6.1 திறனாய்வு நூல்களும் திறனாய்வும்

     இன்றைய     திறனாய்வு     பற்றிப் பேசுகிற நாம், படைப்பிலக்கியங்கள் எவ்வாறு திறனாய்வு செய்யப்படுகின்றன என்பதையே அதிகமாகப் பார்க்கிறோம்; அதிலேயே கவனமும் செலுத்துகிறோம். ஆனால், திறனாய்வு எவ்வாறு செய்யப்படுகிறது- அல்லது செய்யப்படவேண்டும் - அதன் வரையறைகள் மற்றும் அதன் கொள்கைகள் என்ன என்பது பற்றிய நூல்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் திறனாய்வு செய்வதற்கு அத்தகைய நூல்களே வழிகாட்டிகளாக இருக்கின்றன. மேலும், திறனாய்வு என்பது சில வரையறைகளுக்குட்பட்ட ஓர் ஒழுங்குமுறை (System)     என்பதை     இத்தகையவைதாம் உணர்த்துகின்றன. இத்தகைய ஒழுங்குமுறை அல்லது கொள்கை, பழங்காலத்திலேயே     இருந்து     வந்திருக்கிறது. இதற்குத் தொல்காப்பியம்     ஓர் உதாரணம். குறிப்பிட்ட எந்த இலக்கியத்தையும் இது திறனாய்வு செய்யவில்லை; மேலும், திறனாய்வு எவ்வெவ்வாறெல்லாம் செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் “நேரடியாக” இது பேசவில்லை. ஆனால், இவற்றிற்கும் ஒரு மேல்நிலையில், இலக்கியம் எவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது, அதன் பண்புகள், பகுதிகள், செயல்கள், செய்திகள் என்ன என்று இலக்கியக் கொள்கை பற்றிப் பேசுகிறது. இது திறனாய்வு பற்றியது அன்று எனினும், இதனைக் கொண்டு, திறனாய்வு செய்தலும், அது பற்றிப்     பேசுதலும் சாத்தியமாகின்றன. இது போன்றுதான் அரிஸ்டாட்டிலின் Poetics (கவிதையியல்) என்ற நூலும் அமைந்துள்ளது. எனவே, இலக்கியத்தைத் திறனாய்வு செய்கிற செய்முறை (practice), அத்தகைய திறனாய்வின் பண்புகளைச் சொல்கிற கொள்கை, இவற்றை உட்கொண்டிருக்கிற இலக்கியம் பற்றிய கோட்பாடு என்ற மூன்று நிலைகள் உண்டென நாம் அறிய வேண்டும்.

6.1.1 திறனாய்வு நூல்கள்

    தமிழில் முதன் முதலாக எழுதப்பட்ட விமரிசனம் (திறனாய்வு) பற்றிய நூல், தொ.மு.சி.ரகுநாதனின் இலக்கிய விமரிசனம். இது. 1948 - இல் எழுதப்பட்டது. கவிதை பற்றிய கருத்தோட்டங்கள், கவிதையை அனுபவிக்கிற-காண்கின்ற பார்வை, இலக்கியத்தின் சமூகத்தனம் ஆகியவை பற்றி     இந்நூல் பேசுகிறது. இதன்பின், க.நா.சுப்பிரமணியம் 1951-இல் எழுதியது விமரிசனக்கலை     என்ற நூல். இது, ஆங்கிலத் திறனாய்வாளர்களின் வழி நின்று விமரிசனத்தின் பண்புகளை விளக்குகிறது.     இந்த இரண்டு நூல்களுமே அவர்கள் படைப்பாளர்களாக இருந்து எழுதிய நூல்களாகும். இதன்பிறகே, 1953-இல் இலக்கியக் கலை என்ற நூல் வெளிவந்தது. எழுதியவர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன். இதன்பிறகு, இலக்கியத் திறன் என்ற நூல் வெளிவந்தது. எழுதியவர் பேராசிரியர் மு.வரதராசன். இவ்விரண்டு நூல்களுமே, இலக்கியத்தின் பண்புகளைப் பற்றியும், அதன்     ஒழுங்குமுறைகள் பற்றியும் பேசுகிற கோட்பாடு சம்பந்தப்பட்ட நூல்களே யன்றித் திறனாய்வு நூல்கள் என்று சொல்வதற்குரியன அல்ல. ஹட்சன் (W.H.Hudson), வின்செஸ்டர் (C.T.Winchester) முதலிய ஆங்கில ஆசிரியர்களின் நூல்களைப் பின்பற்றி     எழுதப்பட்டவை இவை. ஆனால், இவை தமிழ் இலக்கியங்களிலிருந்து, ஏற்ற எடுத்துக்காட்டுகளைத் தருகின்றன. முக்கியமாக இலக்கியக் கலை எனும் நூல், இலக்கியக் கூறுகளைப் பழைய இலக்கியங்களோடு விளக்கமாகப் பொருத்திக் காட்டுகிறது. பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி என்பார் எழுதிய இலக்கியத் திறனாய்வியல் எனும் நூல் இலக்கியத்தின் பல பகுதிகளையும் பண்புகளையும் பேசுகிறது. எனினும் தமிழ் இலக்கியங்களோடு பொருத்திக் காட்டுவதில் அக்கறை காட்டவில்லை. தொடர்ந்து, முக்கியமாக 1970-களுக்குப் பிறகு, திறனாய்வு குறித்துப் பல கட்டுரைகள் வெளிவந்தன. கலாநிதி கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும் (1979), திறனாய்வுப் பிரச்சனைகள் (1980) ஆகிய நூல்கள் திறனாய்வு பற்றியன. தி.சு. நடராசனின் திறனாய்வுக் கலை எனும் நூல் திறனாய்வின் வகைகள், அணுகுமுறைகள், திறனாய்வின் கொள்கைகள் முதலியன     பற்றி இன்றைய இலக்கியத்தோடும் பழைய இலக்கியத்தோடும் பொருத்திக் காட்டி விளக்குகிறது. சரியாகச் சொல்லப் போனால், இத்தகைய நூல்கள் தமிழில் மிகவும் குறைவு; இலக்கியங்களை விளக்குகிற கொள்கை சார்ந்த நூல்களே அதிகம்.