4.2 சொல்
இப்பகுதியில், மொழிக்கு ஆதாரமாகவும் அடையாளமாகவும்
இருக்கும் ‘சொல்’ பற்றிப் பார்க்கலாம்.
4.2.1 சொல்வளம்
இலக்கியத்தின் மொழிதல் திறனுக்கு அடி இழையாக
இருப்பது, சொல். மரபின் ஆளுகைக்கு உட்பட்ட சொல்,
உயிர்த்தன்மையுடையது. காலம், இடம் முதலிய சூழல்களுக்கேற்ப
மாறுதலும் வளர்ச்சியும் அடைவது சொல்லின் சிறப்பு.
• சொல்வளம் - விளக்கம்
சொல்வளம் என்பது நிறையச் சொற்களைப் பயன்படு்த்துவது
என்பது அல்ல; இலக்கியத்தின் பொருளுக்கும் அழகுக்கும்
நோக்கத்திற்கும் ஏற்ற பொருள் உடைய - பொருள் ஆழமுடைய
சொற்களைப் பயன்படுத்துவது என்பதாகும். இலக்கிய ஆசிரியன்,
அகராதிகளைத் தேடிப் போகிறவன் அல்ல. அகராதிகள்,
இலக்கியத்தைத் தேடிப் போக வேண்டாம்.
• இரண்டு பண்புகள்
பொருள் தரும் நிலையில், சொல்லுக்கு, அல்லது மொழிக்கு
இரண்டு பண்புகள் அல்லது செயல்பாடுகள் உண்டு. முதலில்
நேரடிப் பொருள் தருவது (denotative / referential) இது
உணர்வாய் அல்லாமல், அறிவால் ஊட்டப்படுவது. அறிவியல்,
சட்டம், அறிவிக்கை முதலியவற்றிற்குக் இது உகந்தது.
இரண்டாவது குறிப்பு நிலையில் (Suggestrue / connotative)
பொருள் தருவது. இது பெரிதும் உணர்வால் ஊட்டப்படுகிறது.
இது, இலக்கியத்திற்கு உகந்தது. மேலும், இலக்கியத்தில் அழகு
தருகிற பொருள் அடுக்குகளுக்கு உதவுவது, இது. இந்த
இருவகைச் செயல்பாடுகளையும், புகழ்பெற்ற ஆங்கிலத்
திறனாய்வாளர் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் (I.A. Richards) அறிவியல்
சார்ந்தது என்றும் உணர் அறிவை (Emotive) சார்ந்தது என்றும்
வகைப்படுத்துகிறார்.
4.2.2 சொல்லும் தொடரும்
சொல் தனித்து நின்றும் பொருள் தரும். பல சொற்களாகச்
சேர்ந்து நின்றும் பொருள் தரும். பொருளைச் சொல்லுவதில் ஓர்
ஆரம்பமும் முடிவுமாக ஒரு வரன்முறை பெறுமானால் அதனை
வாக்கியம் அல்லது தொடர் என்கிறோம். பொருள் தொடர்நிலை
என்று சொல்லப்படுகின்ற சொற்றொடர் (Phrase) மற்றும்
வாக்கியம் (Sentence) இலக்கியத்தில் முக்கியமாகக் கவிதையில்
தனித்தன்மையுடன் அமைகிறது.
• சொற்களின் இணைதலும் பொருளும்
சொற்கள் இணைகிற போது, சொற்றொடர்க்கு ஒரு புதிய
சுழற்சி (twist) ஏற்பட்டுவிடுகிறது. பொருள் ஒரு புதிய
பரிமாணமும் சக்தியும் பெறுகிறது. உதாரணமாக ஆகுலநீர பிற
(குறள்), கற்பின் கனலி (கம்பன்), அக்கினிக்குஞ்சு (பாரதியார்),
அழகின் சிரிப்பு (பாரதிதாசன்) முதலிய சொற்றொடர்களை
எண்ணிப் பாருங்கள்.

|
ஆகுலநீர பிற |
|
கற்பின் கனலி |
|
அக்கினிக்குஞ்சு |
|
அழகின் சிரிப்பு |
• அடைமொழி
பால்
தேன்
அடைமொழி சொல்லுக்கும் சொற்றொடர்க்கும் காரண
காரியத் தோடான அழகையும் ஆழத்தையும் தருகிறது. காட்டாக,
வள்ளுவர் காதற் சிறப்புரைக்கிறார். கனி முத்தம் தரும்
காதலனுக்குத் தன் காதலியின் கனிவாயிலிருந்து ஊறும் நீர்,
பாலொடு தேன் கலந்ததாகி இருக்கிறதாம். ‘எயிறு (பல்) ஊறிய
நீர்’ என்ற தொடர் இடம் பெறுகிறது. ஆனால் அது அப்படியே
அமையுமானால் சுவையும் இல்லை; பயனும் இல்லை. அதற்கு
அடைமொழி தேவைப்படுகிறது. எயிறு-பல்- எத்தகையது?
காவியேறிய ஊத்தைப்பல்லா? அல்ல, ‘வால் எயிறு -
ஒளிசிந்துகின்ற வெண்மையான (தூய்மையான) எயிறு. அதுவும்
யாருடையது? காதலி எப்படிப்பட்டவள்? குளுமையான மொழி
பேசும், பணிவான மொழிக்குரியவள், ‘பணிமொழி வாலெயிறு
ஊறிய நீர்’ என்கிறார் வள்ளுவர். அடைமொழி, மொழிக்கு
அழகும் ஆழமும் இன்சுவையும் தருகின்றதன்றோ!
• சூழலும் தொடர்களும்
இனித் தொடர்கள் குறுகியனவாகவோ, நீண்டனவாகவோ
இருக்கலாம். தேவையும் சூழரும் கருதி நாடக உத்தி, உணர்ச்சிப்
பீறல், ஆணையிடுதல், அறுதியிடுதல் முதலிய சூழல்களில் சிறிய
சிறிய தொடர்கள் எனும் அமைப்புப் பெரிதும் உதவுகிறது.
வள்ளுவரிடம் நிறையப் பார்க்கலாம். ‘கற்க கசடற; நிற்க
அதற்குத்தக;’ இது ஓர் உதாரணம். வருணனை, கற்பனை,
நீண்ட சிந்தனை முதலிய சூழல்களில் நீண்ட தொடர்கள் வருவது
இயல்பு. புனைகதைகளில் முக்கியமாகப் புதினங்களில் இதனை
நெடுகக் காணலாம்.
4.2.3 சொல்லும் பொருளும்
ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தானிருக்கும் என்பதோ,
ஒரு பொருளுக்கு ஒரு சொல்தான் இருக்கும் என்றோ
கூறமுடியாது. இது ஒரு பொதுப்பண்பு. ஒரு சொல் பல பொருள்,
ஒரு பொருள் பலசொல் என்பன வழக்காற்றிலிருப்பன.
காட்டாகச் செத்தான், இறந்தான், மாய்ந்தான், மாண்டான்,
துஞ்சினான், உயிர் நீத்தான், மரித்தான், காலமாகிப்
போனான், சிவலோக பதவி அல்லது வைகுண்ட
பதவியடைந்தான், இறையடி சேர்ந்தான், இயேசுவுக்குள்
அல்லது கர்த்தருக்குள் அடக்கமானான் இவையெல்லாம்
ஒரு பொருள் குறித்து வந்த பல சொற்கள். ‘மாண்ட’ என்ற ஓரு
சொல் தமிழில் உண்டு. பழந்தமிழில் மாட்சிமைப்பட்ட/ நல்ல
என்ற பொருள் இதற்கு உண்டு. “மாண்ட என் மனைவியோடு
மக்களும் நிரம்பினர்” என்பது நரையின்றி் என்பதற்குக்
காரணம் கூறும் பிசிராந்தையார் பாடல், இன்றைய
வழக்கியல் இச்சொல்லுக்கு ‘இறந்துபோன..’ என்பது பொருள்.
பழைய வழக்குக்கு மாண்(பு) என்பது அடிச்சொல்; புதிய
வழக்கிற்கு ‘மாள்’ என்பது அடிச்சொல். இதுபோன்று,
சான்றோன்/சான்றோர் என்பதற்கு வீரர் என்ற பொருள்
பழையது. சங்க காலத்திலேயே இதற்கு அறிஞர் என்ற
பொருளும் வந்து விட்டது.
மேலும், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், சொல்லுக்கு நான்கு வகையான
பொருட்பண்பு உண்டு என்கிறார்.
(அ) | அறிவு புலப்படுதல் (Sense) |
| (ஆ) | உணர்வு புலப்படுதல் (Feeling) |
| (இ) | தொனி அல்லது குறிப்புப் பொருள் (Tone) |
| (ஈ) | விருப்பம் அல்லது நோக்கம் (Intention) |
இலக்கியத்தின் சொல் பொருளுக்கு
அகராதிகளைப் பார்ப்பது, பொருத்தமன்று; போதியதன்று; சூழமைவுப் பொருள்
(contextual meaning), குறிப்புப் பொருள் (suggestive meaning),
சார்புடைப் பொருள் (shades of meaning) என்று பல நிலைகள், இலக்கியத்தில்
உண்டு. முக்கியத்தை ஆராய்கிறவர்கள், பொருட்களை, இலக்கியத்தின் சூழமைவுகளிலேயே
ஆராய வேண்டும்.
|