3.0 பாட முன்னுரை

    இசை மிடற்றிசை, கருவியிசை என இருவகைப்படும். குரலால் பாடப்படுவது மிடற்றிசையாகும். கருவிகளால் இசைக்கப்படுவது கருவி இசையாகும். இசையை இசைப்பதற்கும், இசைக்கு மேலும் செறிவூட்டவும் இக் கருவிகள் பயன்படுகின்றன. இசைக்கு மேலும் செறிவூட்டும் வகையில் அமையும் பொழுது இவற்றைத் துணைக்கருவிகள் என்பர். இசையில் பல புதிய பாணிகள் தோன்றுவதற்கு இசைக் கருவிகளே துணை புரிந்துள்ளன. ஐந்நூற்றிற்கும் மலோக இசைக் கருவிகள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் சுமார் இரு நூற்றைம்பது இசைக் கருவிகள் தமிழகத்தில் உள்ளன. இத்தகைய இசைக்கருவிகளை இசைக்கும், தரத்திற்கும் ஏற்ப வகைப்படுதியுள்ளனர்.இவற்றைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என்று வகைப்படுத்துவர்.

    தொன்மை மிகு காலம் முதல் இசைவளம் நிரம்பியவர்களாகத் தமிழர்கள் விளங்கினர். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இசை முக்கியமானதோர் இடத்தைப் பெற்றிருந்தது. பொழுதுபோக்கு நிலையில் இது தொடங்கினாலும் வாழ்வின் அங்கமாக வளர்ந்தது. சமுதாய விழாக்களிலும், ஆலய வழிபாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

    தமிழர் வாழ்வோடு மிக நெருங்கிய இசையாக மங்கல இசை விளங்குகிறது. இதன் பெயர்க்காரணம், இவ்விசைக் குழுவின் அமைப்பு, இவ்விசைக் குழுவில் முக்கியக் கருவியாக விளங்கும் நாகசுரம், தவில் ஆகிய கருவிகளின் அமைப்பு, ஆலய வழிபாட்டில் இவைகளின் பங்கு, புகழ்பெற்ற கலைஞர்கள் முதலியவை பற்றி இப்பாடம் நமக்குப் புகட்டுகிறது.