3.3 தற்கால உரைகள்

    தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை, பழைய இலக்கிய -இலக்கணங்களைத் திரட்டித் தொகுத்த தொகுப்புகளின் காலம் எனவும், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை உரையாசிரியர்கள் காலம் எனவும், பொதுவாகப் பகுத்துக் கூறலாம். அதுபோல 20-ஆம் நூற்றாண்டு, புத்திலக்கிய     முயற்சிகளின்     காலம் ஆகும். இந்தக் காலப்பகுதியில்தான், தமிழில் இலக்கியத் திறனாய்வு, பல பரிமாணங்களோடு பல வீச்சுக்கள் பெற்று வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இலக்கியத்திறனாய்வு, நவீன முறையியல்களையும் சிந்தனை முறைகளையும், மேலும், தற்கால இலக்கியம் எனும் தளத்தையும் கொண்டது. இதனோடு ஒப்புடையதாகக் காணக்கூடிய உரை, பொதுவாகப் பழைய இலக்கியங்களைத் தளமாகக் கொண்டது; அதனை மரபுவழியாக விளக்குகிற முயற்சியைக் கொண்டது. 20-ஆம் நூற்றாண்டில் இத்தகைய உரைகளும் பல எழுந்தன என்பது கவனத்துக்குரிய செய்தியாகும்.

    இந்நூற்றாண்டில் காணப்படுகின்ற உரைகாணும் முயற்சிகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன: i) இலக்கியங்களின் பல வகைகளுக்கும் உரைகள் எழுந்தன. ii) ஏற்கெனவே, முன்பு உரைகள் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு மீண்டும் உரைகள் எழுதப்பட்டன. திருக்குறள், தொடர்ந்து பல அறிஞர்களின் கருத்தை ஈர்த்தது. ஏறத்தாழ ஒரு நூறுபேருக்கு மிகாமல், பலர், திருக்குறளுக்குப் பல தேவைகளின் பொருட்டும், பல நோக்கங்களோடும் உரைகள் எழுதினர். பழைய இலக்கியங்கள், செய்யுள் வடிவத்தில் இருப்பதால், இன்றைய பொதுமக்களுக்கு வசதியாக, அவை வசனங்களாகவும் எழுதப்பட்டன. இன்றைய உரையாசிரியர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்,     ந.மு.வேங்கடசாமி     நாட்டார், பெருமழைப்புலவர். பொ.வே.சோமசுந்தரனார்., சி.கே. சுப்பிரமணிய முதலியார் மற்றும் எளிய முறையில் சாதாரண மக்களுக்காக எழுதிய புலியூர்க் கேசிகன் ஆகியோர். 14-ஆம் நூற்றாண்டின் நச்சினார்க்கினியர்     போன்று     இருபதாம்     நூற்றாண்டின், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியாரே தமிழில் அதிகமான நூல்களுக்கு உரையெழுதியவர். கம்பராமாயணம் முழுவதற்கும் உரையெழுதினார். மேலும், வில்லிபாரதம், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரத்தில்     அடைக்கலக்காதையும் கடலாடுகாதையும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், முதுமொழிக் காஞ்சி, மதுரைக் கலம்பகம், திருவேங்கடக் கலம்பகம், நாலடியார். அஷ்டப் பிரபந்தம். சடகோபர் அந்தாதி முதலிய பலவற்றின் உரையாசிரியர், இவர். இவ்வுரைகளில் கம்பராமாயணத்துக்கு அமைந்த உரையே மிகவும் சிறப்பானது. தொடர்களுக்கு உரை, கருத்துரை, நயம், இலக்கணக்குறிப்பு முதலியவை மட்டுமல்லாமல், தொடர்புடைய பல புராணக்கதைகளையும் ஒப்புமை கருதி எடுத்துக்காட்டி விளக்குகின்றார். அவருடைய ஆழ்ந்தகன்ற புலமையையும் இராமாயணத்தில் உள்ள ஈடுபாட்டையும் இந்த உரை உணர்த்துகிறது. ந.மு.வேங்கடசாமி நாட்டார், சிலப்பதிகாரம் முழுமைக்கும் விரிவான உரை எழுதியுள்ளார். பலவிடங்களில் பழையவுரைகாரரையும் அடியார்க்கு நல்லாரையும் பின்பற்றிச் சென்றாலும்,     காலத்திற்கேற்ற     வளர்ச்சி, அவ்வுரையில் காணப்படுகிறது. சிலம்புக்கு மட்டுமல்லாமல் மணிமேகலைக்கும் மற்றும் அகநானூறு, திருவிளையாடற் புராணம், நானாற்பது (இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது) ஆகியவற்றுக்கும் நாட்டார் உரையெழுதியுள்ளார். பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக, சங்ககால இலக்கியங்களுக்கும் பிற்கால இலக்கியங்கள் சிலவற்றுக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார்.

    மரபுவழி உரைக்கும், வளர்ந்துவரும் புதிய திறனாய்வு முறைக்கும்    இடைப்பட்டதாக     மறைமலையடிகள், முல்லைப்பாட்டுக்கும் பட்டினப்பாலைக்கும் ஆராய்ச்சியுரைகள் எழுதியுள்ளார். நச்சினார்க்கினியர், மாட்டு எனும் உறுப்பைப் பயன்படுத்திப் பாடல் அடிகளைச் சிதைப்பார். இதனைப் பொறாது, மறைமலையடிகள் இந்த ஆராய்ச்சி உரைகளை எழுதினார். இந்த உரைகள்     ஆழமாகவும்    தெளிவாகவும் அமைந்துள்ளன. விமர்சனரீதியாகப் பாடல் அடிகளை மதிப்பிடவும் செய்கின்றன. தமிழ்த் திறனாய்வாளர்கள் வரிசையில், மறைமலையடிகளுக்கு இடம் தந்துதான் திறனாய்வு வரலாறு எழுதப்படுகிறது.