மனத்தாலும் அறிவாலும் அறியப்படும் ஒரு பொருளை,
அழகுற உணர்த்தும் படைப்பாக்கம் அல்லது கலைத் திறன்
என்பது இலக்கியம் எனப்படுகிறது. இது நோக்கம், தேவை
முதலியவற்றின் சாதனமாக உள்ளது. இத்தகைய இலக்கியம்
தன்னகத்தே பல பண்புகளையும், பல செல்நெறிகளையும் பல
கருத்து நிலைகளையும் கொண்டிருக்கிறது. அவற்றை ஆராயவும்
விளக்கவும் திறனாய்வு உருவாகிறது.
இத்திறனாய்வு பல அணுகுமுறைகளையும்,
வகைகளையும் கொண்டிருக்கிறது. இவற்றைக் கண்டறிவது,
திறனாய்வின் ஆழமான பண்புகளையும் பரந்துபட்ட பாதைகளையும் அறிவதற்குத் துணை செய்யும். ஏனெனில் திறனாய்வு என்பது ஒற்றைத்தன்மை அல்லது ஒற்றைப் போக்குக் கொண்டதன்று; பன்முகமான பண்புகளும் வழி முறைகளும் கொண்டது. எனவே முதலில் திறனாய்வின் வகைகளை இங்கே அறிவது மிகவும்அவசியமாகிறது. |