3.3 தற்கால நாடகக் கலை குறித்த சிந்தனை வளர்ச்சி

    நாடக நிகழ்த்துமுறை, உள்ளடக்கம் ஆகியன குறித்துப் பல சிந்தனைகள் உருவாயின. புதிதாக நாடக இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. இச்சிந்தனை வளர்ச்சி நாடகக்கலை வளர்ச்சியை உந்தியது.

3.3.1 நிகழ்த்துமுறை

    தற்கால நாடகத்தின் முதற்கட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தவர்கள் தஞ்சை கோவிந்தசாமி ராவ், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் முதலானோர். நாடகவியல் குறித்துப் பலரும் சிந்தித்திருக்கிறார்கள். தமிழின் தற்கால இலக்கிய முன்னோடியான பாரதி, நாடகம் பற்றியும் கருத்துக் கொண்டிருந்தார். இது குறித்துப் பாரதிதாசன் ஒரு பாடலில்,

“ஒரு நாள் பாரதியார் நண்பரோடும் உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார் அங்கே ஒரு மன்னர் விஷமருந்தி மயக்கத்தாலே இருந்த இடந்தனிலிருந்தே எழுந்துலாவி என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே வருகுதையோ எனும் பாட்டைப் பாடலானான் வாய்பதைத்துப் பாரதியார் கூறுகின்றார் வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா? என்றார் தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம். சரிதானே! பாரதியார் சொன்ன வார்த்தை”.

என்று குறிப்பிட்டிருக்கிறார். நாடக நிகழ்த்து முறை குறித்துப் பாரதியார் கொண்டிருந்த விமரிசனம் இது. உணர்விற்கேற்ற நடிப்பு வெளிப்பாடு இல்லை என்ற விமரிசனம் பாரதியாருக்கு இருந்திருக்கிறது என்பதும் பாரதிதாசனுக்கும் அதே விமரிசனம் இருந்திருக்கிறது     என்பதும்     புலப்படுகிறது. பாரதியார் “எப்போதோ     கடல்கொண்ட கபாடபுரத்தில் நாடகம் இருந்ததென்று பழைய நூல்கள் நாலைந்து பெயர்களைச் சொல்லி கொண்டிருப்பதில் பயனில்லை. நாடகம் தற்காலத்திற்கேற்றவாறு விறுவிறுப்பாக அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். நிகழ்த்துமுறை குறித்த இந்த விமரிசனத்தின் பெருக்கத்தை இன்று காண முடிகிறது.

3.3.2 உள்ளடக்கம்

    நாடக உள்ளடக்கங்களின் தன்மை குறித்தும் கருத்துகள் உள்ளன. நாடக மேடை, பாமர மக்களின் பல்கலைக்கழகம் என்றார் சரோசினிதேவி. தந்தை பெரியார், ”ஆயிரம் மேடைகளில் சொற்பொழிவு ஆற்றி ஏற்படும் பலனை ஒரு நாளிரவு நாடகத்தின் மூலம் மக்களிடம் உண்டாக்கலாம்” என்றார்.

3.3.3 இலக்கண நூல்கள்

     நாடக இலக்கண நூல்களும் புதிதாக எழுதப்பட்டன. பரிதிமாற்கலைஞர், விபுலானந்தஅடிகள், பார்த்தசாரதி, பம்மல் சம்பந்த முதலியார், ஒளவை தி.க.சண்முகம், எஸ்.வி. சகஸ்ரநாமம், நாரணதுரைக்கண்ணன், கு.சா. கிருஷ்ணமூர்த்தி, அஸ்வ கோஷ், மு.ராமசாமி, கா. சிவத்தம்பி, அண்ணாமலை, மு.தங்கராசு, இரா.குமரவேலன்,     சக்திபெருமாள்,     சே.இராமாநுஜம், ந. முத்துசாமி,     வெ.சாமிநாதன்,     கே.எஸ்.ராஜேந்திரன் முதலானோரின் நூல்கள் குறிப்பிடத்தக்கன.

          1897 இல் பரிதிமாற் கலைஞர் நாடகவியல் நூலை வெளியிட்டார். அதில், அவர் தமிழ் மரபு, வடமொழி மரபு, மேனாட்டு மரபு முதலான நாடகங்களை ஆராய்ந்து நாடக இலக்கணத்தைச்     செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். 272 நூற்பாக்களில் நாடக வகைகள் நாடகம் எழுதும் முறை, நடிப்பு விளக்கம், பாத்திர இயல்பு முதலான செய்திகளை அமைத்துள்ளார். மேடையடைப்புப் பற்றியும் நடத்துநர் பற்றியும் கூறியுள்ளார். பார்த்தசாரதி ‘தமிழ் நாடகமேடைச் சீர்திருத்தம்’ (1931), ‘நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி’ (1936) ஆகிய இரு நூல்களைப் படைத்துள்ளார். விபுலானந்த அடிகளின் ‘மதங்க சூளாமணி’ என்ற நூல் 1976 இல் வெளிவந்தது. உறுப்பியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல் என மூன்று இயல்களாக இவர் நாடக இலக்கணத்தைக் கூறியுள்ளார். தமிழ்நாடகங்களையும்     ஆங்கில மொழி     பெயர்ப்பு நாடகங்களையும் ஒப்பிட்டு இவர் எழுதியுள்ளார்.

          பம்மல் சம்பந்தனார் நாடகத்தமிழ் (1962) என்ற நூலில் அவர் எழுதிய காலம் வரையுள்ள நாடக இலக்கணக் கருத்துகளையும்     நாடக நூல்களையும் தாம் கண்ட நாடகங்களையும் கொண்டு நாடக இயல்புகள் குறித்துக் கூறியுள்ளார்; நாடகக்குழுக்கள் பற்றியும் கூறியுள்ளார்; தமிழ் நாடகங்கள் வடமொழி நாடகங்களிலிருந்து வேறுபடுதல் பற்றியும் ஆய்ந்துள்ளார். இவருடைய ‘நாடக மேடை நினைவுகள்’, ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்’ முதலான நூல்களும் குறிப்பிடத்தக்கன.

          சண்முகம் ‘நாடகக் கலை’ என்ற நூலில் தமிழ் நாடக வரலாற்றையும் நடிப்புக்கலை குறித்தும் நாடகத்தில் பிரச்சாரம் குறித்தும் கூறியுள்ளார். எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் ‘நாடகக் கலையின் வரலாறு’ நாரண துரைக்கண்ணனின் ‘தமிழில் நாடகம்’, கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழ் நாடக வரலாறு’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. மேலகரம் முத்துராமன் என்பவர் நாடக இலக்கணத்தைப் பாட்டில் எழுதியுள்ளார். அங்கவியல், அரங்கவியல், அமைப்பியல், அழகியல், நடிப்பியல், பாட்டியல், இணைப்பியல் என ஏழு இயல்களில் எளிமையாக நாடகம் குறித்து விளக்கியுள்ளார்.