6.3 திறனாய்வும் சமூகவியலும்
இலக்கியம், குறிப்பிட்ட ஒரு சமூகப் பின்புலத்தில் தோன்றி,
அந்தச் சமூகத்தைக் காட்டுவதாகவும் அதன் ஓர் அங்கமாகவும்
விளங்குவது. அதுபோன்றதுதான், இலக்கியத் திறனாய்வும்,
சமுதாயத்தோடு நெருக்கமுறப் பிணைந்திருக்கிறது;
பிணைந்திருக்க வேண்டும். ஏனென்றால், இலக்கியத்தின்
படைப்புத் தளம், திறனாய்வின் ஆய்வுத் தளமாகவும் பார்வைத்
தளமாகவும் அமைகிறது.
• சமூகப் பின்புலம்
திறனாய்வாளனுடைய சமூகப் பின்புலம், சமூகத் தேவை
மற்றும் சமூக நோக்கம் முதலியவை அவனுடைய திறனாய்வில்
பிரதிபலிக்கின்றன; அவனுடைய திறனாய்வின் குறிப்பிட்ட
வகையான அணுகுமுறை காரணமாக அமைகின்றன.
எடுத்துக்காட்டாக, வ.ராமசாமி, ப.ஜீவானந்தம் பெ.தூரன்,
சிதம்பர ரகுநாதன், கலாநிதி கைலாசபதி முதலியோர்க்குத்
தேசிய இயக்கம், விடுதலை, சமூக மாற்றம் முதலியவை குறித்த
சமூகத் தேவையும் நோக்கமும் உண்டு. எனவே, பாரதியார்
பற்றிய அவர்களுடைய திறனாய்வுகளிலே, அத்தகைய
பார்வையும் அணுகுமுறையும் காணப்படுகின்றன. இது போல,
ம.பொ.சிவஞானம். இவர் ஒரு தேசியவாதி; ஓர் அரசியல்
தலைவர்; அதே நேரத்தில் தமிழ் இனவழித் தேசியத்தை
முன்னிறுத்தியவர். இந்தச் சமூகப் பின்புலமே, சிலம்பு பற்றிய
அவருடைய நூல்களிலும் மற்றும் வில்லிபாரதம், கலிங்கத்துப்
பரணி முதலியவை பற்றிய கட்டுரைகளிலும் பார்வைத் தளமாக
அமைந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தை தமிழ்த் தேசிய
எழுச்சியின் குறியீடாகவும் இலட்சியமாகவும் அவர் காணுகிறார்.
குறிப்பிட்ட சமூகப் பின்னணியோடு, அதிலே நல்ல அறிவும்
ஈடுபாடும் கொண்ட ஒருவர், அந்த வகையான சமூக வாழ்வோடு
கூடிய இலக்கியத்தைப் படைக்க முடியும் அல்லவா?
அதுபோலவே, பொருத்தமான சமூகப் பின்புலமும் அது பற்றிய
போதிய அறிவும் ஈடுபாடும் கொண்ட திறனாய்வாளரே,
அத்தகைய இலக்கியத்தைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும்
என்றும் அதுபற்றி ஆழமாக எழுத முடியும் என்றும் நாம்
எதிர்பார்க்கலாம் அல்லவா?
• சமூகப் பொறுப்பு
ஒரு நல்ல திறனாய்வாளனுடைய தகுதிகளில் முக்கியமானது,
சமூகவியல் பற்றிய அறிவினைச் சரியாகப் பெற்றிருப்பது ஆகும்.
அத்தகைய திறனாய்வாளனே சமூகத்தையும், இலக்கியத்தையும்
மற்றும் சமூகம் சித்தரிக்கும் இலக்கியத்தையும் புரிந்து கொண்டு
புலப்படுத்துகிறான். இலக்கியப் படைப்பாளிக்குச் சமூகப்
பொறுப்பு இருப்பது போலவே, திறனாய்வாளனுக்கும் சமூகப்
பொறுப்பு இருக்கிறது.
6.3.1 திறனாய்வும் வரலாற்றியலும்
காலங்களின் தொடர்ச்சியில் சூழல்களாலும் பிறவற்றாலும்
சமுதாயமும் பண்பாடும் மாறிக்கொண்டே இருக்கும். அதுபோல,
கலை, இலக்கியமும் குறிப்பிட்ட போக்குகளையும்
மாற்றங்களையும் கொண்டிருக்கும் என்பது இயல்பு.
மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வது,
அறிவாராய்ச்சிகளின் நடைமுறை. அம்முறையில், திறனாய்வு,
வரலாற்றியலை அறிந்திருப்பது என்பது அதன் முக்கியமான
தேவையாகும்.
• வரலாற்று அறிவு
இன்று நாம் செய்யத் தொடங்குகிற திறனாய்வு, எந்தத்
தன்மைகளைப் பெற்றிருக்க வேண்டும், எந்த முறையில்
வித்தியாசமாகவும் புதிதாகவும் இருக்க வேண்டும், எந்த
வகையான குறைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நமக்கு
நாமே தீவிரமாக அனுமானம் செய்து கொள்ள வேண்டும்.
அப்படியானால் தான் அடுத்ததை நோக்கி அடியெடுத்து வைக்க
முடியும். எனவே திறனாய்வாளனுக்குத் திறனாய்வின் வரலாறு
தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாகப் புதுக்கவிதை பற்றி
இன்று திறனாய்வு செய்கிற ஒருவர், வல்லிக்கண்ணன்,
நா.வானமாமலை, சி.கனகசபாபதி முதலிய திறனாய்வாளர்கள்
என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
பாலுணர்வு, அந்நியமாதல், விரக்தி, வக்கிரம் முதலிய
மனநிலைகளும், புதிதாக எழுதுதல், யாப்புக்களைத் தளைகளாகக்
கருதி அவற்றிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக எழுதுதல்,
பரிசோதனை முதலிய வழிமுறைகளும் புதுக்கவிதையில்
காணப்படுவதை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம்
அவற்றை ஏற்றுக் கொள்கிறோமா - மறுத்து வேறொன்று
சொல்லப் போகிறோமா என்று முடிவு செய்ய, நமக்குப்
புதுக்கவிதைத் திறனாய்வின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
மேலும், முக்கியமாக, இலக்கியத்தின் வரலாற்றைத்
திறனாய்வாளன் அறிந்திருக்க வேண்டும். காலம், இடம் என்ற
தளங்களை வைத்து இலக்கியத்தைப் பார்க்கவில்லையானால்,
பெரும்பிழைகள் வந்து சேரும். எனவே இலக்கியத்தின் வரலாறு
அறிவது, திறனாய்வின் முக்கியமான கடமையாகும். அதுபோன்று,
சமூக வரலாறும், பண்பாட்டு வரலாறும் திறனாய்வுக்குத் தேவை.
வரலாற்றுயல் இல்லையானால், திறனாய்வு தனது அடிப்படைப்
பண்பை வழிமுறையை இழக்கவேண்டும்.
6.3.2 திறனாய்வும் தத்துவ நெறியும்
முதலில் தத்தும் என்றால் என்ன என்று பார்ப்போம்.
• தத்துவம்
இந்த உலகத்திற்கும் மனிதனுக்குமுள்ள உறவுகள், மனித
வாழ்க்கையின் நடைமுறை அனுபவங்கள் மற்றும் அவனுடைய
உள்ளாற்றல்கள், நம்பிக்கைகள், பயங்கள், ஆசைகள் முதலிய
உணர்வு நிலைகள் ஆகியவற்றிலிருந்து பொதுமைப்படுத்தி ஓர்
ஒழுங்கு முறையாகச் (System) செய்யப்படுவது தான் தத்துவம்
ஆகும். தத்துவம் எல்லாம் சமயச் சார்புடையது அல்ல.
வாழ்க்கையின் ‘தேடுதல்’தான் தத்துவத்தின் சாராம்சம். வாழ்க்கை
மீதான ஒரு கோட்பாடு தான் தத்துவத்தின் நடைமுறை.
• இலக்கியமும் தத்துவமும்
இலக்கியமும் வாழ்க்கை மீதான ஓர் எதிர்வினை தான்
(Response). வாழ்க்கை பற்றிய பல கருத்தியல்களைக்
கலாபூர்வமாக வெளிப்படுத்துவது தான், இலக்கியம். மேலும், பல
தத்துவ நெறிகளை இலக்கியம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே இத்தகைய நிலையில், இலக்கியத் திறனாய்வு, தத்துவ
நெறிகளை அறிந்திருக்க வேண்டியிருக்கிறது.
• லோகாயுத வாதம்
லோகாயுத வாதம் (Materialism) என்பது ஒரு தத்துவம்.
இதில் பொருள் (Matter) தான் முதன்மை. பொருள் பற்றிய
சிந்தனை அல்லது எண்ணம் (Idea) அதனையடுத்து வருவதுதான்
என்று இந்தத் தத்துவம் பேசுகிறது. இரண்டற்குமுள்ள உறவையும்
விளங்குகிறது. சங்க இலக்கியத்தைத் திறனாய்வு செய்கிற போது
முக்கியமாக இந்தத் தத்துவம் துணை செய்கிறது.
நம்மாழ்வார், திருவாய்மொழி எனும் இலக்கியம்
இயற்றினார். அது, சமயம் சார்ந்ததுதான். அவருக்குப் பின்னால்
வந்த இராமானுசர் முதற்கொண்டு நஞ்சீயர், மணவாள மாமுனிகள்
முதலிய பலர், நம்மாழ்வார் பாடல்களிலிருந்து வைணவ,
விசிஷ்டாத்வைத - தத்துவங்களைக் கண்டறிந்து
விளக்குகிறார்கள். எனவே, இலக்கியத்தை ஆய்வு
செய்கிறவர்களுக்குத் தத்துவவியல் பற்றிய அறிவு
தேவைப்படுகிறது.
• திறனாய்வும் தத்துவமும்
மேலும், பல நேரங்களில் திறனாய்வே கூடத் தத்துவம்
தருவதாக அல்லது அதன் சாயலைக் கொண்டதாக அமைந்து
விடுகிறது. மேலை நாட்டில், இம்மானுவேல் காண்ட் (Immanuel
Kant), ஜார்ஜ் சண்டயானா (George Santayana)
முதலியோரும், இன்றையக் காலத்தைச் சேர்ந்த டெர்ரிடா
(Derrida), ஃபூக்கோ (Foucoult) முதலியோரும் இலக்கியத்
திறனாய்வு கோட்பாட்டாளர்களாகவும் அதேபோது, தத்துவ
வியலாளர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
• தொன்மங்களும் தத்துவமும்
இலக்கியத்தில், குறியீடுகள் (Symbols), தொன்மங்கள்
(Myths) இடம் பெறுகின்றன. உதாரணமாகப் ‘பத்தினி’ என்பது
ஒரு தொன்மம். கண்ணகி, இந்தத் தொன்மத்தை முதன்மையாகப்
பிரதிநித்துவப் படுத்துகிறார். அதுபோல், பின்னர் புனிதவதியார்
(காரைக்காலம்மையார்), குண்டலகேசி முதலியோரும் சங்க
காலத்திய - பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டும்
(புறம் - 246) (இவள், கணவன் இறந்தவுடன், தானே வலியச்
சென்று, பொய்கையும் தீயும் ஒன்றே என்று சொல்லித் தீப்பாய
முனைந்தவள்) ‘பத்தினி’ எனும் தொன்மத்திற்குரியவர்கள்.
‘பத்தினி’ எனும் இந்தத் தொன்மத்தைத் தத்துவ நிலையில்
கொண்டுவந்து ‘பத்தினித் தெய்வம்’ என்ற வழிபாடு வந்தமையை
விளக்குவதற்குத் திறனாய்வில் இடம் உண்டு.
|