3.3 அழகியல் அணுகுமுறை

    இலக்கியத் திறனாய்வில், அழகியல் அணுகுமுறை (Aesthetic Approach) புகழ்பெற்றதும் பழைமையானதுமான ஓர் அணுகுமுறையாகும். மேலும், வரையறுக்கப்பட்ட எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் மனரீதியான ரசனைகளையும், அவற்றின் வெளிப்பாட்டையும் பதிவு செய்வதால், பலராலும் இவ்வணுகுமுறை, ஆர்வம் காட்டப்படுகிறது. எனவே, பல அணுகுமுறைகளைப் பற்றிப் பேசவிருக்கிற நாம், முதலில் அழகியல் அணுகுமுறை பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
 

  • அழகியல்

    இலக்கியத்     திறனாய்விற்கு அழகியல் என்பது அடிப்படையாக அமைகிறது. அழகியல் என்பதனை ரசனை என்றும் குறிக்கலாம். ஒரு சாதாரண மனிதனுக்குத் திறனாய்வுத் திறன் இல்லாவிட்டாலும், ஒரு படைப்பை ரசிக்கும் திறனாவது இருக்கும் ; இருக்க வேண்டும். இந்த ரசனையே பல்வேறு திறனாய்வுகளுக்கு     அவனை     இட்டுச்     செல்லும். இது மொழியால் அமைவதல்ல: மனதால் அமைவது.

    இங்ஙனம் அழகியல் என்பது, கலைப்படைப்பின் அழகினை அனுபவிக்கும் ஒவ்வொரு வாசகருக்குள்ளும், ஒரு மனமகிழ்வு, மன அமைதி, ரசிப்புத் தன்மை உருவாகியிருப்பதைக் குறிக்கின்றது.
 

  • படிப்பவரின் பங்கீடு

    ரசனைமுறை, அழகியல் இரண்டுமே அடிப்படையில் ஒன்றுதான். அழகியல் அணுகுமுறையானது படைப்பவரை விடப் படிப்பவரின் பங்கீட்டை வெளிக்காட்டுகின்றது. இதற்குக் காரணம், படிப்பவரின் வாழ்க்கை அனுபவங்கள், அவர் படிக்கும் படைப்பிலே சந்திக்கும் அனுபவங்களோடு ஒத்துப்போவதுதான் எனலாம். வாசகர் ஒருவர் தன் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, படைப்பாளி ஒருவர் தம் படைப்பில் படைத்துள்ளார் எனில், அதைப் படிக்கும் வாசகர் ஓர் இனிய அனுபவத்தைப் பெறுவார் என்பதில் வியப்பில்லை.
 

3.3.1 அழகியல் - வரையறை
இம்மானுவேல் காண்ட்

    அழகியலை மேலைநாட்டு அறிஞர்கள் பலர் வரையறை செய்துள்ளனர். அழகியல் அணுகுமுறைக் கோட்பாட்டில் முன்னோடியாகத் திகழும் இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞர் “புலனின்பமும் அழகும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அழகு என்பது தற்செயலான மற்றும் தனிப்பட்ட புலன் இன்ப நுகர்ச்சிகளைவிட மேன்மையானது. மனித அங்கீகாரத்தின் மீது உயர்வானதொரு உரிமையும் இதற்கு உண்டு. இந்த அழகை அனுபவிப்பது என்பது இயற்கையையும், இயற்கை வடிவத்திலுள்ள முறையையும் அறிதல் என்பதோடு உறவு கொண்டது” என்கிறார். மேலும், அழகியல் அணுகுமுறை ‘சுயாதிக்கமானது’ (Autonomy) என்பதும் அவர் கருத்தாகும்.

    வாழ்க்கை என்பது அனைவரும் ஒரே மாதிரியாக ருசிக்கத்தகுந்த ஒரே வகைப் பண்டமல்ல. அவரவருக்குத் தனித்தனியான அனுபவங்களும், ரசனைகளும், விருப்பு வெறுப்புகளும் உண்டு. பலருக்கும் ஒத்த உணர்வுகள் ஏற்பட வழி உண்டெனினும் அவை நீடிக்கும் தன்மை உடையன அல்ல. இங்ஙனமான வாழ்வில் தனிப்பட்ட ஒருவரால் அளிக்கப்பெறும் படைப்பு, பலராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் அல்லது வெறுக்கப்படும் ஒன்றாகவும் கருத வழியுண்டு. இது அழகியல் அனுபவத்தில் இயற்கையாகவும் தவிர்க்க முடியாததாகவும் அமைகிற ஒன்று. இவ்வாறு அமெரிக்கக் கலைக்களஞ்சியம் ( Encyclopedia Americana ) அழகியல் பற்றி வரையறை செய்கிறது.

3.3.2 அழகியல் அணுகுமுறை விவாதம்

    திறனாய்வில் ஏற்படும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று, உருவம் - உள்ளடக்கம் பற்றியதாகும்.     இவற்றுள்     எது முதன்மையானது எது முக்கியமானது - என்பது நீண்ட காலமாக இருந்து வரும் விவாதம் ஆகும். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை; இரண்டும் தத்தம் அளவில் முக்கியமானவையே என்று பலராலும் சொல்லப்பட்டு வந்தாலும், இந்தப் பிரச்சினை இன்னும் பேசப்பட்டுத்தான் வருகிறது.
 

  • சொல்லும் விதம்

    உருவமே முதன்மையானது ; அதுவே இலக்கியத்திற்குக் கலையழகைத் தரக்கூடியது என்பதும், இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படி சொல்லப் பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும் என்பதுமே அழகியல் திறனாய்வு பற்றிய விவாதத்தின் அடிப்படையாகும்.

    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்துள் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
    பரத்துள் மறைந்தது பார்முதற் பூதம்
திருமூலர்

என்ற திருமூலர் பாடலில், உருவத்தைப் பிரதானப்படுத்துபவர்கள், மயக்கம் தரும் இந்நடையினை ரசித்தலே இதில் முக்கியம் என்பர். உள்ளடக்கத்தினை மையப்படுத்திக் காண்கின்றவர்கள் இதில் பொதிந்துகிடக்கின்ற தத்துவத்தை எடுத்துக்காட்டுவர். ஆனால், உருவமே பிரதானம் என்று வாதிடுவோர், இதன் பொருளில் ஆழ்ந்து விடாமலும் அக்கறை செலுத்தாமலும் கவிதை அழகிலும், நடையழகிலும் கவர்ந்து போகின்றனர்.
 

  • உள்ளடக்கமும் உருவமும்

    உருவத்தையும் அதன் அழகையும் மையப்படுத்தும் அழகியல் அணுகுமுறை உள்ளடக்கத்தால் சிறப்புப் பெறும் அறநூல்களை - நீதி சொல்லும் இலக்கியங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர். நீதி சொல்பவை கலைத்தன்மையுடையன அல்ல என்றால் குறளும் நாலடியாரும் கலைத்தன்மை உடையன அல்ல என்றாகிவிடுமே. ஆனால், அப்படி அவை ஆவதில்லை. அவற்றில், உவமையும், உருவகமும், குறியீடும், சொல்லும் ஓசையும் சரியான அளவில் கலந்து இருக்கின்றன. எனவே, உள்ளடக்கம்தான் கட்டுமானப் பணிக்கான அமைப்பைத் தருகிறதே தவிர உருவத்திற்காக யாரும் உள்ளடக்கத்தினைப் புகுத்திக் கொள்வதில்லை. இது, குழந்தை பிறந்த பிறகு அதற்கு உயிரை ஊட்டுவது என்று சொல்வது போலாகும்.

    ஒரு கலைப்படைப்பு, பொருளில்லாது இருக்குமானால் அது உயிரற்ற உடம்புதான். வெறும் உடம்பினால் என்ன பயன்? உயிர் இல்லாத உடம்பின் உறுப்புகளை எத்தனைக் காலம், என்ன கருத்திற்காக ரசித்துக் கொண்டும், பாராட்டிக் கொண்டும் இருக்கமுடியும்? இவையெல்லாம் உள்ளடக்கத்தினர் வாதம் ஆகும். மேலும்,

    தத்தித்தா தூதூதி தாதூதித் தத்துதி
    துத்தித் துதைதி துதைத்ததா தூதூதி
    தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
    தெத்தாதோ தித்தித்த தூது

என்னும் செய்யுளில், தகர மெய் விளையாடுகின்றது. ஒரே ஒரு சிறு செய்தியைக் கூறும்    இதை எந்த மதிப்பீட்டிற்காகப் பாராட்ட முடியும்? உருவத்தின் பிரமிப்பில் எத்தனை நாள் ஆழ்ந்து போக முடியும்.

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்     நிற்க அதற்குத் தக

என்ற குறளில் உள்ளடக்கத்திலும் குறைவு வரவில்லை. அதனை எடுத்துச் சொல்லும் கவிதையழகிலும் குறையவில்லை.

    எனவே, உருவம்-உள்ளடக்கம்     இவற்றுள் எது முதன்மையானது என்பதல்ல பிரச்சனை. உண்மையில் இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. தத்தம் அளவில் முக்கியமானவை. உருவமும், உள்ளடக்கமும் அழகியலின் பகுதிகளாகும்.     உருவத்தில்     சொல்லிலும் ஓசையிலும் காணக்கூடிய உணர்ச்சி வடிவங்கள், உவம, உருவகங்கள், ஆர்வத் தூண்டல்கள் முதலியவை அழகியல் கூறுகளாக அமைகின்றன .ஆயின், அழகியல் அல்லது ரசனைமுறைத் திறனாய்வு, உள்ளடக்கத்தில்    கவனம் செலுத்தாமல்,    உருவத்தின் நேர்த்தியிலேயே கவனம் செலுத்துகிறது.

3.3.3 அழகியலும் கவிதையும்

    கவிதையைப் பொறுத்தமட்டும், என்ன என்பதைவிட எப்படி என்பதுதான் சிறப்பானது. மனித அனுபவத்தையே மனிதனுக்கு எடுத்துச் சொன்னாலும் அழகான மொழியில், அவனுக்குப் புரியும் மொழியில், அவனுக்குப் பிடித்த முறையில், என்றென்றும் அவன் நெஞ்சத்தில் அக்கவிதை உல்லாசமாக உலாவித் திரியும்படி செய்யவல்ல ஆற்றல் கவிதைக்கு உண்டு. இச்சிறப்பு, கவிதைக்கு வாய்த்திருப்பதால் எல்லோரும் அதைப் பாராட்டுகின்றனர். பாட்டைப் படித்தால் எத்தனை சுகம்! எத்தனை இன்பம்! சந்த ஒலியின் பெருமுழக்கத்தில் செவி நனைகின்றது.
 

  • கலையழகு

    சாதாரணமாக, இயல்பாக ஒரு செய்தி சொல்லப்படுமானால், அதனைக் கேட்பவர் விரும்பிக் கேட்பதில்லை. கேட்பவரை, எழுந்திருக்கவிடாமல் ஈடுபாடு கொள்ளச் செய்வது அதனுடைய அழகு சார்ந்த பகுதியாகும். கவிதைக்கு அல்லது இலக்கியத்திற்கு அந்த இயல்பு உண்டு. இலக்கியம், இலக்கியம் அல்லாதது (Non-literary) என்ற வேற்றுமைக்குக் காரணம், கலையழகே யாகும். எனவே அழகியல், கவிதைக்குக் கவிதைத் தன்மையைத் (Poeticalness) தருகிறது.
 

  • வழங்கப்படும் முறை

    நாம் வெளிப்படையான உண்மைச் செய்தியைப் படிக்க மட்டுமா கவிதையை வாசிக்கிறோம். அது வழங்கப்படுகின்ற முறை, அதன் நயம் மற்றும் இன்பத்திற்காகவும்தானே வாசிக்கிறோம். பாடல்களில் பயின்று வரும் சந்த விளையாட்டுகளையும், ஓசையின்பங்களையும் கவனித்தால்,     எத்தனை     முறை வேண்டுமானாலும் வாய் சலியாது, செவி சலியாது, மனமும் சலியாது படித்துக்கொண்டே இருக்கலாம் போலத் தெரிகிறது. இது அழகியல் அணுகுமுறை அல்லது ரசனைமுறைத் திறனாய்வின் குரலாகும்.

3.3.4 டி.கே.சிதம்பரநாதனாரும் ரசனையும்

    “கவிக்கு விஷயமல்ல - உருவமே பிரதானம்”, இது ரசனைமுறைத் திறனாய்வின் முன்னோடியும், அதனை ஓர் இயக்கம் போலவே நடத்தியவருமான டி.கே.சிதம்பரநாத முதலியாரின் அறிவிப்பு. மேலும் அவர், ரசனை முறைகளிலேயே இலக்கியத்தைப் பார்த்தார்,    பேசினார், படைத்தார். இதனால்தான் ரசிகமணி டி.கே.சி. என்ற பெருமையும் பெற்றார்.
 

  • கவிதையின் அழகு

    இலக்கிய ரசனைக்குக் ‘கவிதையே’ உகந்ததாக இவருக்குப் பட்டது. எளிமை, சந்தம், தாளம், லயம், உணர்வு இவையே, இவருடைய ரசனை முறைக்கு அடிப்படைகளாகும். இவற்றிற்கெல்லாம் கவிதையே இடம் தருவதாக இவருக்குத் தோன்றியது. மேலும் கவிதையின் அழகில் லயித்துப்போய்ப் பொருள் விளக்கம் தருவதும் இவரது வழக்கமாகும். டி.கே.சி. விஷயம், உணர்ச்சி ஆகியவற்றை உருவத்தின் காரியங்களே என்கிறார். சாமானியமாய் அல்லது காரியம் ஒன்றைக் கண்ட மாத்திரத்தில், உள்ளத்தில் எழுகிற உணர்ச்சியை அற்புதரசமாக அவர் வருணிக்கிறார். இவ்வாறு அற்புத ரசம் எழுகின்றபோது அதற்கு உருவம் ஏற்பட்டுக் கலை பிறக்கிறது என்கிறார்.
 

  • கவிதையில் எளிமை

    ரசனை முறைத் திறனாய்வின் இன்னொரு முக்கியமான பண்பு எளிமையாகக் கவிதைகள் அமையவேண்டும் என்பதாகும். ரசிப்பதற்குச் சிரமம் இருக்கக்கூடாது. உடனடியாகப் புரிந்துவிடும் படி அமைக்க வேண்டும். இவ் அளவுகோலையே டி.கே.சி கொண்டிருந்தார். இக்காரணத்தினாலேயே சங்க இலக்கியத்தை இவர் புறக்கணித்தார். நீண்ட காலங்களின் இடைவெளி காரணமாகச் சங்க இலக்கியச் சொற்கள் கடினமாக இருக்கின்றன. பொருள் புரிதலிலும் சிரமம் இருக்கின்றது என்பது இவர் வாதம். மேலும், தாளம், லயம், சந்தம் முதலியன இல்லாவிட்டால் குரல் எழுப்பி ரசித்துச் சுவைக்க முடியாது என்பது இவருடைய கருத்தாகும்.

3.3.5 அழகியலில் மனப்பதிவு

    அழகியல் அணுகுமுறையில் பதிந்துள்ள உள்தோற்றம், மனப்பதிவு ஆகும். இது, கலைஞனின் அனுபவங்கள் ஒன்று மட்டும், அதிகமாக அனுபவிக்கப்பட்டு, சுக அனுபவம் பெறுகிற நிலைக்குத் தள்ளப்படுகின்ற ஒரு நிலை எனலாம். ஏன், எப்படி என்ற காரண காரியங்களுக்கு உட்படாதது. இது, தனிப்பட்ட ஒருவரின் மனதைப் பொறுத்தது. மனப்பதிவு முறை என்பது நேரிடையான ஒரு படைப்பின் மீதான பொருளைத் தகர்த்து வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்லவும் செய்கிறது. ‘தனியொருவனுக்கு     உணவில்லையெனில்     ஜகத்தினை அழித்திடுவோம்’    என்கிற     பாரதியின் கோபத்தைப் பசுமைப்புரட்சிப்     பக்கம்    திருப்பி    விட்டவர்களும் இத்தகையவர்களே. அவர்கள் பாரதியின் கூற்றை வைத்து, ஜகத்தினை அழிக்க    முற்பட்டால்    தினமும் அல்லது ஒவ்வொரு    நொடியும்    உலகத்தை    அழித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று கிண்டல்பேசி, பாரதி சொன்னது, ஜகம் என்ற காட்டை அழித்துப் பயிர்களை உண்டு பண்ணிப் பசித்தவர்களுக்குச் சோறு போடவேண்டும் என்பதுவே என்று புதுப் பொருள் விளக்கம் அளித்தார்கள். இப்போக்கு, சங்க இலக்கியத்தினையும் விட்டுவைக்கவில்லை. சங்க இலக்கியத்தின் திணை     என்பது, அடிப்படையில் நிலமும், பொழுதும் இயற்கையுமெனக் குறிக்கப்பட்டது. இயற்கையின் பதிவு தானே தவிர, தலைவன் தலைவிக்குக் கூறியது, தலைவி தோழிக்குக் கூறியது என்பதெல்லாம் பின்னால் வந்தவர்களின் தலையீடு என்றார்கள்.
 

    மேலும், தாளம், லயம், எளிமை என்ற அளவுகோல்களையும் சொந்த விருப்பு வெறுப்புகளையும் கொண்டு இவர்கள் திருக்குறள் என்பது     இலக்கியமே அல்ல என்று கூறுவதற்குக்கூடத் தயங்கவில்லை. ஆனால் இங்ஙனம் குறிப்பிட்டது காழ்ப்புணர்வோடு கூடிய சிலரது மனப்பதிவு முறையே யாகும்.