5.3 திறனாய்வு முன்னோடிகள்

    இலக்கியத்தை அழகியல் சார்ந்தும் ஆக்கம் சார்ந்தும் தரம் சார்ந்தும் சமூக அக்கறை சார்ந்தும் அணுகும் திறனாய்வுகளில் முத்திரை     பதித்தவர்கள்     உளர்.     அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் குறித்து இப்பகுதியில் காணலாம்.

 

5.3.1 டி.கே.சிதம்பரநாத முதலியார்

    டி.கே.சிதம்பரநாத முதலியார் என்ற டி.கே.சி தமிழில் ரசனை முறைத் திறனாய்வு அல்லது அழகியல் திறனாய்வுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர். 1940-50 ஆகிய காலப் பகுதியில் இயங்கிய இவர், தமிழில் திறனாய்வைக் கிட்டத்தட்ட இயக்கம்போலவே நடத்தியவர். ஆ.முத்துசிவன், சீனிவாசராகவன், ராஜாஜி, கல்கி, வி.ஆர்.எம்.செட்டியார், ல.சண்முகசுந்தரன் முதலிய பலர், இவரோடு சேர்ந்து இலக்கிய ரசனையைப் பகிர்ந்து கொண்டார்கள். தம்முடைய திறனாய்வு முறைக்கு, மேலைநாட்டு இலக்கியக் கொள்கையையோ வேறு எதனையுமோ முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாத இவர், ரசானுபவத்தையும், தாள லயத்தையும், சொற்சுவையையும் அடியொட்டியே தம்முடைய பார்வையை வகுத்துக் கொண்டார். இதற்கு இவருக்குத் தளமாக இருந்தது, முக்கியமாக, கம்ப ராமாயணமாகும். கம்பன் பெயரால் உள்ள பாடல்களையெல்லாம் கம்பரே படைத்தார் என்பதை இவர் ஒத்துக்கொள்வதில்லை; 1514 பாடல்களை மட்டுமே (தரமான) கம்பனுடைய பாடல்களாக இவர் ஒத்துக் கொள்வார். கம்பர்தரும் ராமாயணம்     என்பது     இவருடைய     நூல். முத்தொள்ளாயிரத்தையும் இவர் பதிப்பித்துள்ளார். இதய ஒலி, அற்புத ரஸம் ஆகியவை இவருடைய நூல்கள். ‘இலக்கியத்தில் உருவமே பிரதானம்’ என்று சொல்கிறார். இவருடைய திறனாய்வு, உரைநடையின் பக்கம் செல்லவில்லை. ரசனைக்கு உரியது கவிதையே என்பது இவருடைய அபிப்பிராயம். இவரைப் பின்பற்றியெழுதிய பேராசிரியர் ஆ.முத்துசிவன், (அசோகவனம், கவிதை), ரசனைத் திறனாய்வுக்கு மேலைநாட்டுத் திறனாய்வு முறையைப் பின்பற்றியிருக்கிறார்.

5.3.2 க.நா.சுப்பிரமணியம்

    க.நா.சு என்ற க.நா.சுப்பிரமணியமும் டி.கே.சி. போலவே, அழகியல் திறனாய்வாளர்தான். ஆனால் டி.கே.சி. அதனைக் கவிதையில் செய்தார்; பழைய இலக்கியங்களைத் தளமாகக் கொண்டார். ஆனால், க.நா.சுப்பிரமணியம் தம்முடைய ரசனையை உரைநடைப் பக்கம் செலுத்தினார்; தற்கால இலக்கியத்தைத் தளமாகக் கொண்டார். டி.கே.சி. ரசனையில் மட்டும் நின்று கொண்டு இலக்கிய அனுபவத்தை முன்வைத்தார். க.நா.சு., தம்முடைய அழகியல் வழித் திறனாய்வை, இலக்கியங்களின் தரத்தைச் சொல்லுதற்கும், இது சிறந்தது, இது சிறந்தது அல்ல என்று பட்டியல் போடுவதற்கும் பயன்படுத்தினார். இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பல மொழிகள் அறிந்த இவர், பிறநாட்டு நாவல் சிலவற்றைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார். தமிழில் எழுதப்பட்ட பல படைப்புக்கள், எழுதிய பல எழுத்தாளர்கள் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். “வேறு எதில் வேண்டுமானாலும் சமரசம்     (compromise)     பேசலாம்; இலக்கியத்தின் தரத்தில் மட்டும்     சமரசம்     பேசி முடிவுகட்டக்கூடாது” என்று இவர் சொல்கிறார். இருப்பினும் இவருடைய அளவுகோல்களிலும் தரவரிசையிலும் அவ்வப்போது மாறுதல்கள் செய்துகொள்வார். இவருடைய சக எழுத்தாளர்கள் பலர்,     இவருடைய அபிப்பிராயங்களைக்     கணக்கில் எடுத்துக்கொள்பவர்கள்தாம் என்றாலும், “இவர், ஒரு இலக்கிய சிபாரிசுக்காரர் மட்டுமே” (சுந்தரராமசாமி) என்றும், “இவருடைய விமரிசனங்கள், எழுத்துலகில் எதிர்ப்புக்களை உண்டாக்கியனவே தவிர, உரிய நியாயமான பலன்களை விளைவிக்கவில்லை” (வல்லிக்கண்ணன்) என்றும் பலருடைய கண்டனத்துக்கு உள்ளானார். திறனாய்வாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் இவர்.

5.3.3 சி.சு. செல்லப்பா

    க.நா.சு.போலவே சி.சு.செல்லப்பாவும் படைப்பாளியாகவும், பத்திரிகையாளராகவும் திறனாய்வாளராகவும் இருந்தார். இவரும், உள்ளடக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு, உருவம், அழகு, தரம் என்பவற்றில் அக்கறை செலுத்தினார். தற்கால இலக்கியத்தில் மட்டுமே அக்கறையும் பயிற்சியும் உடைய இவர், க.நா.சுவும் நவீனத்துவவாதிகளும் போல, தமிழ் மரபு என்பதை மறுப்பவர். தமிழ்     மரபு பற்றிப்     போதிய அறிவோ பயிற்சியோ இல்லாவிட்டாலும்     பழைமைவாதத்தையும்,     தமக்கு ஒவ்வாதவற்றையும் தமிழ் மரபு என்ற பெயரால் மறுக்கின்ற இவர், தமிழில் புதுக்கவிதையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநின்றார். எழுத்து     எனும் தம்முடைய இலக்கிய இதழ் மூலமாக ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்பிரமணியம் ஆகிய எழுத்தாளர்கள்மேல் தனி ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது (1972) என்ற நூல், தமிழில் வ.வே.சு அய்யரின் காலத்திலிருந்து சிறுகதைகள் எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றன என்று அவற்றின் படைப்பாக்க முறைகளையும் உத்திகளையும் பகுத்துச் சொல்லித் திறனாய்வு செய்கின்றது.     தான்     ஒரு திறனாய்வாளராக இருந்தது மட்டுமல்லாமல்     பல     திறனாய்வாளர்களை     இவர் வளர்த்துமிருக்கிறார்.

5.3.4 வல்லிக்கண்ணன்

    வல்லிக்கண்ணன், மணிக்கொடி எழுத்தாளர். இவரும் படைப்பாளியாகவும்     திறனாய்வாளராகவும்     இருந்தவர். மென்மையான போக்குக் கொண்டவர். தீவிரச் சார்புநிலை கொண்டவரல்லர். ‘புதுக்கவிதை - தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூல் புதுக்கவிதையின் வரலாற்றைச் சொல்வதோடு அதனை விமரிசனம் பண்ணவும் செய்கிறது. தொடர்ந்து மணிக்கொடி என்ற பத்திரிகையின் பங்களிப்புப் பற்றியும் சரஸ்வதி பத்திரிகையின் பங்களிப்புப் பற்றியும் வரலாற்றுரீதியாகத் திறனாய்வு செய்துள்ளார்.

5.3.5 தருமு சிவராமு

    தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் (little magazines or literary magazines) குழு விரோதங்கள் / தனிப்பட்ட மோதல்கள் பல உண்டு. முக்கியமாக, 1970-80 காலப்பாதையில் இது கவனிக்கத்தக்க ஒரு நிகழ்வாகவும் போக்காகவும் இருந்தது. இதில் தருமு சிவராமு முக்கியமானவர். இவர் தவிர இன்னும் சிலரும் உண்டு.

    தருமு சிவராமு, எழுத்து இதழில் தொடர்ந்து எழுதியவர் ; புதுக்கவிதைப் படைப்பாளி ; படிமக்கவிஞர் என்று பேசப்படும் சிறப்புடையவர். திறனாய்வில் சில சார்புகளோடு கண்டிப்பும் வேகமும் கொண்ட இவர் எழுதிய இத்தகைய நூல், விமரிசன ஊழல்கள் என்பது. திறனாய்வில் காணப்படுகின்ற சாதிச்சார்பு நிலை உள்ளிட்ட வெளிப்படையான சில உண்மைகளையும் கருத்துகளையும் இந்நூல் பேசுகிறது.

5.3.6 வெங்கட்சாமிநாதன்

    தருமு சிவராமு போன்றே வெங்கட் சாமிநாதனும் திறனாய்வில் குழு மோதலில் ஈடுபட்டவர். வெங்கட் சாமிநாதன் படைப்பாளி அல்லர். எழுத்து இதழிலும் இன்னும் வெவ்வேறு இதழ்களிலும் திறனாய்வாளராக மலர்ந்தவர். மார்க்சியம், ்எதார்த்தவியல், சமூகத் தளம் முதலியவற்றையும் வரலாறு,தமிழ்மரபு ஆகியவற்றையும் மறுக்கின்ற இவர், படைப்புலகில் தனி மனித சாதனைகளையும் தரங்களையும் பற்றிப் பேசுகிறார். எழுத்துலகில் காணப்பெறும் அனுமானங்களை மறுக்கின்றார். பாலையும் வாழையும், ஓர் எதிர்ப்புக்குரல் என்பன இவருடைய நூல்கள். படைப்புகளை மட்டுமல்லாமல் தனிமனிதர்கள் என்ற நிலையில் படைப்பாளிகளையும் விமரிசிக்கின்றார் இவர்.

5.3.7 சி. கனகசபாபதி

    இவர் கல்வியாளர், திறனாய்வாளர். தமிழ்ப் பேராசிரியராக இருந்து, முதன்முதலாகப் புதுக்கவிதையை வரவேற்று எழுதியவர் என்று பாராட்டப்படுகின்ற கனகசபாபதி, முக்கியமாக எழுத்து இதழில் தொடர்ந்து எழுதினார். புதுக்கவிதையின் உருவ அமைப்பு, உருவகம், படிமம் முதலியவை உள்ளிட்ட அதன் உத்திகள், பொதுவான கட்டமைப்பு முதலியவற்றை விரிவாக விளக்குகிறார். புதுக்கவிதை என்ற பெயருக்கேற்ப, அதிலே தற்காலத்துவம் (modernity), நவீனக் கருத்துகள் முதலிய காணப்படுவதாக விளக்குகிறார். இவரிடம் முக்கியமாகவும் வேறு யாரிடம் காணப்படாததாகவும் உள்ள ஒரு அணுகுமுறை - புதுக்கவிதை என்ற யாப்பு மீறிய கவிதையை யாப்புடைய சங்க இலக்கியக் கவிதைகளோடு ஒப்பிடுவதாகும். முக்கியமாக     இணைக் குறளாசிரியப்பா என்ற பாவகையை எடுத்துக்காட்டி, அதனோடு புதுக்கவிதைகள் எவ்வாறு நெருக்கம் கொண்டிருக்கின்றன என்று எடுத்துக்காட்டுகிறார். தமிழில் 1960-களின் காலப்பகுதியில் தோன்றிப் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த புதுக்கவிதைக்கு மரபுவழி கூறுவதும், கல்வியாளர்கள் மற்றும் பிறர் மத்தியில் புதுக்கவிதைக்கு அங்கீகாரம் தேடுவதும் இவருடைய திறனாய்வின் முக்கியப்     பணியாகும்.     மரபும் புதுமையும் அறிந்த திறனாய்வாளராக அவர் விளங்கினார்.

    இதே 60-70-களின் காலப்பகுதியின் திறனாய்வில், புதிய இலக்கியம் பற்றி அக்கறை கொண்ட பிற கல்வியாளர்கள், சாலை இளந்திரையன்,     தா.வே.வீராசாமி,     மா.இராமலிங்கம், இரா.தண்டாயுதம், தி.லீலாவதி முதலியோர். மேலும், இதே காலப்பகுதியில்     கல்வியாளர்கள் மத்தியிலிருந்து     பல திறனாய்வாளர்கள் மலர்ந்தனர். அவர்களுள் கலாநிதி கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி முதலியோரும் அடங்குவர்.