3.1 தற்கால நாடக முன்னோடிகள்

     19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடக உள்ளடக்கத்தில் ஒரு     மாற்றம் ஏற்பட்டது. புராணக்     கதைகளையும் பழங்கதைகளையும்     விட்டுத் தற்காலக் கதையொன்றை நாடகமாக்கும் முயற்சி தோன்றியது.

3.1.1 காசி விசுவநாத முதலியார்

காசி விசுவநாத முதலியார் (1872) முதன்முதலில் தம் காலச் சமூக நிகழ்வை நாடகமாக்கினார். அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு உண்மையான டம்பாச்சாரியின் வாழ்க்கையைத் தழுவி ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகம் ஆக்கப்பட்டது. ஆயினும் இசை நாடகமாகவே அது படைக்கப்பட்டது. அங்கம், களம் என்ற பகுப்புகளின்றி ஒரே மூச்சாகக் கதை சொல்லப்பட்டது. அக்கால மரபுப்படி கட்டியங்காரன் கதை நிகழ்த்துவது போலவும் அமைக்கப்பட்டது. இந்த நாடகத்தின் கதை, கண்ணகி கதை போன்றது. விறலிவிடுதூதுவிலும் இத்தகைய கதை உண்டு. செல்வந்தன் ஒருவன் தாசியுடன் கொள்ளும் உறவால் தன் மதிப்பை இழந்து பின் மனம் திருந்தி நல்வழிப்படுவதாகக் கதை அமைந்துள்ளது.

3.1.2 ராமசாமி ராஜு

     இதே கதையமைப்பில் ராமசாமி ராஜு என்பவர் ‘பிரதாப சந்திர விலாசம்’ என்ற நாடகத்தை எழுதினார். ஆனால் காட்சி, அங்கம் என்ற பகுப்புடன் நாடகம் எழுதப்பட்டது. முதல் காட்சியில் மட்டும் கட்டியங்காரன் வருவான். டம்பாச்சாரி விலாசம் போல இசை நாடகமாக இல்லாமல் இசையும் வசனமும் கலந்து     இந்நாடகம் படைக்கப்பட்டது. இதில் நாடகப் பாத்திரங்கள்,     தெலுங்கர்களானால்     தெலுங்கிலும் வடநாட்டவரானால் உருதுவிலும் மற்றவர் அவரவர் படிப்பு சாதி சமூகப்படிநிலை இவற்றிற்கேற்பப் பேசும் வேறுபட்ட பாணிகளில் வசனம் எழுதப்பட்டிருக்கிறது.

     இசை     நாடக மரபின் இறுதியாக டம்பாச்சாரி விலாசத்தையும் வசன நாடகங்களின் தொடக்கமாகப் பிரதாப சந்திர விலாசத்தையும் கொள்ள வேண்டும். காசி விசுவநாதன், அரசு அதிகாரியாக இருந்தவர். ராமசாமி ராஜு , பாரிஸ்டராக இருந்தவர். இவர்களுடைய முயற்சி, படித்துப் பல்வேறு வேலைகளில் இருந்தவர்களை நாடகம் எழுதத்தூண்டியது எனலாம்.

3.1.3 பார்சி நாடகத்தாக்கம்

     1870 இல் தமிழகத்திற்கு வந்த பார்சி நாடகக்குழு ஏற்படுத்திய மாற்றமும் குறிப்பிடத்தக்கது. மேடை நாடக மரபில் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. பார்சி இனத்தைச் சார்ந்த வணிகர்கள், ஆங்கில நாடக அரங்கிலிருந்து பெற்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலேயருக்காகவும் மத்தியதர வர்க்கத்துப் படித்த இந்தியர்களுக்காகவும் நாடகங்களை நடத்தினர். பம்மலாரின் வழிகாட்டி என்று சொல்லப்படும் தஞ்சை கோவிந்தசாமி ராவ், அரசு வேலையை உதறிவிட்டுப் பார்சி நாடக, பாணியில் நாடகங்களை நடத்தத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து ‘சுகுன விலாச சபை’ போன்ற பயில்முறை நாடகக் குழுக்கள் உருவாயின.

3.1.4 சங்கரதாஸ் சுவாமிகள்

    தமிழ் நாடக மரபைப் பின்பற்றியும் கால மாற்றங்களை ஏற்றும் நாடகம் படைத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். இசையை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உள்வாங்கி இவர் நாடகங்களைப் படைத்தார். பழங்கதைகளில் குறைவான நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களின் தர்க்கத்திற்கு இடமளித்து இவர் நாடகங்களை ஆக்கினார். சிறுவர்களைக் கொண்ட ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடகக்குழுவை இவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல குழுக்கள் உருவாயின.

     ஆட்டம், இசை, சிறிதளவு வசனம் என்று இருந்த தெருக்கூத்து நாடகங்களின் தன்மையிலிருந்து ஆட்டத்தின் ஆதிக்கத்தை நீக்கி மேடையில் நடத்தியவர் சங்கரதாஸ் சுவாமிகள். கற்பனைச் சிறப்பும் சந்தநயம் மிக்கதுமான பாடல்களை இவர் படைத்தார். நடிகர்கள் விருப்பம் போல் வசனங்களைப் பேசிவந்த நிலையை மாற்றி வரையறுத்த நாடகப் பிரதிகளை உருவாக்கினார். பழைய இலக்கிய வரிகளையும் வசனத்தில் பயன்படுத்தினார்; நல்ல அறிவுரைகளை வழங்கினார். ஆனாலும் இவரது நாடகங்களிலும் பாடல்களின் ஆதிக்கம் இருந்தது. இவர் பல புராண நாடகங்களையும், வரலாற்று நாடகங்களையும் எழுதியிருக்கிறார். 1914 இல் இவர் தோற்றுவித்த சமரச சன்மார்க்க நாடக சபை மூலம் நல்ல நாடகப் பிரதிகளை உருவாக்கினார். தமிழகத்தில் இருந்த பல நாடக நடிகர்கள் இவரது நாடக வசனங்களையே பேசி வந்ததால், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நாடகத்தில் நடிக்க முடிந்தது. இவருடைய நாடகங்கள் இன்று அச்சில் கிடைக்கின்றன.

3.1.5 பம்மல் சம்பந்த முதலியார்

     பம்மல் சம்பந்த முதலியார் அரங்க அமைப்பிலும் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். நம்ப முடியாத நிகழ்ச்சிகளை நீக்கி நாடகங்களைப் படைத்தார். இவரால், பேசும் மரபு சார்ந்து இயல்பான வழக்குமொழி நாடகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒழுங்கு, நேரக் கட்டுப்பாடு முதலானவற்றை இவர் வலியுறுத்தினார். 1891 இல் சுகுண விலாச சபை என்னும் பயில்முறை நாடகக் குழுவை இவர் உருவாக்கினார். பயில்முறை நாடகக் குழு என்பதால் பல பணிகளில் உள்ளவர்களைக் கொண்டு நாடகங்களை நடத்தினார். இவருடைய நாடகங்கள் அனைத்தும் அச்சாகி நூல்களாக வெளிவந்துள்ளன. புராணம் வரலாறு என்பதோடு சமூக நாடகங்களையும் இவர் படைத்து நிகழ்த்தினார்.

    எதிர்க்கதை நாடகம் என்ற வகையையும் இவர் உருவாக்கியிருக்கிறார். அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என்று பொய்யே பேசுகிற ஒருவன் பற்றியதாக மாற்றினார். மொழிபெயர்ப்பு நாடகங்களையும் இவர் படைத்திருக்கிறார்.