6.5 தொகுப்புரை

    இருபதாம் நூற்றாண்டின்     தொடக்கத்திலிருந்து அதன் இறுதிக்காலம் வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்த் திறனாய்வு பெருமைப்படும்படியாக வளர்ந்துள்ளது. தொடக்கத்தில், பொருள் விளக்கம் கூறுதல், நயம் சொல்லுதல் என்ற நிலையிருந்தது. அதன்பிறகு,     இடையில் நவீனத்துவத்தின் வரவினால், புதியதைப் பாராட்டுதல் என்ற முறையில் திறனாய்வு, கூர்மை பெற்று வளர்ந்தது. அதன்பிறகு நவீனச் சிந்தனை முறை, கொள்கைகள் முதலியன கொண்டு இலக்கியத்தை மேலும் ஆழமாகக் காண்பது வளர்ச்சி பெற்றது.

    தமிழில் திறனாய்வும், ஆராய்ச்சியும் நெருக்கமாகக் காணப்படுகின்றன. அத்தகைய முறையில் சிலர் இலக்கியத்தைத் திறனாய்ந்துள்ளனர். மேலும், இலக்கியத்தை,     தத்துவம், நாட்டுப்புறவியல், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல துறைகளை இணைத்துப் பல்துறை ஆய்வாக ஆராய்கிற முறையும் தமிழ்த் திறனாய்வு உலகில் காணப்படுகிறது. அடுத்து, அமைப்பியல், பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் முதலிய அண்மைக் காலத்துக் கொள்கைகள் / சிந்தனை முறைகள் ஆகியவற்றின் பின்னணியில் இலக்கியப் பனுவல்களையும், பிற ஆவணங்களையும் ஆராய்ந்து கூறுகிற போக்கு, இன்று பல திறனாய்வாளர்களிடையே     காணப்படுகிறது.     இப்போக்குத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இலக்கியப் பனுவல்களுக்குப் புதிய புதிய விளக்கங்கள் தருவதும், இன்றைய சூழலின் சமூக - அரசியல் - பண்பாட்டுச் சூழமைவுகளுக்கும் தேவைகளுக்கும் பொருந்துமாறு திறனாய்வு முறைகளை வகுத்துக் கொள்வதும் இன்றைய திறனாய்வாளர்களிடையே காணப்படுகிற     முக்கியமான போக்குகளாகும்.     இன்று     படைப்பாளர்கள்     பலர், கல்வியாளர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகையோரில் பலர், திறனாய்வாளர்களாகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒருநிலை ஆகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தொ.மு.சி.ரகுநாதன், பாரதி பற்றி எழுதிய முக்கியமான நூல் யாது?
2.
பள்ளு இலக்கியம் பற்றிய புதிய செய்திகளைத் தம் திறனாய்வு மூலம் வெளிப்படுத்தியவர் யார்?
3.
முற்போக்கான போக்குகள் என்று நா.வானமாமலை கூறும் போக்குகள் எத்தகையவை?
4.
‘அந்நியமாதல்’ என்ற மேலைநாட்டுக் கொள்கையில் அதிகமான அக்கறை கொண்ட தமிழ்த் திறனாய்வாளர் யார்?
5.
தமிழில் பின்னை அமைப்பியல் என்ற கொள்கையை அதிகம் பின்பற்றிய திறனாய்வாளர் யார்?