5.5 நோக்கமும் பண்பும்
கலை இலக்கியத்தின் நோக்கம், கலைக்காக, அதன்
அழகினைக் காட்டுவதற்காக என்ற வாதம், பொருத்தமில்லாதது
என்று கண்டோம். உருவம் மட்டும் நேர்த்தியாக இருந்து,
உள்ளடக்கம், சீர்குலைவு தரக் கூடியதாகவும் தவறான
ஒழுக்கத்தை உணர்த்துவதாகவும் இருந்தால், அந்த இலக்கியமே
பிழைபட்டதாகத் தான் இருக்கும். அது போல், உயர்ந்த
கருத்துகளைச் சொல்லுகிற உந்துதலில், அதனை அழகுபட
நேர்த்தியாகச் சொல்லவில்லையென்றால், அந்த இலக்கியம்
சக்தியிழந்ததாகவும் நோக்கத்தை நிறைவேற்ற முடியாததாகவுமே
இருக்கும்.
5.5.1 நோக்கம்
கலை இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையைச் சித்திரிப்பது;
வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு ஓரளவாவது உதவுவது ஆகும்.
ஆனால், அதேபோது சொல்லுவதை மனங்கொள்ளுமாறு சொல்ல
வேண்டும்; உணர்த்துவதை நேர்த்திபட உணர்த்த வேண்டும்;
அறம், அறிவுரையாக அமையும் போது, அது அழகுபட அமைய
வேண்டும். நீதியும் அறமும், திருக்குறள் போல, கலையியல்
கூறுகளுடன், படிப்போர் சுவைத்தறியுமாறு அமைய வேண்டும்.
அதுவே கலையின் பண்பும் நோக்கமும் ஆகும்.
5.5.2 பண்பு
உருவம், உள்ளடக்கம் எனும் இரண்டும் முக்கியமே.
ஆனால் இரண்டும் ஒன்றனையொன்று சார்ந்து, தமக்குள்
முரண்பாடுகளன்றி இசைந்து இருக்க வேண்டும். கலையின்
பண்பும் பயனும் இணைந்து அமைகிறபோது தான், கலையின்
நோக்கம் வெற்றி பெறும். மேலும், கலைகள் எல்லாம் ஒரே
வகையின அல்ல. கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை
எனும் இவற்றின் பண்பும் செயல்பாடும் வேறு. இசைக்கலை,
கருவி இசையாகவும், பாடலாகவும் அமைகிறது. இவற்றின்
செயல்பாடுகளும் வேறு. இலக்கியம், மொழியால் ஆன கலை.
இதனுடைய பண்பும் செயல்பாடும், ஏனைய கலைகளினும்
வேறுபட்டது. திரைப்படக் கலை மற்றும் தொலைக்காட்சி இன்று
மிகவும் பிரசித்தமானது. பல நூறாயிரம் மக்களைத் தினமும்
சந்திக்கும் அந்தக் கலை, மொழியோடும், இசையோடும், காட்சி
வடிவத்தோடும், கணினி உத்திகேளாடும் அமைந்தது. ஒவ்வொரு
கலைக்கும் ஒவ்வொரு வகையான சக்தி அல்லது திறன் உண்டு.
கலைகள், தம்முடைய சிறப்பியல் பண்புகளைக் கைவிடாமல்,
அதேபோது, உயர்ந்த நோக்கங்களையும் கைவிடாமல்
அமைந்திருக்க வேண்டும். கலை, வாழ்க்கைக்காகவே என்று
சொல்லுவது, வாழ்க்கை உணர்வுகளின் நேர்த்திகளுக்கு
அதனுடைய கலையியல் நேர்த்திகள் அனுசரணையாக அல்லது
துணையாக இருக்க வேண்டும் என்று சொல்லுவதையும் சேர்த்தே
குறிப்பிடுகிறது.
|