இலக்கண உரைகளில் இரண்டு வகைகள் காணலாம். ஒன்று:
 எழுத்து, சொல் ஆகியவற்றின் இலக்கணங்களுக்கு அமைந்த
 உரைகள். இரண்டு; பொருள் (யாப்பு, பொருள், அணி)
 இலக்கணத்துக்கு அமைந்த உரைகள். முதலாவது வகை
  தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் அதிகாரங்களுக்கோ,
 
 அல்லது எழுத்து, சொல் மட்டுமே கொண்ட  நன்னூலுக்கோ அது
 போன்ற பிறவற்றுக்கோ அமைந்த உரைகள்; மொழியின்
 அடிப்படைகள், அமைப்பு விதிகள் முதலியவற்றை மட்டும்
 
 பேசுவன இவை. இரண்டாவதாக அறியப்படும் பொருள்
 இலக்கணங்கள், இலக்கியம் பற்றிப் பேசுபவை; செய்யுள்
 இலக்கியத்தின் பல்வேறு உறுப்புகள், பாடுபொருள்கள் மற்றும் பிற
 பண்புகள் பற்றிப் பேசுபவை. ஒருவகையில், இலக்கியக் கொள்கை
 பற்றியன இவை எனலாம்.  தொல்காப்பியப்
 பொருளதிகாரம்,
 இறையனார் களவியல், யாப்பருங்கலம், நம்பியகப் பொருள்
 முதலியன இத்தகையவை.
     பொருள் இலக்கண உரைகள், இலக்கியத் திறனாய்வுக்கு
 அடிப்படையாக உள்ள இலக்கிய உருவாக்கம் - கொள்கை -
 பற்றியன; ஆதலால், இவ்வுரைகளில், இலக்கியம் பற்றிய
 பார்வைகளும், இலக்கிய நயங்களும், அவற்றிற்கு அடிப்படையாக
 உள்ள பண்புகளும்     சொல்லப்படுகின்றன.
 
 இறையனார்
 அகப்பொருள் உரையில் இந்தப் பண்பினைக் காணமுடியும்.
 உதாரணத்துக்கு ஒன்று:
 ஆம்பல் மலர் போல் வாய் மணக்கும்-
 இப்படிச் சொல்லுவதில் உவமம், ஏற்கனவே நிருபணமான
 ஒரு
 பொருள் (ஆம்பல்); உவமிக்கப்படுவது, காதலியின் வாய். இதுவே
 மரபு. ஆனால் இதனை
 மாற்றி, ‘வாய்போல் நாறும் ஆம்பல்’ 
 என்று சொல்லலாமா? இதற்கு ஒரு மேற்கோள் பாடலை
 எடுத்துக்காட்டி, உரைகாரர் சொல்லுகிறார். “இவள் வாய் போல
 நாறும் ஆம்பல் உளவே என,
 வாயை உவமையாக்கி, ஆம்பலை
 உவமிக்கப்படும் பொருளாகச் சொல்லுதல் குற்றம் பிற எனின்,
 அறியாது சொல்லினாய்; உலகத்து இவை உவமை, இவை
 உவமிக்கப்படும் பொருள் என்று நிலைபெற்றன
 உளவே யில்லை.
 உரைக்கும் கவியது குறிப்பினான் உவமையும் உவமிக்கப்படும்
 பொருளாம்; உவமிக்கப்படும்     பொருளே உவமையாகவும்
 
 அமையும்..”  இறையனார் அகப்பொருள் உரையின் இந்த
 
 வாக்கும், குறிப்பிட்ட பாடல்அடி ஒன்றனுடைய அழகையும்
 நயத்தையும் காட்டுவதோடு, அந்த அடியின் பொருத்தத்தினையும்
 சொல்லுகிறது. அதனோடு அமையாது, உவமம் எவ்வாறு அமையும்
 என்ற கவிதைக் கோட்பாட்டையும் விளக்குகிறது. இவ்வாறு,
 
 பொருள் இலக்கணத்திற்கு அமைந்த உரை இலக்கிய
 
 உரைபோன்று அமைகிறது என்பதை நாம் அறிய வேண்டும்.
 
 மேலும் அவ்விலக்கணத்தின் தன்மையினை ஒட்டி, இலக்கியக்
 கோட்பாட்டையும் நாம் அதன்வழி அறிகிறோம். இதுபோலவே,
  தொல்காப்பியப்
 பொருளதிகாரத்துக்கு உரையெழுதிய
 பேராசிரியரிடமும், இலக்கிய நயம் பற்றிய பேச்சையும்
 இலக்கியக்
 கோட்பாடு பற்றிய பார்வையையும் நாம்     காணலாம்.
 உதாரணத்துக்குச் சொன்னால், தொல்காப்பியர் செய்யுளியலில்
 (நூற்பா 100) ‘நோக்கு’ எனும் ஓர் உறுப்புப் பற்றிக்
 கூறுவார்.
 அதற்குப் பேராசிரியர் தருகிற உரையைப் படித்து அறிந்து
 
 கொள்க. இதிலே, சொல்லுக்குச் சொல்லும் தொடருக்குத்
 தொடருமாக இணைந்து பொருள் வளத்தை எவ்வாறு பாடல்
 
 குறித்து நிற்கிறது என்பதை அறிவதற்கு நெருங்கி நோக்கிப்
 
 பார்க்கிற முறையைப் பேராசிரியர்
 பயன்படுத்தியுள்ளார். இதனை
 அமெரிக்காவின் புதுத்திறனாய்வு (Neo Criticism) எனும்
 முறையியலோடு
 ஒப்பிட முடியும்.
 
 2.2.1 இலக்கிய உரைகளின் அமைப்பு
 
     இலக்கிய உரைகள் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்ற
 வரையறை இல்லை.
 ஆயினும், இவ்வுரைகளில் நடைமுறையில்
 காணப்படுபவற்றின் அடிப்படையில், அவற்றின் பொதுவான
 அமைப்புகளைக் கூறமுடியும். 
     (1) பாடலின் திரண்ட கருத்தைப் பொழிப்புரையாகச்
     சொல்லுதல்.
     (2) பாடலின் அமைப்பை, அதன் சொற்களாலேயே
     சுருக்கமாக்கிச் சொல்லிப் பாடல் வாக்கிய அமைப்புப்
     பிறழாமல் இருக்குமாறு செய்தல்.
     (3) பொழிப்புரை, பொதுவான     திரண்ட கருத்தாக
     இருத்தலின், சிறப்புக் கருதிச் சில சொற்கள் அல்லது
     சொற்றொடர்களுக்குச் சுருக்கமான குறிப்புரை தருதல்.
     (4) மேற்கோள் பாடல்கள் காட்டுதல் அல்லது பாடல்
     அடிகளோடு ஒப்புமையுடைய
 பிற பாடல் அடிகளைக்
     காட்டுதல்.
     (5) உவமம், உருவகம் போன்ற அணிச் சிறப்புகளைக்
     காட்டுதல்.
     (6) அருஞ்சொற்களுக்கு விளக்கம்/பொருள் கூறுதல்.
     (7) சில போது, இலக்கணப் பொருத்தங்கள்/குறிப்புகள்
     காட்டுதல்.
     (8) பாட வேறுபாடு காட்டுதல்
      மேலே நாம் கூறியவை, இதே வரிசைமுறையில் எல்லா
 உரைகளிலும் இருக்கின்றன என்ற பொருளில் அல்ல. ஆனால்,
 இந்தக் கூறுகள் அல்லது பகுதிகள் இந்த உரைகளில்
 அமைந்திருக்கின்றன
 அல்லது இடம் பெற்றிருக்கின்றன 
 என்பதையே குறிக்கும்.
 
 
 |      தன்
 மதிப்பீடு : வினாக்கள் - I | 
 
 
 | 
  1. 
  | 
  உரைகள் எவ்வகையான இடைவெளிகளைக் குறைக்கும் 
 நோக்கத்தைக் கொண்டவை?
 | 
 
 
  | 
 
 
 | 
  2. 
  | 
  காண்டிகை, விருத்தி என்ற பாகுபாடு என்ன 
 வகையான உரைகளின் பாகுபாடு?
 | 
 
 
  | 
 
 
 | 
  3. 
  | 
  இன்று கிடைப்பவற்றுள் முதலாவதான உரை எது? 
 அதன் காலம் என்ன?  | 
 
 
  | 
 
 
 | 
 4. | 
 
 
 நோக்கு என்பதை உரையாசிரியராகிய பேராசிரியர் 
 விளக்குவது, அமெரிக்காவின் எந்த வகைத் 
 திறனாய்வோடு ஒப்புமையுடையது? | 
 
 விடை | 
 
 
 | 
  5. 
  | 
  இலக்கண உரைகளில், இலக்கியக் கொள்கைக்கும் 
 திறனாய்வுக்கும் உதவக் கூடிய உரைகள் யாவை? | 
 
 
  |