|   | 
 4.1 உருவவியல் அணுகுமுறை  | 
 
 
    | 
    | 
 
  
 |   | 
  
      இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகளில் மிகப் பரவலாகச்
செல்வாக்குப் பெற்றிருப்பது உருவவியல் அணுகுமுறையாகும்.
படைப்பு இலக்கியத்தின் வடிவத்தையும், அதன் நேர்த்தியையும்
ஆராய்கின்ற உருவவியல், மேலைநாடுகளில் தோன்றி வளர்ந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் உருவத்தின் அழகையும் உத்திகளையும்
பற்றிப் பார்க்கின்ற பார்வை நீண்ட நாளாக இருந்து வந்திருக்கிறது.
அவை பற்றிய செய்திகளை இங்கு காண்போம்.      
   உருவம் (Form) என்பது வடிவம் அல்லது தோற்றம் ஆகும்.
 இலக்கியத்திற்கு வடிவத்தையும் அதன் மூலமாக அதற்கு ஓர்
 அழகையும் தருவது இது. இலக்கியத்தை வாசிப்பதற்கோ அல்லது
 ஆராய்வதற்கோ நுழைகின்ற போது முதலில் எதிர்ப்படுவது
 உருவமே ஆகும். உருவத்தின் மூலமாகவே அதனைச் சுவைக்கத்
 தொடங்குகிறோம். இங்ஙனம், உருவத்தையே பிரதானமாகக்
 கொண்டு உருவத்தையே இலக்காகக் கொண்டு அணுகுவது
 உருவவியல் அணுகுமுறை எனப்படும். அழகியல் பார்வை
 அல்லது ரசனை முறைப் பார்வை என்பதனை முன்வைத்த
 டி.கே.சிதம்பரநாதன் அவர்களும், அவர் சார்ந்த இலக்கியத்
 தொட்டிக் குழுவினரும் இலக்கியத்தில் உருவத்தின் அழகு
 பற்றியே பேசினார்கள். ஆனால் மேலைநாடுகளில் தோன்றிய
 உருவவியல் ஆராய்ச்சி, மேற்குறிப்பிட்ட இத்தகைய அழகியல்
 பார்வைக்கு முறையான கட்டுக்கோப்பையும், கொள்கையையும்
 வடிவமைத்திருக்கிறது.  
   | 
 
 
    | 
    | 
 
 
 |   | 
 
 
       உருவம் என்பது, ஒரு படைப்பில் செயல்பாட்டளவில்
 ஒன்றிணைந்த பல உறுப்புகளின் (Functional Constituents or
 organs) ஒரு மொத்த வடிவமேயாகும். தொல்காப்பியரின்
 செய்யுளியல், செய்யுள் என்பது மாத்திரை, எழுத்து, அசை, சீர்
 முதலிய இருபத்தாறு உறுப்புகளின் ஒன்றிணைந்த ஒரு வடிவமே
 என்று பேசுகிறது. ஆனால் இவற்றில் திணை, கைகோள் முதலிய
 உள்ளடக்கக் கூறுகளும் உண்டு. இவை அனைத்தும் தம்முள்
 ஒன்றோடு ஒன்று இணைந்து ஒன்றற்கு அடுத்து ஒன்று என 
 வளர்ந்து ஒரு முழுமையை உருவாக்கும். உள்ளடக்கத்திற்கு ஒரு
 தோற்றமும் வடிவும் தரும். இத்தகைய உறவுகளையும்
 செயல்களையும் உருவவியல் ஆராய்கிறது. 
    | 
 
 
    | 
    | 
 
  
 |   | 
 4.1.1 உருவவியல் வரையறை | 
 
 
 |   | 
   | 
 
 
  | 
 
 
  | 
 
  
 |   | 
 
      ‘கலை- ஓர் உத்தியாக’     என்று     ருசிய     அறிஞர் 
ஷ்க்லோவஸ்கி 1916இல் கட்டுரை ஒன்று எழுதினார். “கலை என்பது அடிப்படையில் ஒர் உத்திதான். உத்திகளின் மொத்தமே கலையாக வடிவங் கொள்கிறது” என்று பேசிய இக்கட்டுரை உருவவியலின் கொள்கைக்கு அடிப்படையை வகுத்துத் தந்தது.
  
   | 
 
 
 |   | 
 
 
 |   | 
 
 - கலையும் உருவவியல் பண்பும்
    | 
 
 
 |   | 
 
      ஒரு கலை உருவாவதற்கு எத்தனையோ மூலாதாரப் பொருட்கள் தேவை, அது ஒலியாக இருக்கலாம்; சொல்லாக  இருக்கலாம்; அல்லது அது போன்ற வேறொன்றாக இருக்கலாம். கலையியல் படைப்பாக உருவாவதற்கு முன் இந்த மூலாதாரப் பொருட்கள் எல்லாம் உருவம் சாரா உறுப்புகள் என்றும், கலை வயப்படா     உறுப்புகள்     என்றும் அழைக்கப் பெறும். கலைப்படைப்பாக     ஆவதற்குரிய     சிறப்பான பண்புகள் தனித்தனியாக உள்ள அவ்வுறுப்புகளில் இல்லை. ஆனால் அவ்வுறுப்புகள் குறிப்பிட்ட ஒரு சீர்மைத் தன்மையுடன் ஒன்றிணைகிற போது, அவற்றின் ஒன்றிணைந்த செயல்பாடுகளிலும் பயன்பாடுகளிலுமே உருவவியல் பண்பு வெளிப்படுகின்றது.
  
   | 
 
 
 |   | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
 
       உருவம்     என்பது, உறுப்புகளின் ஒன்றிணைந்த  
	செயல்பாடுகளின் வெளிப்பாடு; அது, நடையியல் உத்திகளின் ஒரு 
	ஒட்டு மொத்தமாம் என்று ஷ்க்லோவ்ஸ்கி சொல்லுவார். மேலும், 
 ரோமன் யாகோப்சன் எனும் ருசிய அறிஞர், இதனைக் கூறும் 
	போது, “இலக்கிய ஆராய்ச்சியின் உண்மையான தளம், இலக்கியம் 
	அல்ல; ஆனால் இலக்கியத்தனமே (Literariness) ஆகும்“ 
	என்கிறார். அதாவது குறிப்பிட்ட ஒரு படைப்பை எது- எந்தப் 
	பண்பு- இலக்கியமாக     ஆக்கியிருக்கிறது என்பதேயாகும். 
	உருவவியலுக்கு இத்தகைய பார்வையே அடித்தளமாக அமைகிறது. 
   | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
  
   யாகோப்சன் கூறுகிற இலக்கியத்தனம் (இலக்கியப்பண்பு)	
 என்பது உருவவியல் கொள்கையின் முக்கியமானதொரு
	பகுதியாகும். மொழி சார்ந்த குறிப்பிட்ட ஓர் உருவத்தை, ‘இலக்கியத் தன்மை உள்ளது, இலக்கியத் தன்மை இல்லாதது’ 
	என்று பாகுபடுத்திப் பார்த்து இலக்கியத் தன்மை என்பதனை 
	ஒரு சிறப்பியல் பண்பாக (distinctive character) இன்னொரு 
	ருசிய உருவவியல்காரராகிய தின்யனெவ்  பேசுகிறார். கலை 
	பற்றி அக்கறை கொள்கிற எந்த ஆராய்ச்சித் திட்டமும் 
	கலையையும் கலையல்லாததையும் வேறுபடுகின்ற    சிறப்பியல்	
 பண்புகளை உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும் என்கிறார் அவர். 
   | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
  | 
 
 
 |   | 
 
       மேலும் சிலர் கூறுகையில், உருவம் வேறு, இலக்கியம் வேறு
 இல்லை என்பார்கள். உருவம் பற்றிய கருத்துநிலை, இலக்கியம்
 பற்றிய கருத்து நிலையாக அதனோடு ஒன்றிணைந்து விட்டது;
 ஆகவே இலக்கியத்தின் படைப்பாக்க முறையையும், அதன்
 துணைமைச் செயலாகிய அழகியல் நிலையிலான புலப்பாட்டையும்
 புரிந்து கொள்ள வேண்டும். இதன் எல்லைக்குள் படைப்பாளி
 இல்லை. படைப்பாளியின் பின்புலங்கள் இல்லை. பனுவலும் (Text)
 அதற்குட்பட்ட உறுப்புகளும், உத்திகளுமே அதன் எல்லைக்குள்
 இருப்பவை என்றாகி விடுவதாக உருவவியல் விளக்குகிறது. 
    | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
 4.1.2 உருவவியல் வரலாறு | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
 
       உருவவியல், ருசியாவில் 1917இல் உருக்கொண்டது.
 இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில், மிகுந்த
 செல்வாக்கைப் பெற்றிருந்த இக்கொள்கை, ருசிய வரலாற்றிலிருந்து
 பிரிக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இதன் வரலாற்றை முதன்
 முதலாக முழுமையாக எழுதி ஆங்கிலம் அறிந்த உலகிற்கு
 விரிவாக அறிமுகப்படுத்தியவர் விக்டர் எர்லிஹ் என்பவர். இவர்
 இதனை ருசியாவில் நடந்த புரட்சிக் காலத்தின் குழந்தை என்றும்
 அதன் பிரத்தியேகமான அறிவுலகச் சூழ்நிலையின் ஒன்றிணைந்த
 ஒரு பகுதியாக இது ஆகிவிட்டது என்றும் வருணிக்கின்றார்.
 உருவவியல் தோன்றுவதற்குக் களமாக இருந்தவை மொழியியல்
 பற்றிய சிந்தனைகளும் கவிதையில் மொழிநிலைகளின் இடம்
 பற்றிய சிந்தனைகளும் ஆகும். 
    | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
  | 
 
 
 |   | 
 
 
       விக்டர் ஷ்க்லோவஸ்கி, போகிஸ் எய்ஹென்பாம்,
 ரோமன்யா கோப்சன், தொமோஷோவ்ஸ்கி, யுரிதின்யனொவ்
 ஆகியோர் உருவவியலின் முன்னோடிகளாவர். இவர்களே
 உருவவியல் கொள்கைகள் வகுத்தவர்கள். ஆனால், இவர்கள்
 யாரும் தம்மை உருவவியல்காரர்கள் என்றோ தம் கொள்கையை
 உருவவியல் என்றோ அழைத்துக் கொள்ளவில்லை. ஆயினும்
 இவர்தம் கொள்கையின் ஆதார சுருதி  உருவம் பற்றியது
 ஆதலின், இவர்தம் கொள்கை உருவவியல் கொள்கை என்றே
 அழைக்கப்படுகிறது. உருவவியல் ருசியாவில் தோன்றினாலும், ஒத்த
 சூழ்நிலைகளின் பின்னணியில் இது பிற மேலைநாடுகளில்
 வெவ்வேறு வடிவங்களில் இருந்தது. எனவே இது மிக வேகமாக
 செல்வாக்குப் பெற்றது. செக்லோஸ்லோவேகியா, பிரான்சு, இத்தாலி,
 அமெரிக்கா என்று பல நாடுகளுக்குப் பரவியது. 
    | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
	4.1.3	உருவவியலின் சிறப்புக் கூறுகள் | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
 
       குறிப்பிட்ட     வித்தியாசமான     ஒலிப்பின்னல்கள்,
 குறிப்பிடும்படியான சொற்சேர்க்கைகள், புதிய சொல் வழக்கு,
 சொற்பொருள் மாற்றம், உவமங்கள், உருவங்கள், படிமங்கள்,
 குறிப்புச் சொற்கள், ஒலி அல்லது சொல் திரும்ப வருதல்
 போன்றவை, மற்றும் இவற்றோடு பலவிதமான உறுப்புகளும்
 ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிற விதத்தில் காணப்படுகின்ற
 கவனிக்கத்தக்க தன்மைகள் ஆகிய இவை உருவவியலின்
 செயல்பாட்டளவிலான சிறப்புக் கூறுகள் ஆகும். இவை எப்படி
 அல்லது எந்த  வழிமுறையில் இலக்கியப்     பண்பாக
 உருக்கொள்கின்றன?  சொற்களையும்,  தொடர்களையும் மட்டுமல்லாமல், நடைமுறையில்  வெளிப்படையாகவும்,
 உடனடியாகவும்     தோன்றக்கூடிய அனுபவம் முதற்கொண்ட
 மூலாதாரப் பொருட்களை, அதாவது பழகிய பொருட்களை,
 பழக்கமிழக்கச் செய்தல் (Defamiliarize) என்பதன் மூலம்
 இலக்கியப் பண்பு உருக்கொள்வதாக இவர்கள் சொல்கிறார்கள்.
 தமிழ் இலக்கணப் பின்னணியிலிருந்து சொல்வோமேயானால், இது,
 இயல்பு வழக்கு என்பதனைச் செய்யுள் வழக்காக மாற்றுவது
 போலாகும். 
    | 
 
 
 |   | 
   | 
 
 
 |   | 
 
       இலக்கியம் என்பது முக்கியமாக ஓர் உருவமே என்றும்,
 எனவே திறனாய்வு உள்ளிட்ட இலக்கிய அறிவியல் என்பது
 இத்தகைய கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு, உருவத்தின்
 பல்வேறு அம்சங்களையும் பண்புகளையும் அறிவார்ந்து புலப்படுத்த
 வேண்டும் என்றும் உருவவியல் வலியுறுத்துகிறது.   | 
 
 
 |   | 
   |