தமிழ்த்
திறனாய்வின் வரலாற்றில் இலக்கிய உரைகள் செய்த
பணிகளையும் பங்களிப்புகளையும் தொடர்ந்து, பத்தொன்பதாம்
நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும், இன்றைய
திறனாய்வு, புதிய புதிய பரப்புகளையும் பரிமாணங்களையும் பெற்று
வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்த் திறனாய்வு, குறிப்பிடத்தக்க ஒரு
துறையாகவும் களமாகவும் இன்று சிறப்புற்று விளங்குகிறது. முன்பு,
இலக்கியங்கள் தோன்றி, சில பல
நூற்றாண்டுகள் கழிந்து
அவற்றிற்குரிய விளக்கங்கள் அல்லது உரைகள்
தோன்றின.
எடுத்துக்காட்டாக, சேர இளவல் படைத்த சிலப்பதிகாரம்
எனும்
காப்பியம், கி.பி 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் தோன்றியதெனின்
அதற்கு ஒரு பழைய உரையும் பின்னர் அடியார்க்கு
நல்லார்
உரையும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில்தான் எழுகின்றன;
அதாவது
ஏழு, எட்டு நூற்றாண்டுகள் கழிந்துதான் தோன்றுகின்றன.
சங்க
இலக்கியங்களுக்கும் திருக்குறளுக்கும் அப்படியே.
ஆனால்
இன்றைய திறனாய்வு என்பது, தனக்கு மிகவும் அண்மைக்காலத்துத்
தோன்றிய அல்லது சமகாலத்திய இலக்கியங்களைப்
பற்றி
உடனடியாக அல்லது வெகுசீக்கிரமாகப் பேசத் துவங்கிவிடுகிறது.
எடுத்துக்காட்டாக, புதுக்கவிதைகள் சிலவற்றைத் தொகுத்துப்
புதுக்குரல்கள் என்ற
நூல் (சி.சு. செல்லப்பா) வெளிவந்தவுடன்,
அதனுடைய போக்கை விமரிசித்துப் பல கட்டுரைகள் உடனடியாக
வெளிவந்தன. அதுபோன்று, பல நூல்களுக்கு
உடனடியாகத்
திறனாய்வுகள் செய்யப்படுவதைப்
பார்க்கலாம். இன்றைய
திறனாய்வின் முக்கியமான அடையாளம், உடனடியாக எதிர்வினை
(Immediate Response)
நிகழ்த்துகின்ற அதன் பண்பு ஆகும்.
|