|
|
|
2.4 பகுப்புமுறைத் திறனாய்வு |
|
|
|
மனித அறிவுகளில் அடிப்படையானது,
பகுத்தல், தொகுத்தல் ஆகிய அறிவு ஆகும். உலகத்துப் பொருள்களை ஒற்றுமை கருதியும்,
அவற்றிற்கிடையேயுள்ள சிறப்புப் பண்புகள் கொண்டு வேற்றுமை கருதியும், பகுத்தும்,
தொகுத்தும் பார்ப்பது அறிதலின் பண்பு ஆகும்.
இலக்கியத் திறனாய்விற்கும் இது வேண்டப்படுகின்ற
பண்பாகும்.
பகுப்புமுறைத் திறனாய்வு
(Analytical Criticism) என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின பண்புகள
அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக்
காண்பது ஆகும். இவ்வாறு பகுத்தாய்வு செய்யும் போது, ஆய்வு செய்யப் படுகின்றவற்றின்
முழுமை அல்லது தொகுதிக்கு முரணானதாகவோ, அதைச் சிதைப்பதாகவோ இருக்கக் கூடாது.
உண்மையில் இதன் நோக்கம் என்னவென்றால் முழுமையின்
சிறப்பினை அல்லது பண்பினை அதன் கூறுகளையும் உட்கூறுகளையும் கொண்டு ஆராய்வதாகும்.
ஒன்றுபட்டும், வேறுபட்டும் இருக்கிற தன்மைகளைக் கண்டுகொள்வது என்பது அவ்விலக்கியங்களின்
சிறப்புக் கூறுகளால் புலப்படுகிறது. இத்தகைய பகுப்புமுறை,
அடிப்படையான ஒரு வழி முறையாதலால் திறனாய்வுக்கு வேண்டப்படுகின்ற ஒரு வழிமுறையாக
உள்ளது. |
|
|
|
பகுப்புமுறைத் திறனாய்வுக்கு ஒர் எடுத்துக்காட்டு |
|
திறனாய்வாளர்களில்
சி.சு.செல்லப்பாவிடம் இத்தகைய திறனாய்வு காணப்படுகிறது. மௌனியின்
மனக்கோலம் என்ற தலைப்பில் எழுத்து எனும் இதழில்
வந்த அவருடைய கட்டுரைகள், மௌனியின் சிறுகதைகளிலுள்ள உத்திகளையும் உண்மை நிலைகளையும்
வேறுபடுத்தி விவரிக்கின்றன. இதன் மூலமாகத் தமிழ்ச் சிறுகதைகளின் பண்புகளையும்
சிறப்புகளையும் அவர் ஆராய்கிறார். இதனை ‘அலசல் முறைத் திறனாய்வு’ என்று அன்றைய
திறனாய்வாளர்கள் அழைத்தனர். மேலும், அவருடைய தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
என்னும் நூல், வ.வே.சு.ஐயரின்
குளத்தங்கரை அரசமரம் முதற்கொண்டு
பல சிறுகதைகள் எப்படி ஒன்றன்பின் ஒன்றாகக் கதைகூறும் பண்புகளில் மாற்றமும்
வளர்ச்சியும் பெற்றிருக்கின்றன என்று விவரிக்கின்றது. |
|
2.4.1 இன்றைய ஆராய்ச்சித்துறையும் பகுப்புமுறையும் |
|
|
|
பகுப்புமுறைத் திறனாய்வு,
கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சிகளில், ஆய்வேடுகளில்,
வசதி கருதிப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு படைப்பாளியின்
புனைகதை உத்திகள் என்றால் பாத்திரப் படைப்பு,
நோக்குநிலை, கதைப் பின்னல், தொடக்கமும் முடிவும், வருணிப்பு, மொழி நடை என்று
மேல் அளவில் பல பகுப்புகளைக் கொண்டு ஆராய்கின்றனர். இத்தகைய போக்கில்
பாத்திரப் படைப்பு என்னும் தலைப்பின் கீழ்,
ஒருநிலைப் பாத்திரம், மாறுநிலைப் பாத்திரம், தலைமைப் பாத்திரங்கள், துணைமைப்
பாத்திரங்கள், உடனிலை - எதிர்நிலைப் பாத்திரங்கள் மற்றும் ஆண், பெண், இளையோர்,
முதியோர் என்ற உட்பகுப்புகளையும் கொண்டு ஆய்வு செய்கின்றனர். ஆனால்,
குறிப்பிட்ட இலக்கியத்தின் மொத்தமான
கட்டமைப்புத் திறனையும் பாத்திரப் படைப்புகளின் சமூக இருப்புகளையும் மெய்ப்
படுத்தாமல் வெறுமனே பகுத்துச் சொல்லும் இத்தகைய போக்கு இயந்திரத்தனமாகவும்,
பல சமயங்களில் மிகையாகவும் அமையக் கூடும். அதன் போது சலிப்பும் சொல் விரயமும்
உடையதாக ஆகி விடுகிறது. தேவையறிந்து அளவறிந்து பயன்படுத்துகிறபோது திறனாய்வுக்கு
அது அணிசேர்க்கவல்லதாக அமையும். |