5.5 தொகுப்புரை

    இன்றைய திறனாய்வு என்பது முக்கியமாக, இன்றைய இலக்கியம் பற்றிப் பேசுவதையே பண்பும் பயனுமாகக் கொண்டிருந்தது.     எனினும்     பழைய இலக்கியங்களும் திறனாய்வுக்குரிய தளங்களாக     இருந்தன. முக்கியமாகக் கல்வியாளர்களின் பலர், மற்றும் டி.கே.சி., வ.வே.சு.ஐயர், போன்றவர்கள் பழைய     இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். படைப்பாளிகளில் சிலர், திறனாய்வாளர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் இன்றைய இலக்கியத்தைத் தளமாகக் கொண்டவர்கள். பழைய இலக்கியத்தை உதாசீனப்படுத்துவதும், தமிழ் மரபைப் புறந்தள்ளுவதும் இத்தகையோரில் பலருக்கு வழக்கமாக இருந்துள்ளது. பழைய இலக்கியங்களை ஆராய்கின்ற பலரிடம் சமயச் சார்பு காணப்படுகிறது. பழைய இலக்கியங்களுள் கம்பனும் இளங்கோவும், வள்ளுவனும் அதிகமான கவனத்தைப் பெற்றுள்ளனர்.

    இன்றைய திறனாய்வுலகில், 1950-70-களின் காலப்பகுதியில் அதிகமான பங்களிப்புச் செய்தவர்கள் பலர். அவர்களுள் டி.கே.சி., க.நா.சு., சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், தருமு சிவராமு,     வெங்கட் சாமிநாதன், சி.கனசபாபதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களிடம்,     உருவவியல் சார்ந்த பார்வை அதிகமாகக் காணப்படுகிறது. தரம் பற்றிப் பேசுவதும், தனிமனிதர்கள் நிலையில் கசப்பும் வெறுப்பும் காட்டுவதும் இன்றைய திறனாய்வுலகில் காணப்படுகிற சில போக்குகள். ஆயினும், இன்றைய இலக்கியத்தின் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கும் சில கூர்மையான போக்குகளுக்கும், திறனாய்வு பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளது. இலக்கிய இதழ்கள் என்ற ஊடகம், பல திறனாய்வாளர்களுக்கு நல்ல களமாக இருந்துவருகிறது என்பது கவனிக்கத்தகுந்தது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
டி.கே.சி.யின் ரசனைமுறைத் திறனாய்வுக்குத் தளமாக இருந்த நூல் எது?
2.
‘வேறு எதில் வேண்டுமானாலும் சமரசம் செய்யலாம்.. ஆனால், இதில்     சமரசம் கூடாது’ என்று க.நா.சுப்பிரமணியம் கூறுவது எதைக் குறிக்கிறது?
3.
தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது என்ற நூலை எழுதியவர் யார்?
4.
புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதியவர் யார்?
5.
சி.கனகசபாபதி புதுக்கவிதையின் உருவ அமைப்பை, சங்க காலத்தின் எந்த யாப்பு வகையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்?
6.
விமரிசனத்துக்காக என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட இதழ் எது?