4.6 கோபாலகிருஷ்ண பாரதியார் (1810-1896)

 

    தமிழக இசை வரலாற்றின் பொற்காலமாகிய கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் பல மொழிகளால் இசை வளமெய்தியது. பலர் தத்தம் மொழிப் புலமையால் தெலுங்குக் கீர்த்தனைகள் பாடினர். சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் பாடினர். தமிழில் கீர்த்தனைகள் பாடினர்.

    தமிழக மக்களின் தாய்மொழி தமிழ். இந்நிலையில் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் தமிழிசையால் தமிழகமெங்கும் இறை உணர்வை வளர்த்தார்,

    இசை மேதை கோபாலகிருஷ்ண பாரதியார். இவரது இசைப் பின்னணி மற்றும் இசைப் பணி பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வது நன்று.

    இக்கால இசை, நாட்டிய அரங்குகளில் அடிக்கடி கேட்கும் ஒரு கீர்த்தனையின் பல்லவியை முதலில் கேட்போமா?

நடனம் ஆடினார் வெகு நாகரிகமாகவே
கனக சபையில் ஆனந்த - நடனம்

வசந்தா ராகக் கீர்த்தனை இது. கண்டசாபு தாளத்தில் அமைந்திருக்கிறது. இக் கீர்த்தனையை இயற்றியவர் கோபாலகிருஷ்ண பாரதியார்.

    இவர் சிவபெருமான் மேல் அளவில்லாத பக்தி கொண்டவர். தமிழில் பல கீர்த்தனைகளைச் சிவனைப் போற்றிப் பாடியுள்ளார். ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ என்ற இசை நாடகத்தை இயற்றிப் பாடினார். இசையால் இறை உணர்வைத் தமிழகமெங்கும் பரப்பினார்.

4.6.1 பிறப்பிடமும் வாழ்விடமும்

    நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ளது நரிமணம் என்னும் ஒரு சிற்றூர். இந்த ஊரில் கோபாலகிருஷ்ண பாரதியார் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் இராமசுவாமி பாரதி. அந்தண குலத்தவர். இக்குடும்பத்தினர் தொடக்கத்தில் முடிகொண்டான் என்னும் ஊரில் வாழ்ந்தனர். பின்னர் ஆனைதாண்டவபுரம் என்னும் ஊரில் வாழ்ந்தனர். இதனால் கோபாலகிருஷ்ண பாரதியாரை முடிகொண்டான் பாரதி என்று அழைத்தனர். ஆனைதாண்டவபுரம் பாரதி என்றும் அழைத்தனர்.

4.6.2 இசைப் பின்னணி

    கோபாலகிருஷ்ண பாரதியார் குடும்பம் ஓர் இசைப் பரம்பரைக் குடும்பம். இதனால் பாரதியாருக்கு இயல்பாகவே இசையில் அதிக நாட்டம் இருந்தது. அவர் காலத்தில் பழக்கத்திலிருந்த இசைப் பாடல்களைப் பாடிப் பழகினார். கருநாடக இசை முறையில் சிறந்து விளங்கினார். தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றார். தாமாகவே புதிய கீர்த்தனைகள் இயற்றினார்.

    இவர் காலத்தில் மராத்திய மன்னர் குலத்தைச் சேர்ந்த அமரசிம்ம மகாராஜா திருவிடைமருதூரில் ஆட்சி செய்தார். இவர் ராமதாஸ் என்னும் ஒர் இந்துஸ்தானி இசை மேதையை ஆதரித்தார். இவரிடம் இந்துஸ்தானி இசை பயின்றார் கோபாலகிருஷ்ண பாரதி. இக்கால கட்டத்தில் இந்துஸ்தானி இசை தமிழகத்திற்குப் புதிது. கோபாலகிருஷ்ண பாரதியார் இந்துஸ்தானி இசை இராக நுட்பங்களை நன்கு தெரிந்து கொண்டார். அவற்றைக் கருநாடக இசை முறைக்கு ஏற்பத் தமது கீர்த்தனைகளில் பயன்படுத்தினார்.

4.6.3 பெரியோர்களின் தொடர்பு

    பாரதியாருக்கு இயல் இசைப் புலமைமிக்க பல பெரியோர்களின் நட்பும் அன்பும் கிடைத்தது. அமரசிம்ம மகாராசாவின் அரசவை இசைப் புலவர் கனம் கிருஷ்ணய்யர் பாரதியாரின் இசைப் புலமையைப் பாராட்டிச் சில பாடல்கள் கற்றுக் கொடுத்தார். வைணவ இசைவாணர் அனந்த பாரதியார், சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் பாடிய மாயூரம் வேதநாயகம்பிள்ளை, சிதம்பர நடராசர் மேல் கீர்த்தனைகள் பாடிய சிதம்பர சிவசங்கர தீட்சிதர், இசை மேதைகள் இராமசாமி சிவன், மகா வைத்தியநாதய்யர் ஆகியோர் பாரதியாருடன் நெருங்கிப் பழகிய அன்பர்களாவர். இவர்களிடையே இசை மற்றும் இயல் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் அடிக்கடி நடைபெறும். இதனால் பாரதியாரின் இசைப் புலமையும் கற்பனை வளமும் நன்கு விருத்தியடைந்தன.

4.6.4 தில்லைநடராசர் மீதான கீர்த்தனை

    சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகையரைப் பாரதியார் ஒரு தடவை பார்க்கச் சென்றார். அந்த நேரத்தில் தியாகையரின் "ஸ்ரீராமஸீதா" என்ற கீர்த்தனையை அவரது மாணவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஆபோகி இராகத்தில் அமைந்த கீர்த்தனை. அதுவரை பாரதியார் ஆபோகி இராகத்தில் கீர்த்தனை எதுவும் இயற்றவில்லை. எனவே உடனடியாகக் சிதம்பர நடராசர் மீது ஆபோகி இராகத்தில் அருமையான ஒரு கீர்த்தனை பாடினார். இது பாரதியாருடைய மிகப் புகழ்பெற்ற கீர்த்தனைகளில் ஒன்று. அதைக் கேட்டுச் சுவைக்க விரும்புகிறீர்களா? இதோ அதன் பல்லவி, அநு பல்லவிப் பகுதிகளைக் கேட்டுப் பார்க்கலாமே!

இராகம் : ஆபோகி தாளம் - ரூபகம்

பல்லவி

சபாபதிக்கு வேறு தெய்வம்
சமானம் ஆகுமா - தில்லை

அநுபல்லவி

கிருபா நிதி இவரைப் போலக்
கிடைக்குமோ இத்தரணி தன்னிலே

(சபாபதி)

  • பஞ்சரத்தின கீர்த்தனைகள்

    தியாகையர் பஞ்சரத்தின கீர்த்தனைகளை ஐந்து இராகங்களில் பாடினார். இக்கீர்த்தனைகளை இன்றளவும் தியாகையருடைய ஆராதனை விழாவின் போது இசைத் தொண்டர்கள் பாடுகிறார்கள். கோபாலகிருஷ்ண பாரதியாரும் தியாகையரைப் போல் அதே ஐந்து இராகங்களில் பஞ்சரத்தின கீர்த்தனைகள் இயற்றினார். அவற்றின் விவரங்களைத் தெரிந்து கொள்வோமா?

  பாடல் இராகம் தாளம்
1. அரகரசிவ சங்கர... நாட்டை ... ரூபகம்
2. சரணாகதியென்று... கௌள.... ஆதி
3. பிறவாத வரந்தாரும்... ஆரபி... ஆதி
4. ஆடிய பாதமே கதி... வராளி ஆதி
5. மறவாமல் எப்படியும்... ஸ்ரீராகம் ஆதி

    பாரதியாரின் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் சிவனைப் போற்றும் சிவபக்தி நிறைந்த பாடல்களாகும்.

4.6.5 பிற இசைப் படைப்புகள்

    கோபாலகிருஷ்ண பாரதியார் ஏராளமான சைப்பாடல்கள் இயற்றினார். சிவபெருமான் மேல் பல கீர்த்தனைகளைப் பாடினார். கல்யாண காலங்களில் பாடுவதற்கு ஏற்ற நலுங்குப் பாடல்கள் பாடினார். ஊஞ்சல் பாட்டு, லாலிப் பாட்டு, கும்மிப் பாட்டு, கோலாட்டப் பாட்டு எனப் பல வகைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

  • தொண்டர் வாழ்க்கை இசைக்கதையாகியது

    சிவத் தொண்டர்களின் வாழ்க்கையை இசைக் கதையாகக் கீர்த்தனைகளால் பாடினார். திருநீலகண்டநாயனார், இயற்பகை நாயனார், காரைக்கால் அம்மையார், நந்தனார் ஆகியோரது சரித்திரங்களை எளிமையான கீர்த்தனைகளில் பாடினார். இவற்றில் "நந்தனார் சரித்திரக் கீர்த்தனை" மிகப் புகழ்பெற்றது.

4.6.6 நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

    கோபால கிருஷ்ண பாரதியார் இயற்றிய "நந்தனார் சரித்திரக் கீர்த்தனை" பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் நந்தனாரின் கதையை நாம் அறிய வேண்டும் அல்லவா? சுருக்கமாக நந்தனார் கதையை இப்போது பார்க்கலாமா?

  • நந்தனார் கதை

    சோழ நாட்டில் ஆதனூர் என்று ஒரு சிற்றூர். இவ்வூரில் புலைப்பாடியில் நந்தனார் பிறந்தார். பிறப்பு எப்படியாயினும் நந்தனார் சிவபெருமான் மேல் அதிக பக்தியோடு வாழ்ந்தார்.

    நந்தனார் ஓர் அந்தணரின் பண்ணை ஆளாக வேலை செய்தார். எப்பொழுதும் சிவனை நினைத்து வாழ்ந்த நந்தனார் சிதம்பரம் போக விரும்பினார். பார்ப்பவரிடமெல்லாம், "நாளை போவேன், நாளை போவேன்" என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். இதனால் இவரை "நாளைப் போவார்" என்றும் அழைத்தனர்.

    ஆனால் சிதம்பரம் போய் வர அந்தணர் அனுமதி கொடுக்கவில்லை. வயலில் அறுவடை முடிந்த பின் போகலாம் எனக் காலங்கடத்தினார். இறைவனைக் காணத்துடித்த நந்தனார் உள்ளம் இறைவன் அறியாததா?

    அதிசயம் நிகழ்ந்தது. என்ன அதிசயம்?... மறுநாளே நெற்கதிர்கள் அறுவடைக்குத் தயாராக விளைந்திருந்தன. அந்தணர் அதிசயித்தார். நந்தனாரின் சிவபக்தியின் உயர்வை உணர்ந்தார். சிதம்பரம் போக அனுமதி கொடுத்தார்.

பக்தி மேலிடச் சிதம்பரம் சென்றார் நந்தனார். அங்குள்ள அந்தணர்களாகிய கோயில் தீட்சிதர்கள் அவரை வரவேற்றனர். நடேசப் பெருமானின் திருநடனக் காட்சியைக் கண்குளிரக் கண்டார் நந்தனார். அப்படியே ஒளி வெள்ளத்தில் மூழ்கினார். பேரானந்தப் பேறு பெற்றார.்

    இத்தகைய பேறு பெற்ற நந்தனார் அறுபத்துமூன்று சைவ நாயன்மாரில் ஒருவராக மதித்துப் போற்றப்படுகிறார்.

  • நந்தனார் கதையின் வடிவமாற்றம்

    கதாகாலட்சேபம் என்பது ஒரு வகைக் கலை. அதாவது ஒரு கதையை இனிய பாடல்களால் பாடி விளக்கிச் சொல்லும் ஒரு கலை. இது ‘ஹரிகதா’ என்றும் சொல்லப்படும்.

கோபாலகிருஷ்ண பாரதியார் இக்கலை முறையைப் பயன்படுத்தினார். நந்தனாரின் கதையை இசைப் பாடல்களால் இயற்றினார். இயற்றிய கீர்த்தனைகளைக் கவர்ச்சியான மெட்டுகளில் அமைத்தார். நந்தனார் கதையைக் கீர்த்தனைகளில் பாடி மக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். நந்தன் கதையில் வரும் ஒவ்வொரு பாடலும் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்தது. பட்டி தொட்டிகளிலெல்லாம் நந்தனார் கீர்த்தனைகள் பரவின. இதோ கேளுங்கள் ஓரிரு பாடல்களின் சில பகுதிகளை:

1) பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது
பேரின்ப மன்றுளே

             (நந்தனார் பாடுகிறார்)

2) மார்கழி மாதம் திருவாதிரை நாள்
வரப்போகுது ஐயே

             (நந்தனார் பாடுகிறார்)

3) அரகர சிவ சிவ அம்பலவாணா
தில்லை அம்பல தேசிக நாதா

            (நந்தனார் பாடுகிறார்)

  • நந்தனார் கீர்த்தனைகளின் புகழ்

    கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்திலேயே அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை நூலாக வெளிவந்தது. பிரெஞ்சு அலுவலர் சீசையா முயற்சியால் கி.பி. 1848 இல் இந்நூல் வெளியானது.

    பிற்காலத்தில் நாடகக் கலைஞர்கள் நந்தனார் கீர்த்தனைகளை மேடைகளில் பாடினர். திரைப்படம் வாயிலாகவும் இக்கீர்த்தனைகள் புகழ்பெற்றன. கே.பி. சுந்தராம்பாள், எம்.எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் திரைப்படங்களில் நந்தனாராக நடித்துக் கீர்த்தனைகளைத் தாமே பாடினர்.

4.6.7 தமிழிசைத் தொண்டு

    இறைவனை இசையால் பாடித் துதிப்பதையே தம் வாழ்க்கையின் பயனாக வாழ்ந்து காட்டினார் கோபாலகிருஷ்ணர். இறுதி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். சிவ வழிபாட்டில் சிறிதும் பிழைபடாது சீலமுடையவராக வாழ்ந்தார்.

    கோபாலகிருஷ்ண பாரதியாரின் மாசற்ற தொண்டினால் தமிழிசை வளம்பெற்றது. நாட்டில் பக்தி நெறி தழைத்தது.

     இவர் மறைந்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றும் அவரது கீர்த்தனைகள் அழியாப் புகழோடு தமிழ் மக்களிடையே பயிலப்படுகின்றன. மனதைச் சிவ உணர்வில் உருக வைக்கும் அவரது கீர்த்தனை ஒன்றை இப்பொழுது கேட்போமா?

இராகம் : தேவகாந்தாரி தாளம்: ஆதி

பல்லவி

எந்நேரமும் உந்தன் சந்திதியிலே நான்
இருக்க வேண்டும் ஐயா - பொன்னையா

அநுபல்லவி

தென்னஞ்சோலை தழைக்கும் தென் புலியூர்
பொன்னம்பலத்து அரசே என் அரசே
                 (எந்நேரமும்)

சரணம்

சிவ மருவும் தெருவும் திருக்கூட்டமும்
தேவருலகில் கிடையாத அதிசயமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவிக் கொண்டு
                 (எந்நேரமும்)

இராகம் : கருநாடக தேவகந்தாரி தாளம்: ஆதி

பல்லவி

எப்படிப்பாடினரோ? எப்படிப்பாடினரோ?
அடியார் அப்படிப்பாட நான் ஆசைகொண்டேன் சிவமே

அநுபல்லவி

அப்பரும் சுந்தரரும் ஆளுடையப் பிள்ளையும்
அருள்மணி வாசகரும் பொருளணர்ந்து உன்னையே
                 (எப்படி)

சரணம்

குருமணி சங்கரரும் தாயுமாணவரும்
அருணகிரி நாதரும் அருள்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கன்னித்தமிழ்ச் சொல்லினால் இனிதுனை அனுதினமும்                 

4.6.8 புகழ் பெற்ற கீர்த்தனைகள்

    கோபாலகிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைகள் எளிமையானவை. கருத்தாழம் மிக்கவை. இனிய இசை நயமுடையவை. இயல்பாக இறை உணர்வைத் தூண்டுபவை. இக்காரணங்களால் இவரது பல கீர்த்தனைகள் பிரபலமடைந்தன.

    இசை அரங்கு, பரத நாட்டிய அரங்கு, பஜனை ஆகிய நிகழ்ச்சிகளில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் இன்றளவும் இடம்பெறுகின்றன. சில பிரபலமான கீர்த்தனைகளின் விவரங்களைக் காண்போமா?

பாடல் இராகம் தாளம்
அரகரசிவ சங்கர...... நாட்டை.... ரூபகம்
அறிவுடையோர்..... சக்ரவாகம்... ஜம்பை
ஆடியதாண்டவம்...... பிலஹரி.... சாபு
எப்போ வருவாரோ..... கமாஸ்.... ஆதி
கனகசபாபதிக்கு.... அடாணா.... ரூபகம்
சிவலோக...... நாதநாமக்கிரியா ரூபகம்
தில்லைச் சிதம்பரம்.... பூர்வகல்யாணி சாபு
நடனமாடினார்..... வசந்தா.... கண்டசாபு
சபாபதிக்கு..... ஆபோகி.... ரூபகம்