4.5 புகழ்வாய்ந்த கீர்த்தனையாளர்

    கீர்த்தனைகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது அது சொல்லும் பொருளும் அப்பொருளை இனிதாக உணர்த்தும் இசைப்போக்கும் (tune/melody) ஆகும். இந்த வகையில் பொருள் பொதிந்த இசைப்பாடல்களை, உணர்வைத் தூண்டி எழுப்பும் அருமையான மெட்டுகளில், பாடித்தந்த சில கீர்த்தனையாளர்கள் பற்றி இப்பொழுது சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

4.5.1 ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் (1700 - 1765)

    ஏராளமான கீர்த்தனைகளை இசையோடு இயற்றிப் பாடியவர் ஊத்துக்காடு வெங்கடசுப்பய்யர்.

"அலைபாயுதே கண்ணா - உன்
ஆனந்த மோகன வேணுகானமதில்
நிலைபெயராது சிலைபோலவே நின்று
நேரமாவதயறியாமலே வெகுவிநோதமான
முரளிதற என்மனம்"

கானடா இராகத்திலான வெங்கடசுப்பையரின் இப்பாடலைக் கேட்டுச் சுவைக்காதவர் யாரேனும் உண்டா?

  • பிறந்த ஊரும் பெற்றோரும்

    தஞ்சை மாவட்டத்தில் ஊத்துக்காடு என்பது ஒரு சிற்றூர். இங்கு முத்துகிருஷ்ணய்யருக்கும் செங்கமலம் அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார் வெங்கடசுப்பய்யர். இவர் குடும்பத்தோரின் குலதெய்வம் கண்ணபெருமான். குடும்பத்தோர் அனைவரும் கண்ணனை இசையால் உருகிப் பாடுவதை வாழ்வின் பெரும் பேறாகக் கொண்டு வாழ்ந்தனர்.

  • ஞானகுரு கண்ணன்

    இந்தச் சூழலில் வாழ்ந்த வெங்கடசுப்பய்யரும் இளமையிலேயே கண்ணனைத் தன் ஞானகுருவாக ஏற்றார். கண்ணனையே நினைத்துப் பல கீர்த்தனைகள் பாடினார்.

  • இவர் கீர்த்தனைகளின் சிறப்பு

    இவரது கீர்த்தனைகளின் சிறப்பு அவற்றின் மத்தியமகால பாடல் பகுதியாகும். அதாவது கீர்த்தனையின் இடையில் சொற்கள் அடுக்கி வந்து அவற்றின் இசை நடையும் விரைவாக இருக்கும். பாடலின் இடையே வரும்

     சொற்கட்டுகள், சுரக்கோர்வைகள் ஆகியன திச்ர (மூன்று), சதுச்ர (நான்கு), கண்ட (ஐந்து) போன்ற தாள நடை அமைப்புகளைக் கொண்டு அழகாக அமைந்திருக்கும்.

  • இவர்தம் புகழ்பெற்ற பாடல்கள்

    இவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பல கீர்த்தனைகள் இயற்றினார். கண்ணனைக் குழந்தையாகவும் காதலனாகவும் கற்பனை செய்து பாடினார். இவரது புகழ்பெற்ற சில கீர்த்தனைகளை இப்பொழுது பார்ப்போமா?

  பாடல் இராகம் தாளம்
1. அலைபாயுதே கண்ணா ... கானடா ... ஆதி
2. ஆடாது அசங்காது வா ... மத்யமாவதி ... ஆதி
3. புல்லாய்ப் பிறவி ... செஞ்சுருட்டி ... ஆதி
4. பால்வடியும் முகம் ... நாட்டைக்குறிஞ்சி ... ஆதி

4.5.2 கனம் கிருஷ்ணய்யர் (1790-1854)

    கருநாடக இசையில் கனம், நயம், தேசியம் என்ற மூன்று வகைப்பாடு முறைகள் உண்டு. இவற்றில் கனம் என்ற பாடுமுறையில் நல்ல தேர்ச்சி பெற்றார் கிருஷ்ணய்யர். அதனால் கனம் கிருஷ்ணய்யர் என்று அழைக்கப்பட்டார்.

பல்லவி

"வேலவரே உமைத் தேடி ஒரு மடந்தை
விடியுமளவு காத்திருக்கிற வகை என்ன"

    புகழ்பெற்ற இந்த பைரவி இராகப் பாடலை இயற்றினார் கனம் கிருஷ்ணய்யர். இது போன்ற பல தமிழ்ப் பாடல்களால் தமிழிசைக்குப் பெருமை சேர்த்தவர் கிருஷ்ணய்யர்.

  • பிறப்பும் பெற்றோரும்

    இவர் திருச்சிராப்பள்ளியில் திருக்குன்றம் என்னும் ஊரில் பிறந்தார். இராமசாமி ஐயர் இவரது தந்தையார். கிருஷ்ணய்யர் தமிழிலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார்.

  • இசைத்திறன்

    இளம் வயதிலிருந்தே புதிய புதிய பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடினார். அருமையான குரல் வளமும் இசை ஞான முதிர்ச்சியும் பெற்ற கிருஷ்ணய்யருக்குச் சான்றோர்கள் தொடர்பும் ஆதரவும் கிடைத்தன. ஆதலால் தெய்வங்கள் மேல் பாடுவதோடு தம்மை ஆதரித்த பெரியவர்களைப் புகழ்ந்தும் பாடினார். இவர் சில காலம் மராத்திய மன்னன் அமரசிம்ம இராசாவின் அரசவை இசை வித்வானாக இருந்தார்.

    பல மாணவர்கள் கனம் கிருஷ்ணய்யரிடம் இசை பயின்றனர்.

  • புகழ்பெற்ற கீர்த்தனைகள்

    கனம் கிருஷ்ணய்யர் இயற்றிய சில புகழ்பெற்ற கீர்த்தனைகளின் விவரங்களை இங்கே காணலாம்.

பாடல் இராகம் தாளம்
திருவொற்றியூர் தியாகராஜன்... அடாணா... ரூபகம்
வேலவரே... பைரவி... ஆதி
பாரெங்கும் பார்த்தாலும்... கல்யாணி... ஆதி
நல்ல நல்ல நிலவு... சங்கராபரணம்... ஆதி
பதறி வருகுது... காம்போதி... ஆதி

4.5.3 கவிகுஞ்சர பாரதி (1810 - 1896)

"இவன் யாரோ அறியேனே - சகியே
யாதொன்றும் தெரியேனே"

காம்போதி இராகத்திலான இப்பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இதை இயற்றியவர் கவிகுஞ்சர பாரதியார். இவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நல்ல புலமை பெற்றவர்.

  • பிறப்பும் இசைச்சிறப்பும்

    இவர் இராமநாதபுரத்திலுள்ள பெருங்கரை என்னும் ஊரில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கோடீசுவரன். சிவகங்கை மன்னர் இவரது இயலிசைத் திறனை மெச்சிக் "கவிகுஞ்சரம்" என்ற சிறப்புப் பெயரை வழங்கினார். இதுவே பின்னர் கவிகுஞ்சர பாரதி ஆகியது.

    கவிகுஞ்சர பாரதியார் பேரின்பக் கீர்த்தனைகள் பாடினார். ஸ்கந்த புராணக் கீர்த்தனைகள் பாடினார். வேங்கைக் கும்மி பாடினார். இவற்றோடு அழகர் குறவஞ்சி என்னும் இசை நாடகமும் படைத்தார்.

    ‘அழகர் குறவஞ்சி’ இசை நாடகத்தில் 25-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் உள்ளன. இவை தோடி, கல்யாணி, கரகரப்பிரியா பைரவி, அடாணா, சகானா முதலிய இராகங்களில் உள்ளன. இந்துஸ்தானி இசைச் சாயலுடைய பெஹாக், சாரங்கா ஆகிய இராகங்களிலும் கவிகுஞ்சர பாரதியார் கீர்த்தனைகள் பாடினார்.

  • புகழ் பெற்ற பாடல்கள்

    புகழ் பெற்ற இவரது பாடல்களின் விவரங்களை இங்கே காணலாம்.

பாடல் இராகம் தாளம்
இவனாரோ... காம்போதி... மிச்ரசாபு
இனிமேல் அவருக்கும்... பைரவி... சாபு
வன்கொடுமை பெஹாக் ஆதி
கோலமிகும் செங்கண்... சாரங்கா... ஆதி
அங்குலியமிட்ட கரம்... எதுகுல காம்போதி ஆதி