5.6 தொகுப்புரை

கலையின் நோக்கம் எத்தகையதாக இருக்கிறது என்பதனைச் சார்ந்து கலைப்படைப்பினுடைய பண்பும் அமையக் கூடும். எனவே, கலை இலக்கியத்தின் நோக்கத்தை அறிவதும் அது பற்றிய ஓர் அணுகுமுறையைப் பெற்றிருப்பதும் இலக்கியத் திறனாய்வுக்கு அவசியமாகும்.

கலை கலைக்காகவே என்ற கொள்கை, ஒரு சாராரிடம் உண்டு. கலையில் அதன் அழகையும் அது தரும் ரசனை அனுபவத்தையும் மட்டுமே பார்க்க வேண்டும் ; பிறவற்றைப் பார்க்கக் கூடாது என்று இக்கொள்கை கூறுகிறது.

இதற்கு மாறாக நீதி நெறிகளையும், அரசியல், சமயம் போன்றவற்றையும் பிரச்சாரம் செய்வதற்குத் தானே கலை வடிவம் என்று கருதுகிற கருத்தும் உண்டு. இது, அழகையும் நேர்த்தியையும் புறந்தள்ளி மறுக்கிறது.

கலை, வாழ்க்கைக்காகவே என்ற கொள்கையே பரவலாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கலை முக்கியமாக இலக்கியக்கலை, வாழ்க்கையைச் சித்திரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் மனித வாழ்க்கை பற்றிய மன எழுச்சிகளுக்கு அது துணையாகவும் உந்துதலாகவும் இருக்கிறதென்றும் இக்கொள்கை கூறுகிறது.

கலை, வாழ்க்கைக்காகவே என்ற கொள்கையே தமிழ் மரபில் வேரூன்றியுள்ளது. தொல்காப்பியம், சிலம்பு முதல் பாரதியார் வரை இந்தக் கொள்கை வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

உருவமும் உள்ளடக்கமும் அதாவது கலையழகும் கலையின் நோக்கமும்     இரண்டற     வேறுபாடின்றிக்     கலந்து வெளிப்படுவதே     உயர்ந்த     கலையாகும்.     கலை, வாழ்க்கைக்காகவே எனும் கருத்து, இதனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

‘கலை, கலைக்காகவே’ என்ற கொள்கை பற்றி ஏ.சி.பிராட்லி கூறுவது யாது?

விடை
2.

சிலம்பு எனும் பாட்டுடைச் செய்யுளை இளங்கோவடிகள் எழுதுவதற்கு உந்துதலாக இருந்த காரணங்கள் என்ன?

விடை
3.

கலையின் நோக்கம் பற்றித் தமிழ் மரபில் ஆழமாகவேரூன்றியுள்ள கருத்து, யாது?

விடை
4.

காந்தியடிகளுக்கு மன எழுச்சி தந்தஎழுத்தாளர்கள் யார்?

விடை
5.

கலையின் நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால்,அது எவ்வாறிருக்க வேண்டும்?

விடை