பல்லவரது சம காலத்தவரான பாண்டியர் பல்லவரது குடைவரை
மரபைப் பின்பற்றிப் பாண்டிய நாட்டில் குடைவரைகளைத்
தோற்றுவித்தனர். பல்லவர்கள் குடைவரைகளைத் தொடங்கிய
போது
அவற்றில் இறையுருவங்களைச் செதுக்கவில்லை. பிற்காலக்
குடைவரைகளிலேதான் கருவறைகளின் பின்சுவர்களில்
இறையுருவைப் புடைப்பு உருவமாகச் செதுக்கினர். ஆனால்
பாண்டியர்கள்
குடைவரைகளைத் தொடங்கியது முதல்
கருவறைகளில் இறையுருவைத் தவறாது இடம்பெறச் செய்துள்ளனர்.
ஒற்றைக்கல் இரதமான கழுகுமலை வெட்டுவான் கோயில்
இன்றளவும் மிகச் சிறப்பான ஒரு படைப்பாகக்
கருதப்படுகிறது.
காரணம்,
வேறு ஒற்றைக்கல் இரதங்கள் பாண்டிய நாட்டில்
தோற்றுவிக்கப் படவில்லை என்பதுவே. மேலும் கலை அழகு
வாய்ந்த, எழிலார்ந்த சிற்பங்களைக்
கொண்டு விளங்குவதால்
அது தென்னக எல்லோரா என்று சிறப்பிக்கப்படுகிறது.
கழுகுமலை வெட்டுவான் கோயில் |
முற்காலப் பாண்டியர்களின்
கட்டுமானக் கோயில்கள்
முற்றிலுமாக அழிந்து விட்டன. பிற்காலப்
பாண்டியர்களின்
கட்டுமானக் கோயில்களில் சில
மட்டுமே எஞ்சியுள்ளன.
அவற்றில் காணப்படும் சிற்பங்கள் பாண்டியர்களுக்கே
உரிய
கலைப் பாணியை உணர்த்துவனவாக உள்ளன.
விசயநகர-நாயக்க மன்னர்களது காலத்தில் கோயில்களில்
சிற்பங்கள் பெரிதும் போற்றப்பட்டன. இச்சிற்ப அமைப்புகளைச்
சுதைச் சிற்பங்கள், கல் சிற்பங்கள்
என இரண்டாகப்
பிரிக்கலாம்.
இவைகளில் சுதைச் சிற்பங்கள் கோயில் விமானத்தின்
தளங்களில் இடம்பெற்றன. சுதைச் சிற்பங்கள்
இடம்பெறும்
விமானங்களின்
உயரத்தைச் சுருக்கியும் கோபுரங்களின்
உயரத்தைக் கூட்டியும் இவர்கள் அமைத்ததால்
சுதைச்
சிற்பங்களைக் கோபுரங்களில்
அதிக அளவில் காணலாம்.
கற்சிற்பங்கள் பெரும்பாலும்
மண்டபங்களில் தூண்களை ஒட்டி
ஆளுயரச் சிற்பங்களாக
அமைக்கப்பட்டன. இவை தவிரத்
தூண்களின் சதுரப் பகுதிகளிலும்
கற்சிற்பங்கள்
இடம்பெற்றன.
|