5.1 மரபுமாற்றமும் சமயச்சார்பும் திறனாய்வும்

    தமிழ்த்திறனாய்வு ஆங்கில மரபினால் பெற்ற மாற்றமும் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கன. தமிழிலக்கியப் பரப்பில் பாதியளவு இடம்பிடித்திருந்த சமயத்தின் செல்வாக்கும் திறனாய்வில் படிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இவ்விரு தாக்கங்கள் குறித்துக் காண்போம்.

5.1.1 ஆங்கில மரபும் தமிழ்த் திறனாய்வும்

    ‘திறனாய்வு என்பதே, ஆங்கிலேயர்களின் கொடை; ஆங்கில மரபின் தாக்கத்தினால்தான் தமிழில் திறனாய்வு தோன்றியது’ - இவ்வாறு சமீப காலம் வரை நவீனவாதிகளால் சொல்லப்பட்டு வந்தது. இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. ஒன்று-இருபதாம் நூற்றாண்டின் விடியலில், செல்வக்கேசவராயர் உள்ளிட்ட தொடக்க காலத் திறனாய்வாளர்களும், பின்னர் வந்த திறனாய்வாளர்களும் ஆங்கிலக் கல்வி கற்றவர்களே என்பது. இரண்டு-நவீன அல்லது தற்காலத் திறனாய்வு தோன்றுவதற்குச் சற்றுமுன்புவரை, தமிழில், உரைகூறும் மரபில்,     போற்றியுரைப்பது,     மரபுகளை விதிமுறைகளாகக் கொள்வது ஆகிய போக்குகளே இருந்தன என்பது. இவ்வாறு சொல்லப்படும் இந்த இரண்டு கருத்துகளுமே, அவசரப்பட்டு வந்த முடிவுகளேயன்றி ஆராய்ச்சிக்குட்பட்டு வந்த முடிவுகள் அல்ல.

    தமிழ்த் திறனாய்வில் மேலைநாட்டுத் திறனாய்வு மற்றும் சிந்தனை முறைகளின் தாக்கம் உண்டு. ஆனால், திறனாய்வே அங்கிருந்து வந்த கொடை அல்ல. தமிழ்த் திறனாய்வின் நீண்ட வரலாற்றில் பல நீரோட்டங்கள் உண்டு. மேலைநாட்டு முறையியலும் தாக்கம் செலுத்துவதில் வியப்பு இல்லை. ஆனால், எது எது எந்த அளவில், எந்தத் திறனில் என்று சரியாகக் கணித்துவிட முடியாது. அறிவியல் வளர்ச்சி காரணமாகவும், உலகளாவிய தகவலியப் பரப்புகள் காரணமாகவும், புலம்பெயர்வு போன்றவை காரணமாகவும், தமிழில் திறனாய்வு, சர்வதேசப் பண்புகளைப் பெற்று வளர்ந்துள்ளது என்று சொல்ல வேண்டும். இன்றைய தமிழ்த் திறனாய்வாளர்களுள் (1970) எழுபதுகளுக்குப் பிற்பட்டவர்களிடமே மேலைநாட்டு முறையியல்கள் மற்றும் சிந்தனைகளின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. எவ்வாறாயினும், எல்லாமே தமிழ்ச் சூழலின் பின்னணியிலும், அதன் பொருத்தத்திலுமே இங்கு வந்து அமர்கின்றன ; இடம் பெறுகின்றன.

5.1.2 சமயச் சார்பும் திறனாய்வாளர்களும்

    தமிழ் ஆராய்ச்சி உலகில், சமயச் சார்பு என்பது முக்கியமான இடம் வகிக்கிறது ; குறிப்பாக, 1950-60களுக்கு முற்பட்ட ஆராய்ச்சிகளில், சமயச் சார்பு தூக்கலாகவே இடம்பெறுகிறது. மேலும், இத்தகைய சார்பில், சைவ சமயச் சார்பே அதிகமாகவும் வலுவாகவும் இடம்பெற்றுள்ளது. தொடக்க காலத் திறனாய்வாளர்களில் ஒருவராக மதிக்கப்பெறும் மறைமலை யடிகளிடம் இது தெளிவாகவே காணப்படுகிறது. வளோளர் நாகரிகம் பற்றியும் சைவ சமயப் பெருமைகள் பற்றியும் (இந்த இரண்டும் ஒன்றே )அவர் பல நூல்களில் பாராட்டிப் பேசுவார்.தேவாரம் தொகுப்பிலும் நாயன்மார் அறுபத்துமூவர் என்ற தொகையிலும் அடங்காத (அவ்வாறு அடங்காததாலேயே) மாணிக்கவாசகரைச் சங்க காலத்தின் பக்கத்திலே கொண்டு வைப்பார். இதற்கான சான்றுகள் பற்றிப் பொருட்படுத்தவும் மாட்டார். இவர் மட்டுமல்லர், இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதிய மு.அருணாசலம் முதலிய பலர், இவ்வாறு சமயப் பற்றுக் காரணமாகப் பல நூல்களின் காலங்களை முன்னும் பின்னுமாக வரையறை செய்வர். நான்குவருணம் என்ற வகுப்பையே வளோளர்கள்தான் செய்தார்கள் என்பது மறைமலையடிகளின் வாதம்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவை மறுத்து, அது மருட்பாவே என்று சொல்லி ஈழத்து ஆறுமுக நாவலர் போர் தொடுக்கிறார். இதற்குக் காரணமாக அமைந்தது, ‘சைவ சமயத் தூய்மை’ பற்றிய கருத்தியலே ஆகும். சைவ சமயப்பற்றுக் காரணமாகச் சமணக் காப்பியம் என்று     கருதப்படும்     சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் சைவ சமய நூல்களே என்று பேசியவர்கள் பலர் உண்டு. அதுபோலப் பெரிய புராணத்தின்மீதும் சேக்கிழார் மீதும் தனிப்பற்றுக் கொண்ட அ.ச.ஞானசம்பந்தன், அதனைத் தேசிய இலக்கியம் என்பதாக முத்திரை குத்தி, விளக்கம் தருவார். இத்தகையவர்கள், கம்பனை வெறுமனே ரசனைக்காகவும், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் முதலியவற்றைக் கொள்கைக்காகவும் பாராட்டியுரைக்கின்றனர். ஆனால், இத்தகைய சமயச் சார்பு, பெரும்பாலும் ஆராய்ச்சிகளிலேயே அதிகம் காணப்படுகிறது; அதுவும் பழைய இலக்கியங்கள், அவற்றை மையமிட்ட வரலாறு ஆகியவற்றிலேயே காணப்படுகிறது. (இன்றைய) திறனாய்வில் வேறு பிற சார்நிலைகள் உண்டு.