3.1 இலக்கியமும் வாழ்க்கையும்
திறனாய்வு, இலக்கியத்தின் மேல் அக்கறை கொள்கிறது
என்றால், முக்கியக் காரணம் இலக்கியம் என்ன சொல்கிறது;
அதனை எப்படிச் சொல்கிறது என்று அறிய வேண்டும்;
அவ்வாறு அறிந்ததைச் சொல்ல வேண்டும் என்பது தான்.
நாம் அறிந்த வாழ்க்கையோடு அது தொடர்பு கொண்டிருக்கிறது.
நாம் அறிந்த வாழ்க்கையை அது பேசுகிறது. நம்மை அதுபற்றிச் சிந்திக்க
வைக்கிறது. அவ்வாறிருக்கும் போது, அது செவ்வையாக இருக்க வேண்டும்
என்று திறனாய்வு விரும்புகிறது. செவ்வையாக இருக்கிறதா என்று பார்த்து
அதுபற்றி விளக்க வேண்டியிருக்கிறது. திறனாய்வின் கடமை இதுவாதலால்,
இலக்கியம் வாழ்க்கையோடு எவ்வாறு ஒன்றிணைந்து
அதுபற்றிப் பேசுகிறது என்று ஆராய்வதில் திறனாய்வு விருப்பம் கொண்டிருக்கிறது.
3.1.1 திறனாய்வாளனும் வாழ்க்கையும்
திறனாய்வு, நேரடியாக வாழ்க்கையைப் பற்றிப்
பேசுவதில்லை. ஆனால் இலக்கியத்தின் வழியாக அதனை
ஆய்வு செய்து மதிப்பிடுவதன் வழியாக வாழ்க்கையைப் பற்றியும்
அதன் சாரங்கள் மற்றும் அறநெறிகள் பற்றியும் திறனாய்வு
பேசுகின்றது.
இலக்கியம் என்பது வாழ்க்கையைத் தட்டையாக, ஒரு
நேர்முக வர்ணனையாகச் சொல்வதல்ல. அதற்கென ஒரு
பார்வை, ஒரு நோக்கு, ஒரு வரையறை, உத்தி முதலிய எல்லாம்
இருக்கின்றன. இவற்றை வெளிக்கொணர வேண்டும். இவற்றின்
வன்மை, மென்மைகளைப் புலப்படுத்த வேண்டும்.
வாழ்க்கை பற்றி இலக்கியப் படைப்பாளிக்கு எவ்வாறு
பட்டறிவும் (அனுபவமும்), நோக்கமும், சார்பு நிலையும்,
விருப்பமும் இருக்கின்றனவோ, அதுபோல் திறனாய்வாளனுக்கும்
உண்டு. மேலும், வாசகனுக்கு அத்தகைய வாழ்க்கை எவ்வாறு
போய்ச் சேரவேண்டும் என்ற ஒரு பார்வையும் இலட்சியமும்
உண்டு.
எனவே திறனாய்வாளன், இலக்கியத்தைப் பார்க்கிறான். அது
சொல்லும் வாழ்க்கையைப் பார்க்கிறான்; ஏன், எப்படிச்
சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறான். வாசகனுக்கு
இவை பற்றி விளக்குகிறான். திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும்
உள்ள தொடர்பு இந்த முனையில் அல்லது இந்தக் கோணத்தில்
இருக்கிறது.
3.1.2 படைப்பாளியும் வாழ்க்கையும்
இலக்கியம் படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள
படைப்பாளிக்கு அதற்குரிய உந்துதல்களாகச் சில
ஆர்வநிலைகள் இருக்கின்றன. அவை,
(அ) | தன்னுடைய வாழ்க்கையனுபவம், வித்தியாசமானது,
விசேடமானது, என்று அவன்(ள்) கருதுகிறான்(ள்). |
|
(ஆ) | பிறருடைய வாழ்க்கைப் பற்றி, அனுபவங்கள் பற்றி அறிந்து
கொள்ள முயலுகிறான், கேட்டறிதல், உற்றறிதல்,
உய்த்தறிதல் என்பவற்றின் மூலமாக. |
|
(இ) | தன்னுடைய வாழ்க்கை பற்றியும் பிறருடைய வாழ்க்கை
பற்றியும் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும்
உருவாக்கிக் கொள்ள ஆர்வம் கொள்கிறான். |
|
(ஈ) | இவற்றை வெளிப்படுத்திச் சொல்ல ஆர்வம் கொள்கிறான்;
அல்லது இவற்றிற்கு உள் அர்த்தங்கள் கண்டு அவற்றைச்
சொல்ல ஆர்வம் கொள்கிறான்; அல்லது மறைத்து, வேறு
‘பதிலி’களை முன்னிறுத்த ஆர்வம் கொள்கிறான்.
|
(உ) | எவ்வாறாயினும், இவற்றைக் கலையழகுடன் பிறர்
மனங்கொள்ளுமாறு சொல்ல ஆர்வம் கொண்டிருக்கிறான்.
|
3.1.3 இலக்கியத்தின் பாடுபொருளும் வாழ்க்கையும்
இலக்கியம், வாழ்க்கை பற்றியதாகத்தான் அமைய வேண்டும்;
அதன் பாடுபொருள் (Theme) வாழ்க்கையே என்று பொதுவாகப்
பலரும் கூறினாலும், தமிழ் மரபு இதனை வலியுறுத்தச்
சொல்கிறது. தொல்காப்பியம், எழுத்து, சொல், தொடர் எனும்
இவை பற்றி மட்டுமல்லாமல், இலக்கியம் பற்றியும் பேசுகிறது
என்பதை நாம் அறிவோம். பொருள் அதிகாரம் என்ற
மூன்றாவது அதிகாரம் கவிதைக் கொள்கை (Poetics) பற்றியது.
இதில், அந்நூல் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
என்பன பற்றிப் பேசுகிறது. இந்த மூன்றும் கவிதையில் இடம்
பெறுவன. இவற்றுள் முதலும் கருவும் இயற்கையையும்
இயற்கையோடு ஒட்டியவற்றையும் பேசுகின்றன. உரிப் பொருள்
என்பது காதல் அல்லது அகவாழ்க்கை பற்றியது. இதுவே
இன்றியமையாதது. முதலும் கருவும் இல்லாவிடினும் உரிப்பொருள்
அமைந்திருக்க வேண்டும்.
தொல்காப்பியம் கூறும் அகம், புறம் எனும் இரண்டும்
இலக்கியத்தின் பாடுபொருள்களாகும். இவ்றைப் பற்றியே
அந்நூல் விளக்கமாகப் பேசுகிறது. அகம், புறம் எனும் இந்த
இரண்டினை மையமாகக் கொண்டதுதான், அன்றைய இலக்கியக்
கொள்கை. எனவே, இலக்கியம் வாழ்க்கையைச் சித்தரிப்பதையே
நோக்கமாகவும் வழிமுறையாகவும் கொண்டது என்பது அறியப்
பெறுகின்றது.
3.1.4 இலக்கியமும் வாழ்க்கையின் பரிமாணங்களும்
வாழ்க்கை, ஒற்றைப் புள்ளியில் அமைந்ததல்ல. ஒற்றைக்
கோடாக அமைந்ததல்ல. ஒரே பாதையில் செல்வதல்ல; ஒரே
சீராகவும் போவதல்ல. பல கோலங்கள், பல போக்குகள், பல
பரிமாணங்கள் (Dimension) உண்டு. வாழ்க்கை விரிவானது;
ஆழமானது தொடர்ச்சியுடையது. வாழ்க்கை இவ்வாறு பன்முக
மாகவும் பல தோற்றங்கள் கொண்டதாகவும் விளங்குவதால்,
இலக்கியம் அத்தகைய வாழ்க்கையைச் சொல்லுவது எளிதாகவும்
இருக்கிறது; ஏற்புடையதாகவும் இருக்கிறது.
வாழ்க்கை என்பது நிகழ்ச்சிகளாலும் நினைவுகளாலும்
உணர்வுகளாலும் ஆனது. இலக்கியம், வாழ்க்கையை ‘அப்படியே’ சித்தரிப்பதில்லை.
வாழ்க்கையை அனுபவமாக்கித் தன்வயப்படுத்திக்
கொள்வது, இலக்கியத்தின் வழிமுறை. தன்னுடைய வாழ்க்கை அனுபவம் மட்டுமல்லாமல்
பிறருடைய வாழ்க்கையிலிருந்து பெறப்படுபவற்றைத் தன்வயப்படுத்தித்
தன் அனுபவமாக ஆக்கிக் கொள்வதும், இலக்கியத்திற்குரிய வாழ்க்கையனுபவமாகும்.
எல்லோரும் எல்லா அனுபவங்களையும் பெறமுடியும் என்பதோ தன்னுடைய அனுபவங்களையெல்லாம்
அல்லது அவற்றை மட்டுமே எழுத முடியும் என்பதோ சாத்தியமல்ல. எனவே,
பிறருடையவற்றைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். கூடுவிட்டுக்
கூடு பாய்வது படைப்பாளியின் பண்பு.
|