4.1 பரத நாட்டியம்

    ‘நாட்டியம்’ என்ற சொல் ‘ஆடல்’ என்னும் பொருளைத் தரும். ப,ர,த என்ற மூன்று எழுத்துகள் தனித்தனி மூன்று பொருளைத் தரும். இதோ பாருங்கள் இந்த விளக்கத்தை:

‘ப’ என்னும் எழுத்து :

பாவகம் (Bhaava/ expression of emotions)

‘ர’ என்னும் எழுத்து : ராகம் (Raagam)
‘த’ என்னும் எழுத்து : தாளம் (Thaalam)

ஆக பாவகம், இராகம், தாளம் ஆகிய மூன்றும் (ப+ர+த) சேர்ந்து பரத என்று ஆகிறது. பரத நாட்டியம் என்னும் பொழுது பாவ ராக தாளம் ஆகிய மூன்று தன்மைகளும் ஆடலோடு சேர்கின்றன. எனவே இசையும் தாளமும் அபிநயமும் சேர்ந்த நாட்டியம் "பரதநாட்டியம்" ஆகிறது.

4.1.1 பழமையான கலை

பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை "கூத்து" என்று அழைத்தனர். ஆடல், நாட்டியம், நாடகம் என்றும் சொன்னார்கள். இது பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.

கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் "கூத்தர்". அவர் தம் பெண்பாலார் " கூத்தியர்" இவர்களில் சிலர், விறலியர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் ஆடிப் பாடி அபிநயங்கள் செய்து பழந்தமிழக மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தனர். பரிசாகப் பொன்னும் பொருளும் பெற்று வாழ்ந்தனர்.

4.1.2 மாதவியின் பதினொரு வகை ஆடல்கள்

    ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் சிறந்த மகளிர் மன்னர் சபையில் ஆடினர். சான்றாகச் "சிலப்பதிகாரம்" கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியம். இந் நூலில் ஆடல் நங்கை மாதவி பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். இவள் நாட்டிய நன்னூல் கூறும் விதிகளுக்கு அமைய ஆடலை நன்கு பயின்றவள். ஆடலிலும், அழகிலும் சிறந்தவள். வலது கால் முன் வைத்து ஆடல் அரங்கு ஏறினாள். பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, தண்ணுமை என்னும் மத்தள இசை, கைத்தாள இசை ஆகிய ஐந்து வகை இசையும் சேர்ந்தது. இசைக்கு ஏற்ப மாதவி பதினொரு வகை ஆடல்களை ஆடினாள்.

சிவனாகவும், முருகனாகவும், கண்ணனாகவும் ஆடினாள். இன்னும் மன்மதன், அயிராணி, திருமகள், கொற்றவை ஆகியோராகவும் ஆடினாள். ஒவ்வொரு கதாபாத்திரம் போல் ஆடை, அலங்காரங்கள் அணிந்து அழகாக ஆடினாள்.

அரங்கேற்றத்தில் மாதவி ஆடிய பதினொரு நிகழ்ச்சிகள் யாவை? அவை எந்தெந்தக் கதாபாத்திரங்களுக்குரிய ஆடல்? இவை பற்றித் தெரிந்து கொள்வோமா?

ஆடல் நிகழ்ச்சி கதாபாத்திரத் தோற்றம்

அல்லியம் குடக்கூத்து மல்லாடல்

மாயவன் / கண்ணன்

கொடுகொட்டி பாண்டரங்கம்

சிவ பெருமான்

குடைக்கூத்து துடிக்கூத்து

முருகன் / ஆறுமுகன்
பேடிக்கூத்து மன்மதன் / காமன்
கடையக்கூத்து அயிராணி / இந்திராணி
மரக்கால் கூத்து கொற்றவை
பாவைக் கூத்து திருமகள்

மாதவிக்கு மன்னன் 1008 கழஞ்சு பொன் பரிசாகக் கொடுத்ததோடு. "தலைக்கோலி" என்னும் உயர்ந்த பட்டத்தையும் அளித்தான்.

4.1.3 கோயிலும் நாட்டியமும்

கோயில்களில் ஆடலும் பாடலும் இடம் பெறுவது தமிழர் சமய மரபு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜசோழன் தஞ்சையில் "ஸ்ரீராஜராஜேஸ்வரம்" என்னும் பெரிய கோயிலைக் கட்டினான். இக்கோயிலில் ஆடலும் பாடலும் சிறப்பாக நிகழ ஏற்பாடு செய்தான்.

தமிழகமெங்கும் ஆங்காங்கிருந்த கோயில்களில் மகளிர் ஆடல் தொண்டு செய்தனர்.     அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்தான் சோழமன்னன. மொத்தம் நானூறு ஆடல் மகளிரைத் தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடற் பணி செய்ய வைத்தான். கோயில் சுற்று வீதியில் அவர்களுக்குத் தனித்தனி வீட்டைக் கொடுத்துப் பொருளையும் கொடுத்தான். அத்துடன் உணவையும் அளிக்க ஏற்பாடு செய்தான்.

இவர்களை முறையாகப் பயிற்றுவிக்க நாட்டிய ஆசான்கள் இருந்தனர். பக்க இசை பாடவும் கருவி இசை வழங்கவும் கலைஞர்கள் இருந்தனர். கோயில்களில் கலைத் தொண்டு சிறப்பாக வளர்ந்தது.

இத்தகைய கோயில் பணி, காலம் காலமாகத் தொடர்ந்து நடைபெற மன்னன் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான். இதனால் தமிழகத்தில் நாட்டியப் பரம்பரை முறையாகத் தொடர்ந்தது. காலப் போக்கில் இக்கலை வடிவம் தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர், பரதநாட்டியம் என்று அழைக்கப்பட்டது.

4.1.4 பரதநாட்டியமும் தஞ்சை நால்வரும்

சின்னையா,     பொன்னையா, சிவானந்தம், வடிவேலு     ஆகியோர் தஞ்சை     நால்வர்     என்று அழைக்கப்படுவர். இந்த நால்வரும் சகோதரர்கள். கி.பி.19 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் பிறந்து வாழ்ந்தவர்கள். நாட்டியக் கலையிலும் இசைக் கலையிலும் வல்லவர்கள்.      கோயில்களிலும் அரண்மனைகளிலும் ஆடியநிகழ்ச்சிகளைப் பொது மேடைக்குரிய நிகழ்ச்சிகளாக ஆக்கியவர்கள். இவர்கள் தஞ்சை மராத்திய மன்னர், திருவனந்தபுரம் மகாராஜா, மைசூர் மகாராஜா ஆகியோரின் ஆதரவைப் பெற்றவர்கள். அதனால் மேடை நாட்டிய முறை இந்தியாவின் தென்மாநிலங்களில் எளிதாகப் பரவியது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவை தென் மாநிலங்களில் பயன்படுத்தப்படுகின்ற மொழிகள். இவ்வெல்லா     மொழிப் பாடல்களும்     மேடை     நாட்டிய நிகழ்ச்சிகளில் இடம் பெற்றன. இது இக்கலைவடிவத்தின் ஒரு     சிறப்பு அம்சமாகும். தஞ்சை      நால்வர் நெறிப்படுத்திய ஆடல் முறைகளும், நிகழ்ச்சிகளும் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன.