6.2 இன்றைய திறனாய்வாளர்கள் |
|
திறனாய்வாளர்களைப் பொதுவாக அவர்தம் நிலைப்பாடுகள், கொள்கைகள், அணுகுமுறைகள் முதலியவற்றின் அடிப்படையில், பகுத்துக் காண்பது திறனாய்வின் சில போக்குகளை அறிய உதவுகின்றது. ஏற்கெனவே அவர்களைப் படைப்பாளர்களின் வழிவந்தோர், கல்வியாளர் வழிவந்தோர், ஏனைய பிற தளங்களிலிருந்து வந்தோர் என்று பகுத்தறிந்து சொன்னோம். மேலும் சில வகையினரைக் காண்போம். அ) பொதுவான ஆராய்ச்சியாளர்கள் : பொதுவான ஆராய்ச்சிகள், ஓரே தளத்திலிருந்து செய்யப்படுபவை; பல திறத்தவை ;பல தரத்தவை. இவர்களுள் இலக்கிய ஆராய்ச்சியைப் பொறுத்த அளவில் குறிப்பிடப்பட வேண்டியவர், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறு எழுதிய ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவையன்றி இலக்கியம், வரலாறு, தத்துவம், கலைகள், மொழிநூல் முதலிய பல துறைகளை இணைத்து ஆராய்கின்ற பல்துறை ஆய்வு (Inter disciplinary) முக்கியமானதாகும். இதில் குறிப்பிடத்தக்கவர்கள், பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் மயிலை சீனி. வேங்கடசாமி முதலியோர். ஆ) மார்க்சியத் திறனாய்வாளர்கள்: தமிழில் மார்க்சியத் திறனாய்வு மிகவும் செல்வாக்குடையது. மார்க்சியம் அல்லது மார்க்சியம் அல்லாதது என்று இரு நிலைகளாகப் பார்க்கின்ற அளவுக்கு, மார்க்சியத் திறனாய்வு செல்வாக்குடன் விளங்குகிறது. இதில் பலர் குறிப்பிடத் தகுந்தவர்களெனினும், மிக முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள். தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி, கோ.கேசவன், எஸ்.தோத்தாத்திரி ஆகியோர் ஆவர். இ) குறிப்பிட்ட படைப்புகளை ஆய்வோர் : ஆய்வுப் பொருளாக - தளமாக அமைந்தவர்களில் முதன்மையானவர்கள் இளங்கோவடிகள், திருவள்ளுவர், கம்பர், பாரதியார் ஆகியோர். இந்தத் தளங்களுள்ளும் பாரதி ஆய்வுகள் பல பரிமாணங்களையும் அணுகுமுறைகளையும் பெற்றுள்ளன. முக்கியமாகப் பாரதி மீது தனி அக்கறை செலுத்துகிறவர்கள் மற்றும் பாரதி ஆய்வாளர்கள் என்று கருதத்தக்கவர்கள். இன்றைய படைப்பிலக்கியத்தில் தனியாக - சிறப்பாகக் கவனம் செலுத்துகிறவர்கள் ஆவர். ஜீவா, வ.ரா., கு.ப.ராசகோபாலன், பெ.சு.மணி முதலியோர் பாரதி ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஈ) அழகியல் ஆய்வாளர்கள் : உருவம், உத்தி, அழகு, தரம் முதலியன பற்றித் தனி அக்கறை செலுத்திய - செலுத்துகிற திறனாய்வாளர்களும் தமிழில் பலராக உள்ளனர். இவர்களுள் டி.கே.சி., க.நா.சு. மிக முக்கியமானவர்கள். உ) மேலைத் திறனாய்வு முறையில் ஆய்வோர்: அடுத்து, மேலைநாட்டுப் புதிய சொல்லாடல்கள் - சிந்தனை முறைகள் (discourses), புதிய பிரச்சனைகள் முதலியவற்றில் கவனம் செலுத்துகிற போக்கு 1990-களுக்குப் பிறகு, தமிழில் வளர்ந்து வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், தி.சு.நடராசன், ராஜ்கௌதமன், க.பஞ்சாங்கம், பிரேம்-ரமேஷ் முதலியோர் ஆவர். |