3.4 வாழ்க்கைச் சித்திரங்கள்
இலக்கியம், ஏற்கனவே முன்னர் நாம் சொன்னது போல
வாழ்க்கையின் நேர்முக வருணனை அல்ல. அது, வாழ்க்கையைக்
கலையுருவில் தருகிறது. சிலவற்றை விடுகிறது; சிலவற்றைச்
சேர்க்கிறது; சிலவற்றை மங்கலாக்குகிறது; சிலவற்றைப்
பூதாகரப்படுத்துகிறது. இத்தன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
3.4.1 மறுதலிப்பும் மாற்றும்

சு. சமுத்திரம்
வெளியுலகு வாழ்க்கை படைப்பாளியின் மனத்தில்
அனுபவமாகி, அவனுடைய நோக்கின் வழியாக வெளிப்படு்கிறது. படைப்பாளி,
வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது அம்சத்தை வெறுக்கலாம்;
மறுக்கலாம். இத்தகைய மறுதலிப்பு, நேரடியாக இடம்
பெறுவதில்லை; மறைமுகமாகவோ, புனைகதை உத்திகளுடன் வித்தியாசமான கோணங்களுடனோ
இவை வருகின்றன. உதாரணமாக, சு.சமுத்திரம் எழுதிய ‘பாலைப்
புறாக்கள்’ எனும் புதினம். முழுக்கவும் எய்ட்ஸ் நோயாளிகளை மனிதாபிமானத்துடன்
அணுகவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு புதினம். அதற்கு ஏற்ற மாதிரியாகப்
பல நிலைகளிலிருந்து பல கதை மாந்தர்கள்
உருவாக்கப்படுகின்றனர். தற்செயலாக ஒரு விபத்துப் போல எய்ட்ஸ் நோய்க்கு
ஆளானவன், அவனுடைய மனைவி, டாக்டர், சமூக சேவகி, அவனுக்கு அனுசரணையாக
உள்ள இன்னொரு எய்ட்ஸ் நோயாளி என்று இந்தப் பாத்திரங்கள் இடம் பெறுகின்றனர்.
வாழ்க்கையின் பெரும் அவலமாகிய இந்த நோய் மறுதலிக்கப்பட்டுச் சித்திரமாகியுள்ளது.
இதுபோல் பல புதினங்கள், வாழ்க்கையின் எதிர்நிலைகளை மறுதலிக்கின்றன.
இவ்வாறு, மறுதலிக்கிறபோது, இதற்கு மாற்று (Alternative)
கூறுவது உண்டு; தீர்வு போன்று சில கருத்து நிலைகளைக்
கூறுவதும் உண்டு; இரண்டுமல்லாமல், மறுதலிக்கிற சித்திரமாகவே
முடித்து விடுவதும் உண்டு. படைப்பாளிக்கு இதில் சுதந்திரம்
உண்டெனினும், திறனாய்வாளன், இத்தகைய சித்திரங்களை, மிக
ஆழமாகக் கண்டறிந்து குறைகளெனவும், நிறைகளை
நிறைகளெனவும் சொல்ல வேண்டியவனாகிறான்.
மேலும், வாழ்க்கையென்பது ஒரே சீரானது அல்ல. பல
பிரச்சனைகள் பல உருவத்தில் உண்டு. கதைமாந்தர்களையும்
அவர்தம் வாழ்க்கையையும் சித்தரிக்கும்போது பிரச்சனைகள்
பற்றியோ அவற்றை எதிர்கொள்வது பற்றியோ சித்தரிக்காமல்,
மிகையான கற்பனைகள், அலங்காரமான சொற்கோலங்கள்
முதலியவற்றால் திருப்தியடைந்து சித்திரங்களை முடித்துவிடுவது
உண்டு. இத்தகைய மனப்போக்கு, நழுவல் அல்லது தப்பித்துச்
செல்லுதல் (Escapes) என்று சொல்லப்படுகிறது. இலக்கியத்தில்
இது, பலமுனைகளில் இருக்கின்றன. திறனாய்வுக்கு, இதையறிந்து
சொல்வதில் அக்கறையுண்டு.
3.4.2 எதிர்கால நோக்கும் வாழ்க்கைச் சித்திரமும்
“பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றும்
சகோரத் தன்மை
யாருக்கும் தீமை செய்யாது - புவி
யெங்கும் விடுதலை
செய்யும்”
“பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோ கத்தார்
கண்முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன்
தெய்வ விதியிஃதே”
“எல்லோரும் அமரநிலை யெய்தும் நன்முறையை
இந்தியா
உலகிற்களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்”
இவ்வாறு மகாகவி பாரதியார், இந்தியா சுதந்திரமடைவதற்குக்
கால் நூற்றாண்டு முந்தியே எழுதினார். இதில், பாரதியின்
வருங்காலத்துவம் இருக்கிறது. நிகழ்காலத்தில் காலூன்றினாலும்
வருங்காலம் பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை,
இலக்கியத்தில் சாத்தியம். எழுத்தாளர்கள் பலர், வருங்கால
உலகம் பற்றிக் கனவு கண்டிருக்கிறார்கள். இதனைத் திறனாய்வு
எடுத்துச் சொல்லக் கடமைப் பட்டுள்ளது.
இவ்வாறு தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக்
காரணம், படைப்பாளியிடம் வாழ்க்கைப்பற்றி, இந்தச் சமூக
வாழ்க்கை பற்றி, ஒரு தீர்க்கமான கண்ணோட்டமும் சார்பு
நிலையும் இருப்பதுவேயாகும்.
|