2.5 திறனாய்வாளனின் தகுதிகள்
திறனாய்வாளன், படைப்பாளியைவிடவும், வாசகனைவிடவும்
பொறுப்பாகச் செயல்பட வேண்டியவன் எனவே, அதற்கு
அவனுக்குச் சில தகுதிகள் தேவை.
2.5.1 தெளிவும் திறனும்
ஆங்கிலத் திறனாய்வாளர் டி.எஸ்.எலியட், திறனாய்வாளன்,
தன்னுடைய அணுகுமுறையிலும், நோக்கத்திலும் சரியான கண்ணோட்டம் கொண்டிருக்க
வேண்டும் என்று அதேபோது, தான் சொல்லுவதில் குழப்பமற்ற நிலையும் தெளிவும்
இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். சரியான பார்வை - சரியான
நோக்கம் - தெளிவான நடையின் அடையாளங்கள். இன்று திறனாய்வில்
புதிய கோட்பாடுகள்
பல வந்திருக்கின்றன. அமைப்பியல், பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம்
முதலியன அவை. மேலும் அதற்கு முன்னால் மிகைநடப்பியல், குறியீட்டியல்,
உளவியல் முதலிய இசங்களும் அல்லது இலக்கியச் செல்நெறிகளும் வந்தன.
இவையெல்லாம் மேலை நாட்டிலிருந்து
வந்தவை. இவற்றைத் தமிழ்த் திறனாய்வாளர்கள்
படித்தறிந்து தமிழுக்குக் கொண்டுவர முயலுகிறார்கள். தமிழ் இலக்கியங்கேளாடு
பொருந்திவைத்துப் பார்க்க முயலுகிறார்கள். ஆனால் மேலை நாட்டு் மரபுகளைச்
சரிவரப் புரிந்து கொள்ளாத போதும், இங்குள்ள சூழல்கள் அந்தக் கருத்துக்களுக்குச்
சரிவரப் பொருந்தி நிற்காததாலும் இந்தத் திறனாய்வுகள் குழம்பி நிற்கின்றன.
உதாரணமாக, அண்மைக்காலம் வரை ஆங்கில மரபாகிய image என்ற கலைச்சொல்லுக்கு
உருவகம், படிமம், குறியீடு என்று மாறிமாறிப் பொருள் உரைக்கப்பட்டது.
இதைவிடத் தெளிவற்ற நிலை, flash back (பின்னோக்கு உத்தி) மற்றும்
stream of cousciousness (நனவோடை உத்தி) என்ற இரண்டையும் விளக்குவதில்
இருந்தது - இன்னும் கூட இருக்கிறது. நனவோடை, முக்கியமாகப் பகுப்பியல்
உளவியலாளராகிய சிக்மண்ட் ஃபிராய்டு விளக்கிய அடிமனம் பற்றிய கருத்து
நிலையைச் சேர்ந்தது. அதனைப் புரிந்து கொள்ளாதபோது, நனவோடையைப் பற்றிய
விளக்கமும் தெளிவற்றுப் போய்விடும். இதுபோலவே அமைப்பியல் பற்றித்
தமிழில் எழுதிய பலர், அதனை விளக்குவதற்குப் பதிலாகக் குழப்பியிருக்கிறார்கள்.

சிக்மண்ட் ஃபிராய்டு
திறனாய்வின் அணுகுமுறையிலும் அதனைச் சொல்லுவதிலும்
தெளிவு இல்லாதபோது, அதற்கு ஆட்படுகிற படைப்பிலக்கியமும்
பெரும் குழப்பத்துக்காளாகிறது. பின்னை நவீனத்துவம் (Post
Modernism) என்ற கொள்கையை அடியொற்றி எழுதுவதாக
முனைந்த சில தமிழ் நாவல்கள் தெளிவற்றுப் போனதைச்
சமீபகாலத்தில் தமிழில் பார்க்கமுடிகிறது.
எனவே, திறனாய்வாளன், தன்னுடைய கருத்துகளைச்
சொல்லுவதில் தெளிவும் திறனும் உடையவனாக இருக்க
வேண்டும். அப்படியானால் தான் அவனுடைய கருத்துகள்
வாசகரையடைய முடியும். பரவலான தாக்கத்தை ஏற்படுத்த
முடியும். திறனாய்வு தன்னுடைய பாணியைச் செய்ய முடியும்.
2.5.2 சமூகப் பொறுப்பு
ஒரு படைப்பாளி, தனிமனிதனாக இருந்து எழுதினாலும்,
இந்தச் சமூகத்தில் தோன்றிய ஒரு சமூக மனிதன், அவன்.
அவனுடைய எழுத்துகள் சமூகத்தை நோக்கிப் போகின்றன.
அந்தச் சமூகத்தில் ஏதேனும் ஒரு சலனத்தை அல்லது
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே படைப்பாளிக்கு ஒரு
சமூகப்பொறுப்பு இருக்கிறது. அதுபோலவேதான், திறனாய்வுக்கும்
இருக்கிறது.
திறனாய்வு, குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தைத் தளமாகக்
கொண்டு செய்யப்படுகிறதென்றாலும், உண்மையில், இலக்கியம்
சார்ந்த ஒரு சமூகத்தளத்தை அது தனது தளமாகக் கொண்டு
விளக்குகிறது. இலக்கிய அழகு, செய்ந்நேர்த்தி மட்டுமல்லாமல்,
இலக்கியம் கூறுகின்ற மனித வாழ்க்கையனுபவங்களையும் மனித
சமூக மதிப்புகள் அல்லது விழுமியங்களையும் திறனாய்வு
ஆராய்ந்து சொல்லுவதால் அதற்கு சமூக உறவுகளும்
தாக்கங்களும் இயல்பாகவே இருக்கின்றன. திறனாய்வு வாசகரை
நோக்கிச் செல்கிறது. படிக்கிற பலரைத் திறனாய்வு சிந்திக்க
வைக்கிறது; அவர்களிடம் தாக்கம் ஏற்படுத்துகிறது.
திறனாய்வு இலக்கியத்துக்குள் மட்டும் நிற்பதில்லை.
பல சமூகவியல் கோட்பாடுகளையும், பல அரசியல் - பண்பாட்டுக் கோட்பாடுகளையும்
அது கொண்டிருக்கிறது ; அவை பற்றியெல்லாம் பேசுகின்றது. எனவே சமூக
அக்கறை இருக்கிறது என்று பொருளாகிறது. அப்படியானால் அதற்குரிய பொறுப்பும்
அதற்கு இருக்கிறது. இன்று, உலகின் பல நாடுகளில் திறனாய்வாளர்கள்,
புகழ்பெற்ற சமூக சிந்தனையாளர்களாகச், சமூக நிகழ்வுகளில் தாக்கம்
ஏற்படுத்திவருகின்றனர். உதாரணமாகச் சிலபெயர்கள், டெல்லி ஈகிள்டன்,
டெர்ரிடா, போதிலார், ஃபூகோ, உம்பர்ட்டோ ஈக்கோ, எட்வர்ட்செய்த், ஃபேனான்,
காயத்ரி ஸ்பைவக் முதலியவர்கள் (எல்லோரும் அண்மைக்காலத்தவர்கள்).
சமூகப்பொறுப்பு என்பது, திறனாய்வைப் பொறுத்த
அளவில், முதலில் நல்லதொரு இலக்கியச் சூழலையேற்படுத்துவதில் கவனம்
செலுத்துவது ஆகும். பிறகு, மொழி மற்றும் அரசியல் - சமூக - பண்பாட்டுத்
தளத்தில் முறையான சரியான - சிந்தனைப் பரப்பைக் கட்டமைப்பது;
புதியபுதிய கோட்பாடுகள் அறிமுகமாகும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு,
சமூகவிழிப்புணர்வுடன், தேவையானவற்றைத் தெளிவாகவும் திடமாகவும் அறிமுகப்படுத்துவது;
சமூகத்தில் நடைபெறும் சீரழிவுகளை எதிர்நின்று
விமரிசிப்பது; மொழியை வளப்படுத்துவது. இவ்வாறு
திறனாய்வாளனுக்குச் சமூகப் பொறுப்புகள் பல இருக்கின்றன. ஒரு இலக்கியவாதி
என்ற முறையிலும் ஒரு சிந்தனையாளன் என்ற முறையிலும் அவனுக்கு இந்தக்கடமைகள்
காத்திருக்கின்றன.
|