1.2 உரையும் பாடம் கேட்டலும்

     “கற்றலில் கேட்டலே நன்று”, “கற்றிலனாயிலும் கேட்க.” - இவை சான்றோர் வாக்கு. முன்னர், ஏடுகள் அரிதாகவே கிடைப்பனவாதலாலும், முறையான பாடசாலைகளும் அரியனவாகவே இருந்தன என்பதாலும், வீடுகளிலே அமர்ந்து வாசித்து, மகிழுவதும் அரியதாகவே இருந்தது. இந்த நிலையில் பொது மன்றத்தில் பலர் கூடியிருக்க, ஒருவர், ஒரு நூலையோ, பாடத்தையோ உரக்கப் படித்து அதற்குப் பொருளும் விளக்கமும் சொல்லுதல் என்பது அன்றைய நிலையாக இருந்தது ; அதுவே கல்வி முறையாகவும் இருந்தது. எனவே, கேள்வி அல்லது செவிவழிச் செல்வம், அன்று பெரிதும் பாராட்டத் தகுந்ததாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் விளக்குதல் என்பது உரைத்தல் என்பதாகவும் இருந்தது. ஒரு நூலையோ, பாடத்தையோ, ஒரு குழு அல்லது கூட்டத்தின் முன்னால் உரைப்பது என்பது அப்படியே அந்த நூலை வரிவரியாக வாசிப்பது அல்லது ஒப்பிப்பது என்பதாகாது. மாறாக, அதனை விளக்குவது, உடனிருப்போரின் ஐயங்களை நீக்குவது, அவர்களுடைய வினாக்களுக்கு விடைகள் தருவது, கேட்போரின் கருத்தை ஈர்ப்பது என்பதாக அது இருந்தது. இது, இன்றைய நடைமுறையில், பாடம் சொல்லுவது, பாடம் கேட்பது உள்ளிட்ட கல்விமுறை (Pedagogy) ஆகும். உரையின் இத்தகைய பண்பு போன்றதுதான், திறனாய்வின் அடிப்படைப் பண்பு ஆகும். திறனாய்வில் பல புதிய கொள்கைகள் பெருகிவிட்டபோதும், அது கல்விசார்ந்த ஒரு முறையியலாக மேலை நாட்டவர் பலரால் இன்றும் கருதப்பட்டு வருகிறது.

1.2.1 இறையனார் அகப்பொருளுரை தரும் விளக்கம்

     அறுபது நூற்பாக்கள் கொண்ட இறையனார் அகப்பொருள் அல்லது இறையனார் களவியல் என்று வழங்கப்பெறும் நூலுக்கு உரைகள் சில எழுதப்பட்டன ; ஓதப்பட்டன. அவற்றுள் சிறந்த ஒன்றை (அதாவது இன்று வழங்குகின்ற உரையை) உருத்திர சன்மன் என்பவன் தேர்ந்தெடுத்தான் என்று அந்த உரை கூறுகிறது. இந்த உரைதான், முதன்முதலாக முச்சங்கங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. அந்த உரை கூறும் சில செய்திகள் இங்கே நமக்கு ஏற்புடையனவாக இருக்கும். மூலநூல் எதுவாயினும் - அது இறையனாரின் அகப்பொருள் நூலாயினும் - அதற்கு     உரை என்பது இன்றியமையாதது. உரை சொல்லும் போதுதான், மூலநூல் சரியான விளக்கம் பெறுகிறது. இவ்வழி, திறனாய்வு எவ்வளவு அவசியமானது என்பது தெரியவரும். ஒரு நூலுக்குப் பல உரைகள் எழக்கூடும். ஆயின் எல்லாம் மிகச் சரியான விளக்கங்களைத் தரும் என்பதில்லை. அவையும் மதிப்பீடு செய்வதற்குரியவையே. இந்த அகப்பொருளுக்குச் செய்யப்பட்ட உரை, புலவர்கள், சான்றோர்கள் பலர் இருக்கும் அவையில் உரைக்கப்பட்ட உரையாகும். மேலும், இது தொடர்ந்து பல தலைமுறைகளாக வரிசையாகச் சொல்லப்பட்டு வந்தது. ‘மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், தம்மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார் ; அவர் தேனூர்கிழார்க்கு உரைத்தார் ; அவர், படியங்கொற்றனார்க்கு உரைத்தார்...’ என்று இப்படியே வரிசைப்படுத்திக் கூறிச் செல்லுகிறது, உரை. இதன்மூலம் உரை     என்பது     தொடர்ந்து பல தலைமுறையினரும் புரிந்துகொள்ளும்படியாக, போற்றும்படியாக இருக்க வேண்டும் என்ற கருத்துப் புலப்படுகிறது. திறனாய்வு, தலைமுறை இடைவெளிகளை இட்டு நிரப்புவது ; ஒரு செய்தியைப் பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது.

    இறையனார்அகப்பொருளுரை பல வகைகளில் சிறப்புடையது. பழைய மரபுகளைக் கொண்டு வந்து ஒப்பவைத்துச் சொல்லுதல், புதிய செய்திகளைச் சொல்லுதல், பிறருடைய கருத்துகளைச் சொல்லி அவற்றை, ஏற்புடையனவெனின் ஏற்றுக் கொள்ளுதல், அல்லவெனின் மறுத்தல், வினாக்களை எழுப்புதல், அவற்றிற்கு விடைகள் சொல்லுதல், நூற்பாக்கள் சார்ந்த பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு வந்து சொல்லுதல் என்று பல பண்புகளை இதிலே காணலாம். இவையெல்லாம் திறனாய்வுநெறிக்கு உகந்தவை. தமிழ் உரைமரபு, இவ்வாறு திறனாய்வின் வரலாற்றோடு இணைந்திருக்கிறது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
உரை என்பதற்குரிய மூன்று பொருள்கள் யாவை?
2.
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறப்படுவது எது?
3.
இலக்கணத்திற்குரிய உரையை, நன்னூல் இரண்டு வகைகளாகச் சொல்லுகிறது - அவை யாவை?
4.
கூடியிருக்கின்றவர்களின் முன்னால், நூல் அல்லது பாடம் பற்றி உரைப்பது (விளக்குவது) இன்றைய நடைமுறையில் எதனோடு ஒப்புடையது?
5.
இறையனார் அகப்பொருள் சூத்திரங்களுக்குச் சரியான உரையைத் தெரிந்தெடுக்க உதவியவர் யார்?