3.5 இக்கால நாடக வகைகள்

     வேத்தியல் பொதுவியலாக இருந்த நாடகம், கோயில்களில் தஞ்சமடைந்து பின் தெருக்கூத்தாக இருந்து பார்சி நாடக வருகையால் மறு எழுச்சி பெற்றுப் புராணம், வரலாறு, சமூகம் என்ற வகைகளைப் பெற்று மேடையில் வளர்ந்தது. அதன்பின் நாடகம் படிப்பதற்கும், கேட்பதற்கும், உரியதாயிற்று. பதிவு செய்யப்பட்டுத் திரைப்படம் போலத் தொலைகாட்சியில் ஒளிபரப்பப் படுவதாகவும் அது ஆயிற்று.

3.5.1 மேடை நாடகம்

     மேடை நாடகங்கள் தொழில் முறைக் குழுக்களாலும் பயில்முறைக் குழுக்களாலும் நாடக இயக்கங்களாலும் நிகழ்த்தப் பெறுகின்றன. மன்றம், அகாதமி, சபா, கிளப் முதலான பல பெயர்களில் நாடகக்குழுக்கள் செயல்படுகின்றன. புராணம், வரலாறு என்பதை விடச் சமூக நாடகங்களே மேடையில் மிகுதியாக நிகழ்த்தப்பெறுகின்றன. சபாக்களின் உருவாக்கத்தால் நுகர்வோரைத் தேட வேண்டிய தேவை குறைந்துவிட்டது. ஆனாலும் சமூக நாடகங்களிலும் நகைச்சுவை நாடகங்களே மேடையில் மிகுதியாக இடம்பெறுகின்றன என்பது இன்றைய நிலை.

     இதுவரையான மேடைக் குழுக்களில் குறிப்பிடத்தக்கவை டி.கே.எஸ். குழு, சேவா ஸ்டேஜ், ஆர்.எஸ்.மனோகர் குழு, ஹெரான் ராமசாமி குழு, சோ குழு, பாலச்சந்தர் குழு, காத்தாடி ராமமூர்த்தி குழு, எஸ்.வி.சேகர் குழு, கிரேஸிமோகன் குழு முதலானவை எனலாம். இவர்களால் பல்வேறு வகையான நாடகங்கள்     மேடையேற்றப்பெற்றிருக்கின்றன. குடும்பம், அலுவலகம், அரசியல், சமூக நடைமுறை, பண்பாடு, சீர்திருத்தம் என உள்ளடக்கங்களைக் கொண்ட நாடகங்கள் இவர்களால் நடத்தப்பட்டன.

  • சமூக நாடகம்

     நடுத்தர வர்க்கத்தினரின் உணர்வுகளும் மதிப்பீடுகளும் சமூக நாடகங்களில் வெளிப்பட்டன. வரதட்சணைக் கொடுமை, பொருந்தா மணக்கொடுமை, ஆடம்பரத் திருமணங்களால் வரும் சிக்கல்கள், குடும்ப உறவுச்சிக்கல்கள், போலித்தனங்கள், பெண்களின் நிலை என்று குடும்பம் சார்ந்த நிகழ்வுகள் நாடகங்களாக்கப்பட்டன. அலுவலகங்களின் நடைமுறைகள், அலுவலகங்களின் சீர்கேடுகள், அரசியல் நடைமுறைகள், அரசியல் சீர்கேடுகள் முதலானவையும் சாதி எதிர்ப்பு, பொருளியல் மேம்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம், கிராமப்புறப் பிரச்சினைகள், சமூகத்திற்கு அறிவுரைகள் எனப் பல வகையான நாடகங்கள் படைக்கப்பட்டன.

  • புராண நாடகம்

     புராண நாடகங்களில் மகாபாரதம், இராமாயணம் சார்ந்த கதைகள், இந்து இசுலாமியம் கிறித்துவம் முதலான மதங்களின் கருத்துகளை     விளக்கும்     நாடகங்கள்,     நாட்டுப்புறத் தெய்வங்களைப் பற்றிய நாடகங்கள், தத்துவ விளக்க நாடகங்கள் என்று படைக்கப்பட்டன.

  • வரலாற்று நாடகம்

     வரலாற்று நாடகங்களில் உண்மை வரலாறும் கற்பனை வரலாறும் இடம்பெற்றன. சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் வரலாறுகள் பற்றியும் நாயக்கர் வரலாறு பற்றியும் புலவர்கள் சமயப் பெரியார்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன.

  • அங்கத நாடகம்

     அங்கதம் என்பது தவறுகளைக் கண்டு எள்ளி நகையாடிச் சிந்திக்கவைக்கும் உத்தி. தவறுகளைத் திருத்தும் தன்மை மறைமுகமாக இதில் அடங்கியிருக்கிறது. அங்கத நாடகம் எழுதுபவர்கள் சமூகத்தை நன்கு அலசி ஆராய்ந்து அதில் காணும் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். அங்கத நாடகத்தின் நோக்கம் நகைச்சுவையை உருவாக்குவது அல்ல. சிந்தனையைத்தூண்டுவதுதான் நோக்கம். பம்மல் சம்பந்த முதலியார் சிறந்த அங்கத நாடக ஆசிரியர் எனலாம். அவருடைய அங்கதக் குறிப்புகள் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டுவன. அவருடைய ‘சபாபதி’ நாடகத்தில் இளைஞர்களின் போக்கை எள்ளி நகையாடுவதுடன் பல்வேறு தரப்பினரின் போக்குகளின் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றம், நாடகமன்றம், திரைப்படம் என எல்லாவற்றையுமே விமரிசனம் செய்கிறார். இதேபோலத் திராவிட இயக்க நாடகங்களில் வெளிப்பட்ட அங்கத விமரிசனங்களும் கவனத்திற்குரியவை. ஆரியர்களைச் சித்திரிக்கும் தன்மையிலும் மூடநம்பிக்கைகளைக் கேலிசெய்யும் தன்மையிலும் அங்கதம் வெளிப்படுத்தப்படுகிறது.

     ‘சோ’வை சிறந்த அங்கத நாடகப் படைப்பாளர் எனலாம். அவர் படைத்த ‘முகமது பின் துக்ளக்’, ‘யாருக்கும் வெட்கமில்லை’, ’சம்பவாமி யுகே யுகே’, ‘மனம் ஒரு குரங்கு’ முதலானவை சிறந்த அங்கதப் படைப்புகள். டாக்டர் கோரா படைத்த ‘கண்ணகியா மாதவி’, ‘பெண்சாதி’, ‘தன்மானமா’,‘யார் கண்டது’ முதலான நாடகங்களும் நல்ல அங்கதப் படைப்புகள். பெண்ணுரிமையையும் கற்பு நிலையையும் குறித்த விமரிசனமாக இவை அமைந்துள்ளன. கோமல் சுவாமிநாதனின் நாடகங்களும் ஆறு     அழகப்பனின்     நாடகங்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. ஆறுஅழகப்பன் ‘எள்ளல் நாடகங்கள்’ என்ற தலைப்பிலேயே ஐந்து நாடகங்களைப் படைத்திருக்கிறார். அவை சோம்பலையும் போலித்தனத்தையும் கண்டிக்கும் தன்மையில் அமைந்துள்ளன.     ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’, ‘காலங்காலமாக,’ ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘சுவரொட்டிகள்’ முதலானவற்றைச் சிறந்த நவீன அங்கத நாடகங்கள் எனலாம். சோதனை     நாடகங்கள்     பலவற்றில் அங்கதத்தன்மை சிறந்திருக்கிறது.

     மக்களுக்கு நன்கு அறிமுகமான கதைகளை மறுவாசிப்புச் செய்யும் முறையில் படைக்கப்பட்ட அங்கத நாடகங்களும் குறிப்பிடத்தக்கன.     என்.எஸ்.கிருஷ்ணனின்     ‘கிந்தனார்’ எம்.ஆர்.ராதாவின் ‘கீமாயணம்’,சம்பந்த முதலியாரின் ‘சந்திரஹரி’ முதலான நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

  • பொழுதுபோக்கு நாடகங்கள்

     தமிழ்     நாடக மேடையைப் பொறுத்த அளவில் பொழுதுபோக்கு நாடகங்களையே நிகழ்த்தி வருகின்றன எனலாம். தேசிய இயக்கத்தினர், திராவிட இயக்கத்தினர், சோதனை     நாடகக்குழுக்கள்,     வீதி நாடகக்குழுக்கள் முதலானவர்களுடைய நாடகங்கள் தவிர ஏனைய பெரும்பாலும் பொழுதுபோக்கு நாடகங்களே எனலாம். உளவியல் அரசியல் நாடகங்களிலும்     மொழிபெயர்ப்பு     நாடகங்களிலும் பொழுதுபோக்குத் தன்மை இல்லை எனலாம்.

     வரலாறு புராணம் சமூகம் என்று எந்த வகை நாடகமானாலும் நுகர்வோருக்குச் சலிப்பு ஏற்படாத வகையில் வாய்பாடு போல அரங்கம், மேடை அலங்காரம் ஒளி ஒப்பனை, வசனம், பாடல் என்பதோடு வழக்கமாக அன்றாடம் பார்க்கும் பாத்திரங்கள், அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகள் இவற்றைக் கொண்டு இந்நாடகங்கள் படைக்கப்படுகின்றன. ஆன்மிகம், பழிவாங்குதல், புகழைத்தேடுதல், பணத்தைத்தேடுதல், தியாகம், உறவுக்கு ஏங்குதல், காதல், குற்ற உணர்ச்சி, நோய், கர்வம், திமிரை அடக்குதல், நட்பு இப்படி நமக்குப் பழக்கமானவற்றையே முன்வைக்கின்றன. பழைய நாட்களில் கோவிந்தசாமிராவ், கன்னையா, சங்கரதாஸ் சுவாமிகள், சம்பந்த முதலியார், நவாப்ராஜமாணிக்கம் முதலானோரின் நாடகங்கள் இவ்வகையின என்றே சொல்லலாம். அவர்கள் காலத்து விடுதலைப் போராட்டம் பற்றி இவர்கள் நாடகம் நடத்தாதது ஒன்றே இதற்குச் சான்று எனலாம். வரதராசன், பூரணம் விசுவநாதன், வி.எஸ், ராகவன், பாலசந்தர், ஆர்,எஸ்,மனோகர், ஹெரான்ராமசாமி, மௌலி, சுஜாதா, அரு. ராமநாதன், பி.எஸ்.ராமையா, மாயாவி இவர்கள் படைத்த     நிகழ்த்திய நாடகங்களும் இத்தன்மையினவே. சபாக்களும் இத்தகைய நாடகங்களையே ஆதரிக்கின்றன. மசாலா போல எல்லா உணர்வுகளையும் இடம்பெறச் செய்யும் கதைகளும் வசனங்களும் இப் படைப்புகளில் உள்ளன. துப்பறியும் நாடகங்களும் இவ்வகையில் அடங்குவன.

     வானொலி, தொலைக்காட்சி முதலானவற்றின் நாடகங்களும் பொழுதுபோக்கு நாடகங்களே. படிப்பதற்காக எழுதப்படுகிற நாடகங்களில் இப்பொழுதுபோக்குத் தன்மை குறைவு எனலாம். ஒரு குறிப்பிட்ட சிக்கலை மையப்படுத்தியே படிக்கும் நாடகங்கள் எழுதப்படுகின்றன.

  • நகைச்சுவை நாடகம்

     நகைச்சுவை நாடகங்களின் முதன்மையான நோக்கம் சிரிக்க வைப்பதுதான்.     கேலியும்     கிண்டலுமாக நிகழ்ச்சிகளும் பாத்திரங்களும் படைக்கப்படுவது இவற்றின் தன்மை எனலாம். சம்பந்த முதலியார் நாடகங்களில் சதிசக்தி, வைகுண்ட வைத்தியர், சங்கீதப் பைத்தியம், சோம்பேறி சகுனம் பார்த்தது, ஸ்திரி ராஜ்யம் முதலானவற்றில் மக்களின் போலி வாழ்வை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையை உருவாக்கியுள்ளார். மனைவிக்கு அஞ்சும் கணவன், ஆடு மேய்ப்பவனின் மடத்தனம் என அவர் பாத்திரங்களைப் படைத்து நகைச்சுவையை உருவாக்குகிறார்.

     குறிப்பாகப் பயில்முறை நாடகக் குழுவினர் இத்தகைய நகைச்சுவை     நாடகங்கயையே     தங்கள்     கலையாக ஆக்கிக்கொண்டார்கள்     எனலாம். காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேஸி மோகன் முதலானவர்களின் நாடகங்கள் நகைச்சுவையையே நோக்கமாகக் கொண்டவை. நகைச்சுவையான தலைப்புகள், ஆங்கிலம் கலந்த உரையாடல், மிதமிஞ்சிய கேலி கிண்டல் என்பது இவர்களது நாடகங்களின் தன்மை எனலாம். நடிப்பு என்பது கூட இவர்களுக்கு முக்கியமல்ல. மேடையில் இரண்டு மூன்று பேர் நின்று கொண்டு சிரிக்கவைக்கும் வண்ணம் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒய்ப் ஃபர்ஸ்ட் டியுடி நெக்ஸ்ட், ஒன்மோர் எக்ஸார்சிஸ்ட், கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்றும் மதராஸ் நல்ல மதராஸ், மீசையானாலும் மனைவி, பிரசிடென்ட் மாமி என்றெல்லாம் தலைப்பு வத்துக்கொண்டார்கள். கொச்சை மொழி, இரட்டை அர்த்த வசனம், உறவு முறைக்குரிய மரியாதை தராமல் பேசுதல், வரம்பு கடந்து யாரையும் கேலிசெய்தல்     என்பவற்றைக்கொண்டு     நகைச்சுவையை உருவாக்குகிறார்கள்.     சூடான பிரச்சினைகளைக் கூட நகைச்சுவையான செய்தியாக்குவது இவர்கள் பாணி எனலாம்.

3.5.2 கவிதை நாடகம்

     இன்று உரைநடை நாடகங்கள் மிகுதி எனினும் சிலர் கவிதை நாடகங்களையும் படைக்கிறார்கள். பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடக வகைகளும் கவிதை நாடகங்கள் என்பது இங்கு நினைத்தற்குரியது பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதல் வரலாற்று நாடகத்தைக் கவிதையில் தான் எழுதினார். பரிதிமாற் கலைஞரின் மானவிஜயம் கவிதை நாடகமே. காமஞ்சரி, காமினி, சாகுந்தலம், நெருஞ்சி மலர், மங்கையர் பகட்டு முதலான நாடகங்கள் தழுவல் கவிதை நாடகங்கள். சமூக நாடகங்கள் கவிதையில் எழுதப்படுவது குறைவு. பெரும்பாலும் வரலாற்று நாடகங்களும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களுமே கவிதை நாடகங்களில் மிகுதி எனலாம். நாயக்கர் வரலாறு குறித்து நா. கனகராசு ஐயரின் மறைந்த மாநகர், சி.எஸ். முத்துசாமி ஐயரின் விசுவநாதம் ஆகியவையும் ராஜாதேசிங்கு பற்றிய நாடகமும் குறிப்பிடத்தக்கன. இலக்கிய அடிப்படையில் எழுதப்பட்டவற்றுள் அனிச்ச அடி, கரிகால் வளவன், அணைகடந்த வெள்ளம், நெடுமான் அஞ்சி, வள்ளல் பேகன், சங்க கால வள்ளல்கள், கரிகால் வளவன், அன்னி மிஞிலி, இமயத்தில் நாம் முதலான நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.     சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான இலக்கியங்களின் அடிப்படையில் கவிதை நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் படிப்பதற்காக எழுதப்பட்டவை.

3.5.3 வானொலி நாடகம்

     வானொலி நிலையம் உருவானபின் கேட்கும் நாடகங்கள் உருவானதை நாம் அறிவோம். ஒலியை மட்டும் நம்பி நடத்தப்படுவதால் வானொலி நாடகங்களில் வசனங்களுக்கு முக்கிய இடம் உண்டு. எல்லாமே வசனம் மூலமும் இசை மூலமும்தான் வெளிப்படுத்தப்பட வேண்டும். வானொலி நாடகங்கள் கால்மணி, அரைமணி, ஒருமணி, தொடர் என்று ஒலி பரப்பப்படுகின்றன. தொழிலாளர் நிகழ்ச்சி, கிராமிய நிகழ்ச்சி, சிறுவர் நிகழ்ச்சி முதலானவற்றின் வாயிலாகவும் அரசின் திட்டங்களைப்     பிரச்சாரம்     செய்யவும்     இவை பயன்படுத்தப்படுகின்றன.     அகில இந்திய     அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிமாற்றம் செய்யப்படும் நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன. மைய அரசின் சாதனமாக இருக்கும் வானொலியில் மட்டுமே நாடகங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. மற்ற தனியார் வானொலிகளில் நாடக ஒலிபரப்பு இல்லை. அரசு சாதனம் என்பதால் அரசு ஒப்புகிற கட்டுப்பாடான சில செய்திகளை மட்டுமே இந்நாடகங்களில் சொல்ல முடியும்.

3.5.4 தொலைக்காட்சி நாடகம்

     தொலைக்காட்சி வந்த பின்பு முதலில் மேடை நாடகங்களை அப்படியே ஒளிப்பதிவு செய்து காட்டி வந்தார்கள். பின்னர் மேடை நாடகக் குழுக்களைக் கொண்டு படப்பிடிப்பு மூலம் ஒளிப்பதிவு செய்து நாடகங்களை     ஒளிபரப்பினார்கள். இந்தியிலிருந்து நாடகத்தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தமிழில் ஒளிபரப்பப்பட்டன. செயற்கைக்கோள் தொலைக்காட்சி, தனியார் நிறுவனமாக வந்த பின்பு பல தொடர்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகின்றனர். மேடை நாடகத் தன்மையிலிருந்து ஓரளவு மாறுபட்டுத் திரைப்படத்தன்மையைத் தொலைக்காட்சி நாடகங்கள் பெற்றுவிட்டன. அதனால் இதனைச் சின்னத்திரை என்றே     அழைப்பார்கள். குடும்பப் பொழுதுபோக்காகத் தொலைக்காட்சி நாடகங்கள் ஆகிவிட்டன.     அதனால் திரைப்படத் தன்மை இவற்றில் மிகுந்துவிட்டது. அண்மைக்காட்சி, சேய்மைக்காட்சி, உட்புறக்காட்சி, வெளிப்புறக்காட்சி, பாடல்கள், ஆடல், பின்னணி இசை, வசனங்கள், ஒப்பனை என்று திரைப்படப் பாணியில் இவை அமைந்து வருகின்றன.

     தொலைகாட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பப்படுவதால் ஒவ்வொரு தொடரிலும் உச்சக்காட்சியைக் கொண்டிருப்பது இவற்றின் இயல்பாகி விட்டது. திடீர்த்திருப்பங்களும் பாத்திர வளர்ச்சியில் ஏற்ற இறக்கமும் அண்மைக் காட்சிகளும் சவால் வசனங்களும்     மிகையுருக்கக்     கண்ணீர்க்காட்சிகளும் சொன்னதையே வேறுவகையில் சொல்லிக் கொண்டிருக்கும் உரையாடல்களுமாகத்     தொலைக்காட்சி     நாடகங்கள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலான தொடர்களில் பெண்களுக்கு அதிக இடம் தரப்பட்டாலும் அழுகையையும் மாமியார் மருமகள் சண்டைகளையும் பிற பெண்களுடனான மோதல்களையும் கொடுமைகளுக்கு ஆட்படுவதைக் காட்டுவதற்குமே இதனைப் பயன்படுத்துகின்றனர். தீய பாத்திரங்களின் ஆதிக்கத்தையும் புலப்படுத்தும் கதைகளே மிகுதியாக ஒளிபரப்பாகின்றன. காட்சி ஊடகம் என்பதால் காட்சி மூலம் நிறைய செய்திகளைச் சொல்லலாம். ஆனால் தொலைக்காட்சி நாடகங்களில் வசன ஆதிக்கம் நிலவுகிறது. பஞ்சு திணிப்பது போல நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் திணிப்பதும் காணப்படுகிறது.

     குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் பணக்காரர் முதல் ஏழைகள் வரையும் இதன் நுகர்வோர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் இதன் நுகர்வோர்கள் எனலாம். இதனால் தொலைக்காட்சித் தொடர்களில் நடுத்தர வர்க்கத்தினரை ஈர்க்கும் தன்மைக்கு அழுத்தம் தரப்படுகிறது. தொலைக்காட்சிக்கென்று     சின்னத்திரை     நடிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் தயாரிப்பாளர்கள் தொழில்     நுட்பக்கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். திரைப்படத் துறையினரும் இதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.