4.4 திறனாய்வாளர்களும் பழைய இலக்கியங்களும்    

     இன்றைய     திறனாய்வு,     பொதுவாக,     இன்றைய இலக்கியங்களையே     தனது தளமாகவும் நோக்கமாகவும் கொண்டிருக்கிறது. அதுவே அதனுடைய முக்கியமான இயல்பு. எனினும் இலக்கியங்களின் காலப்பகுதி, திறனாய்வுக்குத் தடையாக இருப்பதில்லை; இருக்கவும் கூடாது.     எனவே பழைய இலக்கியங்களையும் திறனாய்வாளர்கள் தம்முடைய ஆய்வுப் பொருளாக     எடுத்துக் கொண்டனர். தொடக்க காலத் திறனாய்வாளர்கள் அல்லது ஆய்வாளர்களுக்கு இது தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில், அன்று புத்திலக்கியங்கள் அதிகம் தோன்றவும் இல்லை. புத்திலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய பிறகும் பல ஆய்வாளர்கள் / திறனாய்வாளர்கள், பழைய இலக்கியங்களிலேயே அதிகமான அக்கறை செலுத்தினர். பெரும்பாலும் கல்வியியலாளர்கள் இத்தகையவர்களாக இருந்தனர்; வளர்ந்து வரும் புதிய இலக்கியங்களில் இவர்கள் ஈடுபாடு கொள்ளவில்லை.

     பழைய இலக்கியங்களைத் திறனாய்வு செய்வோர், அதிகமாக எடுத்துக்கொண்ட இலக்கியங்கள் கம்பனுடைய இராமகாதை, இளங்கோவின் சிலம்பு, வள்ளுவரின் குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் ஆகும். சமயத்தில் ஈடுபாடு கொண்டோர் பெரியபுராணம், திருவாசகம், தேவாரம் முதலிய நூல்களில் ஆர்வம் கொண்டிருந்தனர். பொதுவாக இத்தகையவர்களில் பெரும்பான்மையோர், ரசனை முறையிலும் உரை மரபிலேயும் சென்றார்கள். மொழிப்பற்றும்,     சமயப்பற்றும் இவர்களின் ஆய்வுகளிலே இருந்தன.

     புதிய இலக்கியங்களிலே ஈடுபாடு கொள்ளாமல், பழைய இலக்கியங்களையே     தம் ஆய்வுப்பொருளாகக் கொண்ட கல்வியியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்ரா. பி. சேதுப்பிள்ளை, ச. சோமசுந்தர பாரதியார், மு. வரதராசன், அ.ச. ஞானசம்பந்தன், வ.சுப. மாணிக்கம் ஆகியோர். இவர்களுள் பேராசிரியர் மு. வரதராசன், 1950-60-களிலே     கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் கவருகின்ற விதத்தில் பல நாவல்கள் எழுதிப் பிரபலமானவர். ஆனால், இவர் தம்மையொத்த நாவலாசிரியர்கள் பற்றியோ, பாரதியார், பாரதிதாசன் போன்ற சமகாலத்திய கவிஞர்கள் பற்றியோ திறனாய்வு செய்யவில்லை. மாறாகச் சங்க இலக்கியத்தில் இயற்கை,     குறுந்தொகைச் செல்வம், நெடுந்தொகைச் செல்வம், நற்றிணை விருந்து என்று பெரிதும் சங்க இலக்கியங்களிலேயே கவனம் கொண்டிருந்தார். இது, அண்மைக்காலம் வரை, தமிழ்க் கல்வியியலாளர்கள் மத்தியிலே பெரும் போக்காக இருந்தது. மேலும், பொதுவாக ரசனை முறைத் திறனாய்வுக்கும் மரபு சார்ந்த பார்வைக்கும் கம்பன், இளங்கோ உள்ளிட்ட தொன்மை இலக்கியங்களே ஏற்புடையனவாக இருந்தன. இன்றும் கூட இந்தப்போக்குப் பிரதானமாகக் காணப்படுகிறது. மேலும், மேடைச் சொற்பொழிவாளர்களுக்கு, இந்தத் தளமே பொருந்தி வருகிறது. ஆனால் அதேபோது, அமைப்பியல் மார்க்சியம், பெண்ணியம் முதலிய புதிய பார்வைகளுக்கும் கொள்கைகளுக்கும், சங்க இலக்கியம் உள்ளிட்ட தொன்மை இலக்கியங்களும் சிறந்த களங்களாக இருந்து வருகின்றன. அணுகுமுறைகளும் கொள்கைககளுமே திறனாய்வுக்குச் சரியான பண்புகளையும் பயன்பாடுகளையும் தருவன. எந்த இலக்கியம் என்பதல்ல - எவ்வாறு அது திறனாய்வு செய்யப்படுகிறது என்பதுவே முக்கியம்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
  இன்றைய திறனாய்வின் முக்கியமான அடையாளம் என்ன?
2.
  தமிழில் முதல் திறனாய்வாளர் என்று கருதப்படுகிறவர்  யார்?
3.
மறைமலையடிகளிடம் காணப்படுகிற திறனாய்வு, எதனைச் சார்ந்த திறனாய்வு?
4.
  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த சிறந்த ஆராய்ச்சி இதழின் பெயர் என்ன? 

5.

ஆராய்ச்சியில் முடிவுகளும் நோக்கங்களும் கருதுகோள்களும் எவ்வாறு இருக்க வேண்டும்?

6.

புதிய இலக்கியங்களிலே ஈடுபாடு கொள்ளாமல், பழைய இலக்கியங்களையே தம் ஆய்வுப் பொருளாகக் கொண்ட கல்வியியலாளரும் நாவலாசிரியருமாக இருந்தவர் யார்?