5.0 பாட முன்னுரை

     இன்றைய திறனாய்வு என்று நாம் உடனடியாகப் புரிந்து கொள்வது - அது, இன்றைய இலக்கியம் பற்றிப் பேசுவது; இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பேசுவது ; இன்றைய சிந்தனை     முறைகளை     அடியொற்றிப்     பேசுவது - என்பவற்றைத்தான் கொள்கிறோம். ஆனால் இவ்வாறு கொள்வது, ஒரு பொதுவான வழக்கு ஆகும். இதற்கு மாறாக, தொன்மை இலக்கியம் பற்றியும், தொன்மையான கருத்தியல் வடிவத்தைப் பின்பற்றியும் இன்றைய திறனாய்வு பேசுதல்     கூடும். எவ்வாறாயின், இன்றைய திறனாய்வின் அடிப்படையான பணி அல்லது பண்பு இன்றைய சூழ்நிலைகளுக்குப் பொருந்துமாறும், இவற்றின் தேவைகளுக்கு உதவுமாறும் இருக்க வேண்டும். உண்மையில், தமிழில் இன்றைய திறனாய்வின் வளர்ச்சி, இதற்கேற்ப அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படிப்படியாகப் புதிய புதிய அணுகுமுறைகளையும் கருத்துகளையும் கொள்கைகளையும் ஏற்றும் தழுவியும் அது வளர்ந்துள்ளது.