|
1.1 உரை - விளக்கம்
இலக்கியம்
என்பது படைக்கப்படுவது. அது ஒரு கலைவடிவம். உரை
என்பது அறிவு சார்ந்தது ; இலக்கியத்தைப் பிறர்க்கு விளக்குவது ; இலக்கியம்
பற்றிப் பேசுவது. உரை என்ற சொல், வளம்
நிறைந்தது. அது, மூன்று நிலைகளில் பயன்படுகிறது அல்லது பொருள்படுகிறது. தமிழின்
மிகப் பழைய இலக்கணமாகிய தொல்காப்பியத்திலேயே இதனைக் காணலாம். உரை - உரைத்தல்
; சொல்லுதல் (To tell); இதுதான் அடிப்படையான பொருள். அடுத்து, உரை - உரைநடை
(prose) . மூன்றாவதாக உரை - விளக்கம் ; இலக்கியம் அல்லது இலக்கணத்தை விளக்குவது
(Commentary).
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
- (தொல்காப்பியம்,கற்பியல்-12)
என்று
வருகிற இடத்தில் சொல்லு-கூறு என்ற பொருளில்
உரை என்ற சொல் இடம் பெறுகிறது. இதுவே பெரும்பான்மையான
வழக்கு. அடுத்து, இச்சொல் உரைநடை (prose) என்ற பொருளிலும்
தொல்காப்பியரால் பயன்படுத்தப் படுகிறது. செய்யுளியல்
என்ற
பகுதியில் (சூத்திரம் 157, 158), அடிவரையறையில்லாச் செய்யுள்கள்
ஆறு என்று சொல்லி, அவற்றுள் ஒன்றாக, உரை என்பதை அவர்
சொல்லுகிறார். பாடல் முழுவதும்
பாட்டாக அல்லாமல்
இடையிடையே குறிப்பாகவும் விரிவாகவும் இடம் பெறுவது உரை
என்பது அவர் கூற்று.
பாட்டிடை
வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளாடு புணர்ந்த நகைமொழி யானும்
உரைவகை நடையே நான்கென மொழிப
- (செய்யுளியல்-166)
இவ்வாறு
உரை அல்லது உரைநடை அமைகிறது
என்பதுதான் உரைநடையின் தொடக்கப் பண்பு
ஆகும். சிலப்பதிகாரம்,
‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’
என்று அதன் பதிகம் கூறுகிறது. உரைநடையின் வரலாறு
இவ்வாறு அமைகிறது ; அது தனியாகப் பார்க்கத் தகுந்தது.
அடுத்து, உரை என்பது, விளக்கம் அல்லது
புலப்பாடு
என்ற பொருளில், மரபியலில் தொல்காப்பியர் பேசுகிறார்.
சூத்திரத்தின் உட்பொருளைப் பேசுவது
உரை ; உட்பொருள்
மட்டுமல்லாது, இன்றியமையாத கருத்துகளையும் பேசுவது
உரை ;
மேலும் ‘ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்குவது உரை’
என்று
தொல்காப்பியர் சொல்கிறார் (மரபியல் 105, 106).
இம்மூன்று
பொருள்களையும் தொகுத்து, “உரைத்தல் -
உரைநடையில் உரைத்தல் - இலக்கியம் அல்லது இலக்கணத்தின்
உட்பொருளையும் அதனைச் சார்ந்த வேறுபொருட்களையும்
செவ்விதின் உரைத்தல் அல்லது விளக்குதல்”
உரை என்று
சொல்லலாம். உண்மையில் இதுதான் திறனாய்வுக்கும்
உரிய
அடிப்படையான வரையறையாகும்.
1.1.1 உரையும் அதன் பகுப்புகளும்
தொல்காப்பியமும்
அதன் பின்னால் வந்த நன்னூலும்
உரை என்பதனை இலக்கணத்திற்குரியது எனும் முறையிலேயே
பேசுகின்றன. தொல்காப்பியம் உரையை
வகைப்படுத்திச்
சொல்லவில்லை. ஆனால் நன்னூல், காண்டிகையுரை,
விருத்தியுரை
என்ற இரண்டு பகுப்புகளாகக் கூறுகின்றது.
ஆனால் இவை,
இலக்கண உரைகளுக்கு உரிய
பாகுபாடுகளே ஆகும்.
இலக்கியத்திற்குரிய உரைகள் பாகுபடுத்தப்படவில்லை.
காண்டிகையுரை என்பது
கருத்து, சொற்பொருள், எடுத்துக்காட்டு எனும் மூன்றையும்
தரவேண்டும் ; அவற்றோடு
வினா விடையும் தரப்படல் வேண்டும்.
இலங்கையைச் சேர்ந்த
ஆறுமுக நாவலர் நன்னூலுக்கு
இவ்வகையான காண்டிகை
உரையைத் தந்திருக்கிறார்.
ஆகவே அது நீண்டகாலமாகப்
பாடநூலாகப் பயிலப்பட்டு
வருகிறது. விருத்தியுரை என்பது
விரிவாகச் சொல்லுகின்ற உரை. சூத்திரத்தின் உட்பொருளை
மட்டுமல்லாது,. இன்றியமையாத விளக்கங்களையும்
அது
சொல்ல வேண்டும். பிறருடைய உரையை அல்லது கருத்தை
எடுத்துரைத்து அதனை மறுத்தோ, அதற்கு உடன்பட்டோ,
தன்னுடைய கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஐயங்களை அகற்ற வேண்டும். இவ்வகையில்,
நன்னூலுக்குச் சங்கர நமச்சிவாயர்
சிறந்த விருத்தியுரை
எழுதியுள்ளார்.
தொல்காப்பிய உரைகளுக்குக் காண்டிகை,
விருத்தி என்ற
பாகுபாடுகள் இல்லை. எல்லா உரைகளுமே, விளக்கமாகவும்
எடுத்துக்காட்டுகளுடனும் அமைந்த உரைகளாகும். யாப்புக்கள்
பற்றிப் பேசும் யாப்பருங்கலக் காரிகை உரை,
சுருக்கமான உரை.
யாப்பருங்கலம் எனும் நூலுக்கு
அமைந்த யாப்பருங்கல
விருத்தியுரை, விளக்கமான
உரை. இலக்கணங்களுள்
தொல்காப்பியத்துக்கே அதிகமான உரைகள்
உள்ளன. இன்றும்கூட
அதற்கு உரைகள் எழுதப்படுகின்றன. தொல்காப்பியம்
இலக்கியம்
பற்றியும் வாழ்நெறி பற்றியும் பேசுகிறது என்பதே இதன் காரணி.
இது தொல்காப்பியத்தின் பெருமையைக் காட்டுகிறது.
|