ஓர் இலக்கியத்தைத் திறனாயும்போது, ஆய்வுப்பொருள்
என்ன என்பதற்கு ஏற்ப அணுகுமுறை மாறும். காட்டாக,
திருக்குறள் என்பது ஓர் இலக்கியம். ஆனால் அதனுள்
நூற்றுக்கணக்கான ஆய்வுப்பொருள்கள் உண்டு. திருக்குறளைத்
திறனாய்ந்த சான்றோர்கள் திருக்குறளில் ஆராய்ந்து கண்ட
எண்ணிறந்த ஆய்வுப்பொருள்களுக்கும் அவற்றிற்குரிய
அணுகுமுறை என்பது உண்டு. அதேபோல, அகம், புறம், அறம்,
பக்தி, காவியம், சிற்றிலக்கியம் என்ற ஒவ்வோர் இலக்கிய
வகைக்கு ஏற்பவும் ஆய்வின் அணுகுமுறை மாறும். மேலும்
தேவை, நோக்கம், கொள்கை முதலியவற்றிற்கு ஏற்பவும்
இது மாறும் தன்மையுடையது.
இலக்கிய அணுகுமுறைக்குப் பின்புலமாக உள்ள
கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவை ஒன்றாக இருப்பினும்
வழிமுறை, உத்திகள் முறையியலுக்கு உரிய கருவிகள்,
கருதுகோள்கள், முடிபுகள் வேறுபாடாக இருக்கலாம். எனவேதான்
கவிதைத் திறனாய்வு, நாவல் அல்லது சிறுகதைத் திறனாய்வு என்று
வேறு வேறு முறைகளில் திறனாய்வு அமைந்துள்ளது.
சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதே சரியான
திறனாய்வுக்கு வழிவகுக்கிறது. பொருத்தமான
அணுகுமுறையிலிருந்துதான் திறனாய்வின் வெற்றி தொடங்குகிறது
எனலாம்.
|