6.1 ஒப்பியல் அணுகுமுறை

    ஒரு பொருளின் தனித்தன்மைகளை அல்லது சிறப்புகளை அறிவதற்கு, அதனை அதனோடு ஓரளவு ஒத்த இன்னொரு பொருளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது மனித இயல்பே. அதனடிப்படையில் அமைவதுதான் ஒப்பியல் அணுகுமுறை. ஒப்பிட்டுத் திறனாய்வதற்குத் தளமாக இருப்பன, ஒன்றற்கு மேற்பட்ட கலை,     இலக்கியங்கள் மற்றும் அவற்றின் கருத்தமைவுகள் ஆகும். இவற்றுள் பொதுத்    தன்மையும் (commonness) இருக்க வேண்டும்; வேறுபட்ட தன்மையும் (difference) இருக்க வேண்டும். இத்தகைய இலக்கியங்கள் மேல் ஒப்பீடு செய்வது, ஒன்றனைவிட இன்னொன்று சிறப்பானது, உயர்வானது என்று கண்டறியும் நோக்கத்தைக் கொண்டதல்ல. எதனை எடுபொருளாகக் கொண்டிருக்கிறோமோ, அதன் தனித்தன்மைகளை ஆராய்வதுதான் ஒப்பியலின் முக்கிய நோக்கமாகும். கம்பனை மில்ட்டனோடு ஒப்பிடுகிறோம் என்றால், மில்ட்டனின் குறைகளைச் சொல்வதோடு, கம்பனின் உயர்வுகளை மிகைபடச் சொல்வதோ அல்ல; மாறாகக் கம்பனின் திறனையும்,     தனித்தன்மைகளையும்,     கம்பனுடைய சூழ்நிலைகளையும் சொல்வதே நோக்கமாகும். மேலும், ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் தோன்றுகிற இலக்கியங்கள் ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதும், அதே சமயத்தில் படைப்பாளியின் திறத்தினாலும்,     குறிப்பிட்ட சிறப்பியலான சில பண்பாட்டுச் சூழலினாலும் வித்தியாசப்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதும், ஒப்பியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருதுகோள்கள் ஆகும்.

6.1.1 ஒப்பியல் அணுகுமுறை - வரையறை
அறிஞர் ரீமாக்
    இலக்கியங்களை ஒப்பிடுதல் என்பது புதிதல்ல. தமிழில் உரையாசிரியர்களிடமே இது காணப்படுகிறது. அதுபோல் மேலைநாடுகளிலும் பல காலமாக இருந்துவருகிறது. ஆயினும் அது ஒரு தனித்துறையாகவும் திட்டமிட்ட தனி வழிமுறையாகவும் வளர்ந்தது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆகும். பிரான்சு நாட்டில்தான் இது இவ்வாறு முதலில் வளர்ச்சி பெற்றது. பின்னர், ஏனைய நாடுகளுக்கும் இது சென்றது. ஒப்பியல் திறனாய்வு என்பது, வளர்ச்சி பெற்று ஒப்பிலக்கியமாகித் (comparative literature) தனித்துவம் அல்லது தனித்துறையாக ஆனது. ஒப்பியல் அணுகுமுறையை அடித்தளமாகக் கொண்ட ஒப்பிலக்கியத்திற்கு, அமெரிக்க அறிஞர் ரீமாக் (H.H.Remack) தந்துள்ள விதிமுறைகளே, எங்கும் ஏற்றுக் கொள்ளத் தக்கனவாகி உள்ளன. அவை:
(அ) குறிப்பிட்ட ஒரு நாட்டினுடைய இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிட்டுக் காண்பது.
(ஆ) இலக்கியங்கள் எவையும் தனிமையானவை அல்ல; ஒன்றோடு ஒன்று உறவு கொண்டிருக்கக் கூடும். இந்த உறவுகளைக் கண்டறிவது ஒப்பியல்.
(இ) இலக்கியங்களுக்கும் உளவியல், தத்துவம், சமுதாயவியல் முதலியவற்றிற்கும் தொடர்புகள் உண்டு; அவற்றைக் கண்டறிவது.
(ஈ) இலக்கியம் ஒரு கலை. அதுபோல இசை, கூத்து, ஓவியம் முதலிய கலைகள் உண்டு. இந்தக் கலைகளுக்கு இடையேயுள்ள  உறவுகளையும் தாக்கங்களையும் கண்டறிவது.
    இவ்வாறு, ஒப்பீடு என்பது இத்தகைய அடிப்படைக் கருத்து நிலைகளைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், ஒத்த அல்லது இணைவான பண்புகள் (parallelism), தாக்கங்கள் (impact), செல்வாக்கு (influence) முதலியவற்றை இது கண்டறிகிறது. மேலும், மொழிபெயர்ப்பு எனும் துறையை, ஒப்பீட்டு அணுகுமுறை, தனக்கு உறவு கொண்டதாகக் கொள்கிறது. ஏனெனில் மொழிபெயர்ப்பு மூலமாக இலக்கியங்களும், அவற்றின் செல் நெறிகளும், அடிக்கருத்துகளும் (themes) நாடு விட்டு நாடு, மொழிபெயர்ந்து பரவுகின்றன. இலக்கியங்களுக்கு இடையேயுள்ள தாக்கங்களைக் கண்டறியும் மொழிபெயர்ப்புப் பற்றி அறிவது மிகவும் தேவையாகும்.
6.1.2 தமிழில் ஒப்பீடு
வால்மீகி
    
    ஒப்பிடுதல் என்பது தமிழில் மிகப் பழங்காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது. களவு, கற்பு எனும் நெறியைத் தொல்காப்பியர், மறையோர் அல்லது வடவர் நெறியோடு ஒப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார். மொழிபெயர்ப்புப் பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால், ஒப்பீடு ஒரு முறையியலாகத் தமிழில் வளரவில்லை. தேசிய உணர்வின் (Nationalism) தூண்டுதலால் தான் ஒப்பிடுதல் இங்கே வளர்ச்சி பெற்றுள்ளது என்று சொல்ல வேண்டும். இந்திய விடுதலை வேண்டிப் போராடியவர்களில் ஒருவராகிய வ.வே.சு.ஐயர் “Kamba Ramayana - A study” என்ற நூலை (1923) எழுதினார். இது, கம்பனை வால்மீகியுடனும் மில்டனுடனும் ஒப்பிடுகிறது. ஒப்பிட்டுக் கம்பனின் பெருமையை விதந்து பேசுகிறது. ( விதந்து-வேறுபடுத்தி )
தாகூர்
    
    தமிழிலக்கியம் பற்றிய ஒப்பீடுகளில் இந்நூலே முதலாவது என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, தொ.மு.சி.ரகுநாதன், பாரதியையும் ஷெல்லியையும் ஒப்பிட்டு நூல் எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணன் கம்பனும் மில்டனும் எனும் நூல் எழுதினார். கலாநிதி கைலாசபதி பாரதியையும் தாகூரையும் ஒப்பிட்டு இருமகா கவிகள் என்ற ஒரு நூல் எழுதினார். மேலும் அவர் எழுதிய ஒப்பியல் இலக்கியம் எனும் நூலே தமிழில் ஒப்பியல் பற்றி விளக்குகிற முதல் நூலாகும். பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், ஒப்பியலக்கியத் துறையில் பல கட்டுரைகளும் நூல்களும் எழுதியதோடு, தமிழகத்தில் பல்கலைக்கழக அளவில், முதன்முறையாக அதற்கென ஒரு தனித் துறையையும் ஏற்படுத்தினார். அண்மைக்காலத்தில் தமிழ் இலக்கியங்கள், மிகப் பரவலாகப் பிறமொழி இலக்கியங்களோடும், மார்க்சியம், உளவியல் முதலிய கருத்தமைவுகளோடும் ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.