5.4 தனித்தன்மையும் பொதுத்தன்மையும்
5.4.1 தனித்தன்மை
எனக்கான விடுதலை
என் கவிதை.
உனக்கானதை
நீ எழுதிக்கொள்.
அண்மையில் வந்த ஒரு கவிதை இது. இப்படி, ‘எனக்கானது
என் கவிதை; நான் இதனை எழுதிக் கொள்கிறேன்; உன்
கவிதை, உனக்கானது; அதனை நீ எழுதிக் கொள்” என்று
ஒவ்வொருவரும் அவரவர்க்கு என்று எழுதிக் கொண்டிருக்க
முடியுமா? அல்லது, அவரவர் எழுதியது, அவரவர்க்கு மட்டும்
தானா? ஏற்கனவே சொன்னது மாதிரி, இது சாத்தியமும் இல்லை;
அவ்வாறு கருதுவது ஏற்புடையதுமல்ல. ஒருவருக்கான கவிதை,
ஒவ்வொருவருக்குமானது; ஒவ்வொருக்குமான கவிதை,
எல்லோருக்குமானது.
5.4.2 பொதுத்தன்மை
தரமான அல்லது நல்ல கலைக்கு அல்லது இலக்கியத்திற்குத்
தனித்துவப் பண்புகளும் உண்டு; தன்னொத்த பிறவற்றோடு
அதற்குப் பொதுத் தன்மைகளும் உண்டு. எழுதியவர்
வாழ்க்கையைச் சொல்லுவதாகத் தோன்றும்; அவர்க்கே
உரியதாகவும் தோன்றும். ஆனால், அது எல்லோருடைய
உணர்வுகளுக்கும் பொதுவானது தான். தனிநிலைப் பாடல்கள்,
பக்திப் பாடல்களை ஆகியவற்றைப் பாருங்கள், உண்மை
தெரியும். எடுத்துக்காட்டாகச் சங்க இலக்கியப் பாடல் ஒன்று.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம்எந்தையும் இலமே
தம் தந்தையையும், தம் சொத்துக்களையும், சுகங்களையும்
இழந்து நிற்கும் பாரிமகளிர் பாடியதாக உள்ள பாடல் இது.
ஆனால் இந்த அவலமும் ஆற்றாமையும் அவர்களுக்கு மட்டுமே
உரியதா? எல்லாம் இழந்து, தனிமைப் பட்டு நிற்கும் அவலத்தில்,
குறிப்பிட்ட ஒருவரின் உணர்வும் இருக்கிறது; எல்லோரும்
உணரக் கூடிய உணர்வும் இருக்கிறது. எனவே கலை,
கலைக்குரியதாகவும் குறிப்பிட்ட ஒரு கலைஞர்க்கே
உரியதாகவும் இல்லாமல், எல்லோருக்கும் உரியதாக உள்ளது.
முகலாயப் பேரரசன் ஷாஜகான் தாஜ்மஹாலைத் தன்னுடைய
காதலி மும்தாஜுக்காக, அவள் நினைவுக்காகக் கட்டினான்;
ஆனால், அதோடு அது நின்றுவிட்டதா?

தாஜ்மஹால்
படைத்தவனோடு படைப்பு நின்று விடுவதில்லை. அரசியல்
சுதந்திரத்திற்காக மட்டுமன்றிச் சமூக விடுதலைக்காகவும்
போராடிய காந்தியடிகளுக்கு, அத்தகைய மனநிலைக்கு
எழுச்சியூட்டியது எது? ஜான்ரஸ்கின் எழுதிய ‘கடைக்கோடி
மக்களுக்காக’ (Unto the last) என்ற நூல் அல்லவா?
அதுபோல, ருசிய நாவலாசியரியர், லியோ டால்ஸ்டாய் எழுதிய
‘போரும் அமைதியும்’ முதலிய நாவல்கள் அவருக்கு மனஎழுச்சி
தந்தன. நவீன இந்தியா உருவாவதற்கு அயராமல் பாடுபட்ட
ஜவகர்லால் நேருவுக்கு, ராபர்ட் ஃபிராஸ்ட் (Robert
frost) என்ற ஆங்கிலக் கவிஞரின் கவிதைகள், எழுச்சி தந்தன
என்று பார்க்கிறோம். இதுபோல், உதாரணங்கள் பல உண்டு.
இது, எதனைக் காட்டுகிறது? கலை, இலக்கியம், வாழ்க்கையைச்
சித்திரிக்கக் கூடியது; வாழ்க்கையின் மன எழுச்சிகளுக்கு
உதவுவது என்பதைத்தான் காட்டுகிறது.
|
|
|
காந்தியடிகள் |
லியோ டால்ஸ்டாய் |
ஜான்ரஸ்கின் |
|