2.3 கட்டுமானக் கோயில் சிற்பங்கள்

பாண்டிய நாட்டில் குடைவரைக் கோயில் மரபு கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. ஆனால் கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதலே கட்டுமானக் கோயில்களும் கட்டப்பட்டன. பல்லவர்கள் மென்மையான மணற்கற்களைக் கட்டுமானக் கோயில்கள் கட்டப் பயன்படுத்தினர் ஆனால் பாண்டியர்கள் தம் குடைவரைக் கோயில்களுக்குக் கருங்கற் பாறைகளைத் தேர்ந்தெடுத்தது போலவே கட்டுமானக் கோயில்களுக்கும் உறுதியான கருங்கற்களைப் பயன்படுத்தினர்.

பாண்டியர்களின் பெரும்பாலான கோயில்களில் கூரையின் மேற்பகுதி செங்கற்களால் கட்டப்பட்டதால் அவற்றில் இருந்த சிற்பங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. சில கோயில்கள் மட்டும் முழுமையாகக் கற்களினால் கட்டப்பட்டமையால் அவற்றில் உள்ள சிற்பங்களை மட்டும் காணலாம். பெரும்பாலான கோயில்கள்பெரும் மாற்றத்திற்கும் உட்பட்டுள்ளன. மேலும் தேவ கோட்டங்களிலும் சிற்பங்களை அமைக்கவில்லை. எனவே கட்டுமானக் கோயில் சிற்பங்கள் அதிகம் கிடைக்கவில்லை.
2.3.1 திருவாலீசுவரர் கோயில் சிற்பங்கள்

திருவாலீசுவரர் கோயில் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வரும் கோயிலாகும். இது திருநெல்வேலி மாவட்டம் மன்னார் கோயில் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது. பாண்டியரது சிற்பக்கலைத் திறனின் உறைவிடமாக இக்கோயில் அமைந்துள்ளது. விமான கிரீவத்தில் கிழக்கே இந்திரன், மேற்கே யோக நரசிம்மர், தெற்கே தட்சிணா மூர்த்தி, வடக்கே பிரம்மா ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் தளத்தில் இலிங்கோத்பவர், கஜ சம்ஹாரர், கங்காதர மூர்த்தி, நடராசர், ரிஷபாந்திகர், அர்த்த நாரீசுவரர், திரிபுராந்தகர், பிட்சாடனர், சண்டேச அனுக்கிரக மூர்த்தி, நந்தி அனுக்கிரக மூர்த்தி ஆகிய சிவனது பல திருக்கோலங்களைக் காணலாம்.
2.3.2 திருப்பத்தூர்க் கோயில் சிற்பங்கள்

இக்கோயில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். இதன் விமானப் பகுதியில் கொடுங்கையில் உள்ள கூடுகளில் சிறிய வடிவிலான கலை நுணுக்கத்துடன் கூடிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை ரிஷப வாகனர், அர்த்த நாரி, புள்ளின் வாய் கீண்ட கண்ணன், குடக்கூத்தாடும் கண்ணன், காளிங்க நடனம், கேசி என்னும் குதிரை வடிவ அசுரனை வதம் செய்தல் ஆகியவை ஆகும்.