2.4 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் உரைகள்

    சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய நீதி நூல்கள் சிலவும்,
காதல் முதலியன பற்றிய நூல்கள் சிலவும், பதினெண்
கீழ்க்கணக்கு
என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. திருக்குறள்,
இதில் தலையாயது
; அடுத்து, நாலடியாரும் சிறப்புடையது.
திருக்குறளுக்கு கி.பி.15 ஆம்     நூற்றாண்டுக்கு முன்
உரையெழுதியவர்கள் பத்துப் பேர். ஏனைய பதினேழு நூல்களில்
பெரும்பாலனவற்றிற்குப் பழைய உரைகள் கிடைத்துள்ளன. இவை
பெரும்பாலும்     பொழிப்புரைகளாக உள்ளன. இவற்றுள்
நாலடியார்க்கு மட்டும் மூன்று பழைய உரைகள் உள்ளன.
இவற்றுள் பதுமனார் என்பவர் எழுதிய உரை நாலடியார்க்கு
முழுமையாக உள்ளது. உரையன்றியும், நாலடியாரை அறம்,
பொருள், இன்பம் என்று மூன்றாகப் பகுத்து, மேலும், பத்துப்
பத்துப்     பாடல்களாகப்     பொருளின்     அடிப்படையில்
அதிகாரங்களாகப் பகுத்தவரும், இவரே. திருக்குறளைப்
பின்பற்றி இதனை இவர் செய்தார்.

    திருக்குறள்     பழங்காலத்திலேயே     சான்றோரையும்
புலவரையும் உரையாசிரியர்களையும் கவர்ந்துள்ளது என்பது
அறிந்ததே. இதற்குப் பத்துப் பேர் உரையெழுதியதாகக் கூறுகிறது
ஒரு தனிப்பாடல்
;

    தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
    பரிதி பரிமே லழகர் - திருமலையர்
    மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்(கு)
    எல்லையுரை செய்தார் இவர்.

    ஆனால், மணக்குடவர், பரிதி,     பரிப்பெருமாள்,
பரிமேலழகர், காலிங்கர்     என்ற ஐந்துபேரின் உரைகளே
கிடைக்கின்றன. இவர்கள் தவிர, வெவ்வேறு நூல்களுக்கு
உரையெழுதியவர்களும்     திருக்குறள்கள்     ஒன்றிரண்டை
எடுத்துக்காட்டி விளக்கமும் தந்துள்ளனர்.

     திருக்குறள் உரைகளிடையே பல     வேற்றுமைகள்
காணப்படுவது பற்றிப் பல அறிஞர்கள்     எழுதியுள்ளனர்.
அதிகாரங்களுக்குப் பெயரிடுவது, திருக்குறள் அடிகளில் பாட
வேறுபாடுகள் கொள்ளுவது ஆகியவை இந்த வேறுபாடுகளில்
குறிப்பிடத்தக்கவை. காட்டாக, இரண்டாவது பிரிவாகிய
பொருட்பாலைப் பரிமேலழகர், அரசியல், அங்கவியல், ஒழிபியல்
என்று மூன்றாகப் பிரிக்கிறார். மணக்குடவர், பரிப்பெருமாள்,
பரிதி ஆகிய மூவரும், அரசியல், அமைச்சியல், பொருளியல்,
நட்பியல், துன்பவியல், குடியியல் என்று ஆறாகப் பிரிக்கின்றனர்.
காலிங்கர், அரசியல், அமைச்சியல், அரணியல், கூழ்இயல்,
படையியல், நட்பியல், குடியியல் என்று ஏழாகப் பிரிக்கின்றார்.
இது, மற்றையவற்றைவிடப் பொருத்தமாக இருப்பதாக அறிஞர்கள்
கருதுவர். ஏனெனில், திருக்குறளின் பொருட்பால், முதல் குறளிலேயே,

    படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு

    என்று கூறுகிறது. அரசியல் என்று முதலிற்கூறி, அதன்பின்
ஆறையும் சேர்த்து, ஏழு இயல்களாகப் பிரித்திருப்பது மிகவும் பொருந்துகிறதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

2.4.1 திருக்குறள் உரைகள்

    திருக்குறளுக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள்
ஒன்று, தமிழில் வேறு எவற்றையும்விட இதற்கே உரைகளும்
விளக்கங்களும் அதிகம் உண்டு என்பது. மேலும், இதுவே
அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டு வந்துள்ளது. உரைகளும்,
விளக்கங்களும் பலவாகத் திருக்குறளுக்குத் தோன்றியமைக்குக்
காரணம், இது ‘தமிழ் இனப் பெருமைக்கு’ அடையாளமாக
விளங்குகிறது என்பது மட்டுமல்லாமல், இதனுடைய செறிவும்,
இது உணர்த்துகின்ற சிந்தனைவளமும், காலந்தோறும் இதற்குள்ள
ஏற்புடைமை மற்றும் தேவையும் ஆகும்.

    திருக்குறளுக்கு உரையெழுதியவர்களுள் பலராலும்
பாராட்டப்படுகிறவர் பரிமேலழகர். இவர் குறளின் ஏனைய
உரையாசிரியர்களைவிடக் காலத்தால் பிந்தியவர். 13-ஆம்
நூற்றாண்டைச்     சேர்ந்தவர்.     தமக்கு     முந்திய
உரையாசிரியர்களிடமிருந்து கொள்ளுவன கொண்டு, தள்ளுவன
தள்ளி உரை செய்தவர் பரிமேலழகர். மேலும், தமக்கு முந்திய
பல இலக்கியங்களிலிருந்து கற்ற கல்வியையும் உரையில் அவர்
பயன்படுத்திக் கொள்கிறார். இதன்மூலம் , பொருள்விளக்கமும்
நயமும் வெளிப்படுகின்றன. உதாரணமாக
:

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை யளாவிய கூழ்     - (திருக்குறள் - 64)

எனும் குறளுக்கு (மக்கட்பேறு, 64) விளக்கம் கூறுகிறபோது,
பாண்டியன் அறிவுடைநம்பியின் (புறம், 188) பாடல் அடிகளைக்
கொண்டுவந்து மிக இயல்பாக விளக்குகிறார்.

    “சிறுகையான் அளாவலாவது, இட்டும் தொட்டும், கவ்வியும்
துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல்” என்று
நயம்படச் சொல்கிறார்.     அதுபோலப்     “பெயக்கண்டும்
நஞ்சுண்டமைவர்...’ என்ற குறளுக்கு (580) உரையெழுதுகிறபோது,
“நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல், முந்தை யிருந்து
நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்...’ எனும்
நற்றிணை (355) அடிகளை எடுத்தாளுகிறார். இன்றைய
திறனாய்வாளன், ஒப்பியல் நோக்குக் கொண்டிருப்பது போன்று
பரிமேலழகரிடமும் ஒப்பியல் நோக்குக் காணப்படுகிறது.

    பரிமேலழகர் உரை இவ்வாறு பல சிறப்புகள்
கொண்டிருந்தாலும், வைதிக சமயக் கருத்துகளைக் குறட்பாக்களில்
ஏற்றிச் சொல்லுதல் பலவிடங்களில் காணப்படுகிறது. உதாரணமாக
அறம் என்று வள்ளுவர் பேசுவது தமிழ் அறம். வடமொழி மனு
சொல்லுவதோ வருணாசிரம தருமம். ஆனால், பரிமேலழகர்
வலிந்து சென்று, “இனி, மனு முதலிய அற நூல்களால்
பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக்
கூறிய இவற்றுள் அடங்கும்” (குறள் 240) என்று கூறுகிறார். இவர்
என்று அவர் சொல்லுவது வள்ளுவரை.

    பரிமேலழகர், திருக்குறளுக்கு மட்டும் அன்றி, சங்க
இலக்கியத் தொகுப்புக்குள்     ஒன்றாகக்     கருதப்படும்
பரிபாடலு
க்கும் உரையெழுதியுள்ளார்.