எனத் திரிந்துள்ளது; அது புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளது. இவ்வூர் எட்டுக் குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இக்குன்றுகளுள் ஒன்றாகிய மேலை மலையில் கிழக்கு நோக்கி இரண்டு குகைக் கோயில்களும், ஒரு கட்டுக் கோயிலும் காணப்படுகின்றன. வலப்பக்கத்திலுள்ள சமணர் குகைக் கோயில் வைணவக் கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது. தெற்கிலுள்ள குகைக் கோயில் பழியிலி ஈசுவரம் என்ற சிவன் கோயிலாகும்.

    இந்த இரு குகைக்கோயில்களின் அடிவாரத்திற்குக் கிழக்கேயுள்ள கட்டுக்கோயிலில் கருவறையும் அர்த்த மண்டபமும், கற்றளி (கல்லால் ஆகிய கோயில்)யைச் சுற்றிச் சிதைந்து காணப்படும் பரிவார தேவதைகளின் ஒரு தளத்தையுடைய ஆறு சிறு கோயில்களும் உள்ளன. நடுவிலுள்ள முதன்மைச் சிறப்புடைய கற்றளியே விசயாலய சோளீச்சுவரம் ஆகும்.

    வரலாற்று ஆசிரியர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் விசயாலய சோளீச்சுவரம் பற்றி எழுதுகையில், “கோயில் மேற்குப் பார்த்த சன்னிதியை உடையது. ஓங்கார வடிவுடைய கருவறை நான்கு மூலைகளிலும் நான்கு தூண்கள் நிறுவப் பெற்ற 29 அடி சதுரமுடைய மண்டபத்திற்குள் அமைக்கப் பெற்று, உருண்டை வடிவமுடைய இலிங்கம் பிரதி்ட்டை செய்யப் பெற்றுள்ளது. இது நாலு தளக் கோயிலாகும். கருவறைக்கு மேலுள்ள இரு தளங்கள் முகப்பில் சாலைகளாலும் கூடங்களாலும், இவற்றிற்கிடையே அழகிய சிலைகளைக் கொண்ட நாசிகை என்ற இடைவெளியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நான்காவது தளம் கருவறையின் அமைப்பைப் போலவே வட்டவடிவமானது. கிரீவம் (கழுத்து) எனப்படும் இதன் மேல்பாகத்தில் நாற்புறங்களிலும் தேவகோஷ்டங்களும் விமான தேவதைகளும் திகழ்கின்றன. சிகரம் வட்டவடிவமானது. இப்பொழுது காணப்படும் ஸ்தூபி பழைய ஸ்தூபியன்று.

    கருவறையில் வெளிப்புறச் சுவர்களில் தேவகோஷ்டங்கள் இல்லை. வெளிப்புறச் சுவர்கள் அரைத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் போதிகைகள் 45% கோண வடிவுடையன. இப்போதிகைகள் பல்லவர் காலத்துப் போதிகைகளைப் போல நடுவில் பட்டையாகவும் இரு புறங்களிலும் சுருண்டு வருவனவாகவும் உள்ளன. மண்டபத்தைத் தாங்க மத்தியில் கற்றூண்கள் உள்ளன.

    அர்த்த மண்டப வாயிலின் இருபுறங்களையும் ஐந்தடி உயரமுடைய துவார பாலகர் இருவர் அலங்கரிக்கின்றனர்” என்று (சோழர் கலைப்பாணி, பக்- 43-44) கட்டடக் கலைக் கூறுகளை விளக்கிக் காட்டியுள்ளார்.

    முன்னொரு காலத்தி்ல் கொடும்பாளூர், இருக்குவேளிரால் ஆளப்பட்ட சிறப்புடையது; பண்டு 108 கோயில்கள் இருந்தன. இக்காலத்தில் சோழர் காலத்துக் கோயில்களாக மூவர் கோயில், முசுகுந்தேசுவரர் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் உள்ளன.

4.1.1 திருவீழிமிழலைக் கோயில்

    தமிழ்நாட்டிலுள்ள தொன்மையான கோயில்களுள் ஒன்றாகத் திருவீழிமிழலை விளங்கி வருகிறது. ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவராலும் பாடப் பெற்றதும், இறைவனிடம் இருவரும் படிக்காசு பெற்றுத் திருமடங்கள் அமைத்து அடியார்களுக்குப் பஞ்சக் காலத்தில் உணவளிக்க வாய்ப்பளித்ததுமாகிய தலம் திருவீழிமிழலை, செழுமாடத் திருமிழலை எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருணிப்பது கொண்டு, திருவீழிமிழலைக் கோயில் ஒரு காலத்தில் மாடக் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.

    பல்லவர்காலத்தில் மிகச் சிறப்பாக இக்கோயில் அமைக்கப்பட்டது. நல்ல கட்டடக் கலையழகு நிறைந்த கோயிலாக இன்றும் இத்தலம் விளங்கி வருகிறது.

    சிற்பச் சிறப்புமிக்க ‘வௌவானத்தி மண்டபம்’ கட்டடக் கலைக்குத் தனி முத்திரை பெற்றது. திருவீழிமிழலைத் தலத்தில் அடியார்க்கு அன்னம் பாவிக்க (உணவுதர) அப்பரும் சம்பந்தரும் அமைத்த திருமடங்களைக் காணலாம்.

4.1.2 திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்

    பண்டைய சோழ மன்னர்கள் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் இறைவனுக்குப் பல ஆலயங்கள் கட்டியுள்ளனர். சிற்பங்களுடன் கூடிய கட்டடக் கலை நேர்த்திக்குப் பேராதரவு வழங்கியுள்ளனர். சென்னைக்கு மேற்கே 13 கல் தொலைவிலுள்ள திருமுல்லைவாயில் ஈசுவரன்கோயில கட்டடக் கலைச் சிறப்பினைக் கொண்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற இக்கோயில் சோழர் கலைப் பாணியைக் காட்டும்.

    தூங்கானைமாடக் கோயில் வகையைச் சார்ந்த இக்கோயிலி்ல் கருவறை அர்த்த மண்டபம் கொண்டது. இவற்றைச் சுற்றி மூடப்பட்ட பிராகாரமும், அதன் முன்னர் மகா மண்டபமும் காணப்படுகின்றன; பிற்காலத்தில் கட்டப்பட்ட கோபுர வாயிலும் உண்டு.

    அர்த்த மண்டபத்தில் இரு வெள்ளெருக்கத் தூண்களும், உட் பிராகாரத்தின் கீழ்ப் பகுதியில் ஏழு கல்தூண்களும், மகா மண்டபத்தில் நான்கு அழகிய தூண்களும் அணிசெய்கின்றன.

    கருவறை அர்த்த மண்டபம் முதலியவற்றின் புறச் சுவர்களை அரைத்தூண்கள், கும்பபஞ்சரங்கள், தேவ கோட்டங்கள் ஆகியவை சிற்ப வேலைப்பாட்டுடன் அழகு செய்கின்றன. தேவ கோட்டத்தின் மேலுள்ள மகரதோரணங்கள் அணிசெய்யும் பாங்குடன் நடுவில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. கொடுங்கையின வெளிப்புறத்தில் கூடுகளும் அமைப்பாக உள்ளன.

    ஆலயத்திற்கு விமானம் முகம் போன்றது. இக்கோயில் விமானம் மூன்று தளங்களைக் கொண்டது. முதலிரண்டு தளங்களிலும் சதுரவடிவமும் நீண்ட சதுர வடிவமும் முறையே அமைந்து சிறு கோபுர அமைப்புகளாகக் காட்சியளிக்கின்றன.

    கோயிலின் தென்புறத்தில் இறைவிக்கெனத் தனிக்கோயில் உள்ளது. இங்கு கருவறை அர்த்த மண்டபம், உள்பிராகாரம், மகாமண்படம் ஆகியவற்றைக் கொண்டும், வெளிப்பிராகாரத்தில் விநாயகர் கோயில், திருமுருகன் கோயிலுடனும் உள்ளது. விநாயகர் கோயிலின் முன்பகுதியை அமர்ந்த நிலையுடைய சிங்கங்களுள்ள தூண்கள் தாங்கி நிற்கின்றன. கோயிலின் கீழ்ப்புறத்தில் மரபுப்படி நந்திபீடமும் கொடிக்கம்பமும் காணப்படுகின்றன.

4.1.3 தஞ்சைப் பெரிய கோயில்

    சோழர்கள் ஆலயங்கள் பல கட்டியுள்ளார்கள். ஆனால், சோழர் கட்டடக் கலையின் பொற்காலத்திற்குக் காரணமாயிருந்தவை மூன்று தலங்களில் அமைந்த கோயில்களே, அவை,

1. தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில்,
2. கங்கைகொண்ட சோழேச்சுரம் கோயில்,
3. திரிபுவனம் கம்பஹரேசுவரர் கோயில்.

கி.பி. 1009-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் பரந்த வெளியில் கட்டடப்பட்ட சிறந்த கட்டடக் கலைச் சிறப்பிற்குரியது.

    முதலாம் இராசராசன் காலத்திற்கு முன், கருவறையில் அமைந்த விமானம், ஆலய வாயிற்கோபுரத்தை விட உயரத்திற் குறைந்தே இருந்தது. ஆனால், இராசராசன் காலத்தில் விமானத்தை 216 அடி உயரத்தில் அமைத்துப் பெரும்புகழ் கொண்டான்.

  • தனித்தன்மை

  •     கிழக்கு நோக்கிய கோயிற் கருவறையில் மிகப் பெரிய இலிங்கம் (பிரகதீசுவரர்) நிறுவி, அதனை நீராட்ட, மேனிலை ஆளோடிகள் அமைக்கப்பட்டு, மேனிலையிலே தென்பாற் சுவரில் நீர்த்தொட்டியும் அமைக்கப்பட்டது. இத்தகைய கட்டடக் கலையமைப்பினை நம் நாட்டில் இங்கு மட்டுமே காணமுடியும்.

        பெரிய கோயில், பெருவுடையார், பெரிய நந்தி, ஆகியவற்றுக் கேற்பப் பெரிய விமானம் அமைந்துள்ளது. பெருவுடையாருக்கேற்ப, பெரிய நாயகியாகிய அம்மை தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

        மகாமண்டபத்தையும் கருவறையையும் சுற்றிய தேவ கோட்டங்களில் சிவமூர்த்தங்களும் சக்திகளும் அமைத்திருப்பது இராசராசனின் பக்தியீடுபாட்டைப் புலப்படுத்தும்.

        பரிவாரக் கோயில்களாக வராகியம்மன் கோயில், சண்டேசர் கோயில், விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியவை உள்ளன.

        ஆகம வழிபாட்டின் ஒரு கூறாக வலம் வரும் போது, கோயில் தூபி, விழுநீர்ப்போக்கு ஆகியவற்றைத் தாண்டிச் செல்லக் கூடாது; இதனை மனத்துட்கொண்டு, விமானக் கலசத்தின் நிழல் திருச்சுற்றில் விழாதவாறு அமைத்ததும் விழுநீர்ப்போக்கு ஓர் ஆள் உயரத்தின் மேல் ஓடிவந்து விழுமாறு அமைத்ததும், அக்காலச் சிற்பியர் புரிந்த மாற்றங்களாகும்.

        பரந்த வெளிப் பிராகாரத்தில், திருச்சுற்று மாளிகையில் இலிங்கங்களையும் பிற தெய்வங்களையும் நிறுவி ஆலயப் பாதுகாப்பிற்கு மன்னன் வழிதேடியுள்ளான். அனைத்திலும் சிறந்த திருப்பணியாகப் பிரமந்திரக் கல்லுடன் சார்த்தித் தட்சண மேருவை நிறுவியுள்ளது மதித்துப் போற்றத்தக்கது.

  • புகழ்மிக்கது

  •     இமயத்திலும் சிதம்பரத்திலும் ‘மகாமேரு’ எனும் சக்தி தன் ஆற்றலைக் காட்டிக் கொண்டிருக்கிறது ; அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற பேருண்மையை உணர்ந்திருந்தான் இராசராசன். அதே ஆற்றலை, தான் கட்டும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் நிறுவ முயன்று வெற்றி பெற்றான் என்பர். டாக்டர் இரா.நாகசாமி, “உலகிலேயே மிக உயர்ந்த மலைச்சிகரம் மகாமேரு அன்று; இந்திய நாட்டில், ஏன், வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிக உயரமான சிகரம் உடையதாகக் கட்டப்பட்ட கோயில் தக்ஷிணமேருவாம் தஞ்சைக் கோயில். மேரு தூய்மையான சுத்தமான பொருளால் ஆன மலை; அதுபோலத் தஞ்சைக்கோயில் அடியிலிருந்து முடிவரை கருங்கல்லாலேயே கட்டப்பட்ட கோயில். கல், செங்கல் அல்லது மரம் என்னும் ஏதாவது பொருளால் ஒரு கோயில் கட்டப்படுமானால் அதைச் சுத்தமான கோயில் எனக் கட்டிட வல்லுநர் கூறுவர். மேரு பொன்மயமான சிகரம் எனக்கண்டோம். தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டிய இராஜராஜன் இக்கோயிலின் வானளாவிய சிகரத்தையும் பொன் வேய்ந்து ஒளிமயமான சிகரமாக்கினான்” (தஞ்சை இராசராசேச்சுரம் திருக்குட நன்னீராட்டு மலர், 1997, பக்-8) என்று விளக்கிச் செல்வது மனங்கொள்ளத்தக்க அருங்குறிப்பாகும்.

        மாமன்னன் இராசராசன் கட்டிய பெரிய கோயிலுக்கு மிகவும் ஆன்மநல ஆற்றலை வழங்கக் கூடிய வகையில் அமைந்தது, நந்தி மண்டபத்திற்கு அருகில் கட்டப்பட்ட பெரிய நாயகி கோயிலாகும். தஞ்சைப் பெரிய கோயில் விமானத்துக்கு வடமேற்கேயுள்ள சுப்பிரமணியர் கோயில் நாயக்கர் காலச் சிறப்புமிகு கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

    4.1.4 திருவையாறு கோயில்

        சோழ மன்னர்கள் தாம் மட்டும் ஆலயப் பணிகளில் ஈடுபடாமல், தம் தேவியரையும் சுற்றத்தவரையும் அரசியல் அதிகாரிகளையும் ஆலயப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுமாறு செய்தவர்கள்.

        தஞ்சையில் இராசராசன் பெரிய கோயிலைத் தட்சிணமேருவாகக் கட்டிய காலத்தில், அவன் தேவி ஒலோகமாதேவி (உலக மாதேவி) உத்தர (வட) கயிலாயம் எனும் உத்தரமேருவைத் திருவையாற்றில் எடுப்பித்தாள். இ்ங்குக் கீழ்ப்பிராகாரம் நுழைகையில் ஏழுநிலை கொண்ட இராசகோபுரம் உள்ளது. அடுத்து இரண்டாம் கோபுரம் மூன்று நிலை கொண்டது; இரு கைகளுடன் துவார பாலகர்கள் உள்ளனர். கோபுர மாடத்தே நந்திதேவர் தம் தேவியுடன் காணப்படுகிறார்.

        விக்கிரமசோழன் கட்டிய மூன்றாம் கோபுர முகப்பில் இருகை துவாரபாலகர்கள் உண்டு. மூன்றாம் பிராகாரத்தே தெற்கு மூலையில் (தென் மேற்கே) ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ! எனும் வாய்மொழி இலக்கியமாக விளங்கும் ஐயாறப்பரே ஒலிப்பது (ஒரு ஒலி எதிரொலியாக ஏழு ஒலியெழும்பும் கட்டடக் கலை நுட்பமுடையது) போன்ற அற்புதம் உண்டு. தொடர்ந்து வலம் வருகையில் தங்கத்தகடு போர்த்திய கொடிமரம், சித்தி விநாயகர் அமைந்திருக்க, 200 கால் மண்டபத்தைக் காணலாம். நந்தியம் பெருமானும் காட்சியளிக்கிறார். அடுத்துச் சொக்கட்டான் மண்டபம், ஸ்நபன மண்டபம் கடந்து அர்த்த மண்டபம் அமைந்துள்ளது; கருவறையில் ஐயாறப்பரைச் சிவலிங்கவுருவில் வழிபடலாம்.

        ஐயாறப்பர் கோயில் சன்னிதியின் இருபுறமும் 5 அடி உயரத்தில் இருகைகளுடன் கூடிய துவாரபாலகர்கள், பல்லவர் பாணியிலமைந்த சோழர்காலப் படைப்புகளாக உள்ளனர்.

  • உட்பிராகாரம்

  •     ஐயாறப்பரை வழிபட்டுக் கொண்டு முதல் பிராகாரத்தே சிவயோக தட்சணாமூர்த்தியையும், எதிரில் சப்தமாதரையும் நாயன்மார் அறுபத்து மூவரையும் கண்டு வழிபடலாம்.

        கீழ்ப்புறவாயில் வழியே வருகையில் சோமாஸ்கந்த மண்டபம் முத்திமண்டபம், ஐயாற்றுப் புராண வரலாற்றை வண்ணச் சித்திரமாகக் காட்டும் திருநட மாளிகை, ஆதிவிநாயகர், நவக்கிரகங்கள், பஞ்ச பூதலிங்கங்கள், தெய்வநலம் நிறைந்த அடியவர்கள் செபம்புரி மண்டபம் முதலியவை சிற்ப எழிலுடன் காட்சியளிக்கக் காணலாம்.

        மேற்பிராகாரத்தே வில்லேந்திய வேலவன் வள்ளி தேவயானையுடன் காட்சியளிக்கிறான். வடமேற்கு முலையில் காசிவிசுவநாதர் விசாலாட்சி உடன் இருக்கும் திருக்கோலம் உண்டு. முச்சக்தி மண்டபத்தே துர்க்கை சரசுவதி திருமகள் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். அருகே சித்தர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயில் எடுப்பிக்கக் காரணராயி்ருந்த அகப்பேய்ச்சித்தர் இங்கு இலிங்க வடிவில் வழிபடப்படுகிறார்; கோயில் மரபுப்படி சண்டேசர் சன்னிதியும் உள்ளது.

  • ஏழூர்த்தலச் சிறப்பு

  •     திருவையாற்றைத் தலைமைக் கோயிலிடமாகக் கொண்டு, ஆறு சிவாலயங்கள் நல்ல கட்டடக் கலைச் சிறப்புடன் உள்ளன. எல்லாவற்றையும் தொகுத்து ஏழூர்க்கோயில்கள் என்றும், சப்தஸ்தானக் கோயில்கள் என்றும் அழைப்பர்.

        திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழும் பாடல் பெற்ற சிவாலயங்கள்; ஏழு முனிபுங்கவர் (சப்தரிஷி) ஆசிரமங்களாகப் போற்றிப் புகழப்படுபவை.