5.3 ஐயனார் கோயில்கள்

    தமிழ்நாட்டுச் சிற்றூர்ப் புறங்களில் காவல் தெய்வமாகப் போற்றப்படும் ஐயனார் கோயில் கொண்டுள்ள இடங்கள் பலவுள. அவை பெரும்பாலும் மரங்களடர்ந்த பகுதி, ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை ஆகியவற்றை ஒட்டிய பகுதிகளில் அமைந்திருக்கும். ஐயனார் கோயில்களில் மிகக் கோலாகலமாகத் திருவிழாக்கள் நடைபெறுவது மரபாதலின், கோயிலின் முன்னர், மக்கள் திரளுவதற்கேற்ப விசாலமான இடம் அமைந்திருக்கும்.

5.3.1 கோயில் அமைப்பு

    எல்லாத் தெய்வங்களுக்கும் அமைந்திருப்பதுபோல ஐயனாருக்குப் பெரிய கோயில் அமைவதில்லை ; பெரிய கூரை வேய்ந்த இடங்களோ கூட அமைப்பதில்லை. அபூர்வமாகச் சில இடங்களில்தான் கோயிற் கட்டடம் அமைப்பர். ஐயனார் உருவம் சுதையமைப்பில் காணப்படும் ; அதுவும் பீடத்தில் அமர்ந்த நிலையிலும், சில சிற்றூர்களில் குதிரை வாகனத்தில் ஏறி அமர்ந்த நிலையிலும் ஐயனார் காட்சியருளுவார். கிராமத்துக்கு வளமும் நலமும் தந்து காவலும் புரிந்தருளுவதால், விவசாயப் பெருங்குடி மக்கள் அறுவடை முடிந்ததும் பயபக்தியுடன் திருவிழா எடுப்பர். அவரது திருவுருவத்தைப் பார்த்த நிலையிலேயே, அச்சவுணர்வால் யாரும் தவறு செய்ய எண்ணுவதில்லை. சில கிராமங்களில் ஐயனார் குலதெய்வமாகவும், சில இனத்தவருக்கு இனதெய்வமாகவும் விளங்குகிறார்.

 • ஐயனார் பற்றிய கருத்துகள்

 •     சங்க காலத்தில் வழிபடப்பட்ட ‘சாத்தன்’ என்ற தெய்வமே கிராமங்களில் ஐயனாராகக் கொண்டாடப்படுகிறார் என்றும், சாஸ்தா (சாத்தன்) எனும் ஐயனார், மகாசாஸ்தா, சத்ரு சாஸ்தா, ஜீவ சாஸ்தா, சர்வசாஸ்தா, சாஸ்தா, பிரசாஸ்தா என்ற பெயர்களில் ஆறுவகை உண்டென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் ; சிலர் ஒன்பது வகை சாஸ்தாக்களைக் குறிப்பிடுவர்.

  1. ஆதிபூதநாதர் (ஐயனார்),
  2. சம்மோகன சாஸ்தா,
  5. கலியாணவாத சாஸ்தா,
  4. வேத சாஸ்தா,
  5. ஞான சாஸ்தா,
  6. பிரம்ம சாஸ்தா,
  7. ஸ்ரீதர்ம சாஸ்தா,
  8. மகா சாஸ்தா,
  9. வீர சாஸ்தா

  இவர்களுக்கெல்லாம் ஒரு காலத்தில் கோயில்கள் இருந்தன என்பர்.

  5.3.2 ஐயனார் வழிபாட்டுக் கோயில்கள்

      தமிழ்நாட்டில் காணப்படும் சில ஐயனார் கோயில்களைக் காண்போம்.

      மக்களின் பக்தியார்வத்திற்கேற்ப ஐயனார் கோயிலில் கட்டட அமைப்புகள் பலவாறாக உள்ளன. சிறப்புமிகு ஐயனார் கோயில் பற்றி ஆராய்ந்து கோ.வி. இராசேந்திரன் எழுதுகையில், “மதுரை - வாழப்பாடி தாலுக்கா அய்யன் பேட்டை கிராமத்திலுள்ள அய்யனார் கோயிலில் அய்யனார் தம் மனைவிகளான பூர்ணாதேவி, புஷ்கலாதேவி ஆகியோருடன் அருள் புரியும் விதத்தில் அமைந்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பு, கோவிலைச் சுற்றிலும் உள்பகுதியிலும் சோனை, சின்ன கருப்பு, பெரிய கருப்பு, லாட சன்னாசி, பேச்சி, சந்தனக் கருப்பு, சிவன், வீரியப் பெருமாள், மதயானைக் கருப்பு, ராக்காயி, பத்ரகாளி உட்பட இருபத்தொரு தெய்வங்கள் உள்ளன. பொதுவாக எல்லா ஊர்களிலும் உள்ள கோயில்களில் அய்யனார் சாட்டைக் கம்புடன் அமர்ந்திருந்து அருள் புரிவார். இங்கு அய்யனார் குதிரைச் சிலையிலிருந்து அருள் புரிகிறார்”. (ஆலயங்களும் அபூர்வ தகவல்களும்’ - பக் 43) என்று கூறுவது மிகவும் சிந்திக்கத்தக்கது. இதனால், ஆலயக் கட்டடமும் அதன் முற்பகுதிப் பரப்பும் விசாலமானவை என்பது தெரிய வரும்.

      தஞ்சைப் - பட்டுக் கோட்டை நெடுஞ்சாலையில், தஞ்சையிலிருந்து 9கீ.மீ. தொலைவில் சூரக்கோட்டை பரமநாத ஐயனார் கோயில் விசாலமாக உள்ளது. ஐயனார் பூரணா மற்றும் புஷ்கலா ஆகிய இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். ஐயனார் சன்னிதியின் முன்புறமாக மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். மேலும், இக்கோயிலில் முனீசுவரன், பேச்சியம்மன், நாகப்பன் முதலியோர் சன்னிதிகளும், ஆகம விதிப்படி கன்னிமூலையில் மங்கள விநாயகரும் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். இவற்றையெல்லாம் நோக்குகையில், போதிய கோயிற் கட்டட வசதியில்லாத தெய்வங்களும் மக்களின் பக்தியார்வம் காரணமாகக் கோயி்லும் பல கட்டட அங்கங்களும் பெற்று அருள் புரியலாயின என்பது தெரிய வரும்.

      மேலும், பெரும்பாலும் ஐயனாருக்குத் துணையாகக் கருப்ப சாமி விளங்குவார் என்பதைத் தென் மாவட்டங்களிலுள்ள கோயிலமைப்புகளால் தெரிந்து கொள்ளலாம்.

      ஒப்பீ்ட்டு ஆய்வு முறையில் சிந்திக்கையில் சில பெருந்தெய்வங்களுக்குச் சிறுதெய்வங்கள் காவல் பொறுப்பிற்குத் துணை நிற்பது உண்டு. அகத்தியனாரின் வேண்டுகோளை ஏற்று இடும்பன் (இடும்பாசுரன்) திருக்கயிலையிலிருந்து சிவகிரி, சத்திகிரி ஆகியவற்றைக் காவடியில் வைத்துக் கொணர்ந்த பெருமை கொண்டவன். எனினும், பழநி தண்டாயுத பாணிக்கு உதவியாக அமைந்த காவல் தெய்வம். அந்தச் சிறுதெய்வத்துக்கும் பழநி மலையில் தனிக்கோயில் உண்டு.