2.1 இலக்கிய உரைகள் - விளக்கம்

     ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியது போன்று, உரைகள் இரு
வகைப்படும். ஒன்று இலக்கண உரைகள், மற்றது இலக்கிய உரைகள்.
இவை தவிர, சமயத் தத்துவ நூல்களுக்கும் உரைகள் உண்டு.
உரைகள் இன்னின்னவாறு அமைய வேண்டும் என்று சில இலக்கண
வரையறைகள் உண்டு; ஆனால் அவை, இலக்கண உரைகளுக்கே
உரியவை. காண்டிகை உரை, விருத்தியுரை என்ற பாகுபாடும்
இலக்கண உரைகளுக்கே உரியது. இலக்கிய உரைகளுக்கு
இலக்கணம் என்று தனியே எதுவும் கூறப்படவில்லை.

    சூத்திரத்து உட்பொருள் அன்றியும் யாப்புற
    இன்றி யமையாது இயைபவை யெல்லாம்
    ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே - (மரபியல், 105)

என்று     தொல்காப்பியர்     உரைக்குக் கூறும் வரையறை,
இலக்கண உரைக்கே உரியது. ஆயினும் தொடர்ந்து அவரே,

    மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்
    
. . . . . . . . . . . . . . . .. . . .
    ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித்
    தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத்
    
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்     (106)

என்று     கூறுவது,     இலக்கிய உரைக்கும் பொருந்துகிற
வரையறைதான். ஆயின், இலக்கிய உரையின் முக்கியமான பண்பு,
பொருளை விளக்குவதோடன்றிக் குறிப்பிட்ட அவ்விலக்கியப்
பகுதியின் நயத்தையும் நோக்கத்தையும் விளக்குவதும் ஆகும்.
இலக்கியம் கூறுகிற செய்தியின் உட்பொருளையும், அது
பிறவற்றோடு உறவு கொண்டிருக்கும் திறனையும், குறிப்பிட்ட
இலக்கிய ஆசிரியனின் தனித்திறனையும் இலக்கிய உரை காட்ட
வேண்டும். இலக்கியத்தின் வழியாக வெளிப்படுகின்ற அல்லது
அதிலிருந்து சுட்டி உரைக்கக்கூடிய வரலாற்றுச் செய்தி, பண்பாடு,
தத்துவம் ஆகியவற்றையும் இலக்கிய உரை சொல்லுகிறது.

2.1.1 இலக்கிய உரை - ஒரு பொது வரலாறு

    தமிழில் இன்று காணக்கூடிய உரைகளில், காலத்தினால்
முந்தியது இறையனார் அகப்பொருள் உரையே என்பதில் கருத்து
வேறுபாடில்லை. அது, கி.பி.9ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக்
கூறப்படுகிறது. கி.பி. ஒன்பதிலிருந்து பதினான்கு முடிய நிறைய
உரைகள் தோன்றின. இந்த இடைக்காலத்தை உரைநடையின் காலம்
எனலாம். ஆனால் இலக்கண உரைகளுக்குப் பின்னர், இரண்டு
அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் இலக்கிய உரைகள்
தோன்றின என்று தோன்றுகின்றது. மொழியின் மாற்றங்கள் மற்றும்
வளர்ச்சி நிலைகளின் பின்னணியில் இலக்கணங்களுக்கு உரைகள்
மிக அவசியமாக இருத்தல் போன்று, இலக்கியங்களுக்கு அத்தகைய
நிலை இல்லை போலும். இலக்கியங்கள், புலவர்கள் பலர் நிறைந்த
அவைகளிலே ஓதப்பட்டன. இந்நிலையில்     முதன்முதலில்
அருஞ்சொற்களுக்குப் பொருள் தருதலும், இலக்கணக் குறிப்புகளும்
அணி நயங்களும் குறிப்பிடுதலும், சில வரலாற்றுக் குறிப்புகள்
தருதலும்     என்று     இவையே     வழக்கத்திலிருந்தன.
சிலப்பதிகார
த்திற்கு முதலில் அரும்பதவுரை தோன்றியது. இன்றும்
இது வழக்கிலுள்ளது. அதுபோல், ஐங்குறுநூறு, புறநானூறு,
பதிற்றுப்பத்து, அகநானூறு
முதலிய சில சங்கப் பாடல்களுக்கும்
குறிப்புரைகளும், சுருக்கமான பொழிப்புரைகளும் தோன்றின.
இந்தக் குறிப்புரைகளின் ஆசிரியர்கள் யாவரென்று தெரியவில்லை.

    சிலப்பதிகாரத்துக்கு விரிவான உரையெழுதிய அடியார்க்கு
நல்லார், சிலம்பின் பழையவுரையைப் பெரிதும் பின்பற்றியே
உரையெழுதினார். அடியார்க்கு நல்லார் காலம் கி.பி.12ஆம்
நூற்றாண்டின் தொடக்கம் என்பர். திருக்குறளுக்கு உரை கண்ட
பரிமேலழகர் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக்
கூறப்படுகிறார். ஆனால் குறளுக்கு உரை கண்டவர்களாகக்
கூறப்படும் பதின்மரில் இவரே இறுதியானவர். அப்படியாயின்,
இவருக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது, அடியார்க்கு
நல்லாருக்கும் முன்பே, திருக்குறளுக்கு உரைகள் வந்திருக்கின்றன
எனலாம். நச்சினார்க்கினியர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர்.