| 2.1 
              சிறுகதையின் தோற்றம்  காலம் 
              காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா 
              மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு 
              முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்த போது, ஓய்வு நேரங்களில் 
              சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் 
              கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர். கதை கூறுபவர் 
              தன்னுடைய கற்பனை வளத்தாலும், அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும் 
              கேட்டதையும் விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது போக்கிற்குத் துணை 
              நின்றனர். ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்’ என்று சுவாரஸ்ய உணர்வோடு 
              கதை தொடங்கும் மரபும் நம்மிடையே இருந்துள்ளது. பொய்ம்மொழி, பொய்க்கதை, 
              புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. 
              குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப் ‘பாட்டி கதை’ சொல்லும் மரபு 
              உண்டு. அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்து வந்துள்ளது. பின்பு 
              ‘எழுத்து மரபு’ ஏற்பட்ட போது, கதைகள் பெரிய 
              எழுத்துக் கதைகளாக எழுதப்பட்டன. பின்னர், அச்சு இயந்திர 
              வருகைக்குப் பின்னர், அக்கதைகள் நூல்களாகவும் வெளிவந்தன. 
              இன்றும், அவை பெரிய எழுத்துக் கதைகள் 
              என்ற பெயரில் 
              விற்பனையில் உள்ளன.  அல்லி அரசாணி மாலை, 
              புலந்திரன் 
              கதை, வீர அபிமன்யு, மயில் இராவணன் கதை, சதகண்ட 
              இராவணன் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை 
              என்று இக்கதைகள் பல.  மேலை 
              நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய
              நாடுகளிலும், கீழை நாடான ரஷ்யாவிலும்  சிறுகதை 
              என்ற 
              பெயரில் ஒரு நிகழ்ச்சி, ஓர் உணர்ச்சி, ஓரிரு பாத்திரங்களை 
              அடிப்படையாகக் கொண்டு, அரைமணி நேரத்தில், ஒரே அமர்வில் 
              படித்து முடித்துவிடக் கூடிய கதைகள் தோற்றம் பெற்று 
              அச்சேறின. ஆங்கிலக் கல்வியின் காரணமாக, நம்மவர்களும் அதே 
              போன்ற கதை மரபை நம்மிடையே உருவாக்கத் தொடங்கினர். 
              இப்படித் தொடங்கியதுதான் தமிழ்ச் சிறுகதை வரலாறு.  2.1.1 
              உலக மொழிகளில் சிறுகதையின் தோற்றம்  உலக 
              நாடுகளில், மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் தான் 
              சிறுகதை மிக விருப்பமான இலக்கிய வடிவமாகப் போற்றப்படுகிறது. 
              நாவலை விடச் சிறுகதைக்கே அங்குச் செல்வாக்கு அதிகம். 
              பிராங்க் ஓ கானர்  (Frank 
              O ‘Connor) என்ற சிறுகதை 
              விமர்சகர், "அமெரிக்கர்கள் சிறுகதை எழுதுவதில் காண்பிக்கும் 
              திறமையைப் பார்த்தால், அதை அவர்கள் தேசியக் கலையாகக் 
              கருதுகிறார்கள் என்று சொல்லலாம்" என்று குறிப்பிடுகிறார்.
              "அமெரிக்க மக்களிடையே இருக்கும் வேகமும் பொறுமையின்மையும்
              காரணமாகத்தான் சிறுகதை வடிவம் அமெரிக்க இலக்கிய 
              உணர்வுக்கு ஏற்புடையதாயிற்று" என்று வில்லியம் 
              டீன் ஹவெல்ஸ் 
              (William Dean Howells) என்ற மற்றொரு விமர்சகர் கூறியுள்ளார். 
              
              அமெரிக்காவின் மிகச் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களாக 
              விளங்கும் எட்கர் ஆலன்போ, நத்தானியல் ஹாதான்,
              வாஷிங்டன் இர்விங், ஓஹென்றி ஆகியோர் உலக நாடுகள் 
              அனைத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.  பிரான்ஸ் 
              நாட்டில் தோன்றிய சிறுகதைகள் உலக அளவிலேயே மிகப் புகழ்பெற்றவை ஆகும். 
              மெரிமீ (Merimee), பால்ஸாக் 
              (Balzac),  மாப்பசான் (Maupassant) 
              ஆகிய சிறுகதை ஆசிரியர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாக உலகத்தினரால் 
              அறியப்பட்டனர். இவர்களில்,  மாப்பசான்தான் இந்திய மொழிச் சிறுகதைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். 
               ரஷ்யாவில் 
              செகாவ் (Chekkov),  
              துர்கனேவ், கொகொல்  (Gogol) ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதை 
              எழுத்தாளர்கள். இவர்களில் கொகொல் எழுதிய மேலங்கி 
              (Overcoat) புகழ்பெற்ற கதையாகும். இக்கதையை முன்மாதிரியாகக் 
              கொண்டுதான் ரஷ்யாவில் பலர் சிறுகதை படைத்துள்ளனர். அதைக் கருத்தில் 
              கொண்டு, "கொகொலின் மேலங்கியுள் இருந்துதான் நாங்கள் எல்லாரும் 
              பிறந்து வந்தோம்" (We all come out from under Gogol’s Overcoat) 
              என்று கூறி, நன்றி பாராட்டுகிறார் துர்கனேவ். கொகொல், ரஷ்யாவில் ‘சிறுகதையின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.  இங்கிலாந்தில் 
              ரட்யாட் கிப்ளிங்  (Rudyard Kipling), 
              
              ஆர்.எல்.ஸ்டீவன்சன் (R.L.Stevenson), 
              கதரீன் மான்ஸ்ஃபீல்ட் 
              (Katherene Mansfield), தாமஸ் ஹார்டி  
              (Thomas Hardy), 
              ஜோசப் கான்ராட்  (Joseph Conrad), 
               ஹென்றி ஜேம்ஸ் 
              
              (Henry James), ஜேம்ஸ் ஜாய்ஸ் 
              (James Joice) போன்றவர்கள்
              சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள். 
              இங்கிலாந்தில் ஸ்ட்ரான்ட் (Strand), ஆர்கஸி (Argosy), 
              பியர்சன்ஸ் மேகஸீன் (Pearsons Magazine) என்ற இதழ்கள் 
              சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.  2.1.2 
              தமிழில் சிறுகதையின் தோற்றம்   தமிழ் 
              மொழியில் அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட 
              பின்பு வீரமாமுனிவர் (1680-1749) எழுதிய பரமார்த்த 
              குரு
              கதை என்ற கதை நூல், அவர் காலத்திற்குப் பிறகு, 1822இல் 
              
              சென்னை கல்விச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. இந்நூல்தான், 
              சில ஆய்வாளர்களால் தமிழின் முதல் சிறுகதை நூலாகச் 
              சுட்டப்படுகிறது. பின்பு  கதாமஞ்சரி 
              (1826), ஈசாப்பின் 
              நீதிக்கதைகள் (1853), மதனகாமராஜன் கதை (1885), மயில் 
              இராவணன் கதை (1868), முப்பத்திரண்டு பதுமை கதை (1869), 
              தமிழறியும் பெருமாள் கதை (1869), விவேக சாகரம் (1875), 
              கதா சிந்தாமணி (1876) என்ற கதை நூல்கள் வெளியாயின. 
              பண்டிதர் ச.ம.நடேச சாஸ்திரி, தமிழ் நாட்டில் வழங்கி வந்த 
              செவிவழிக் கதைகளைத் தொகுத்து, தக்காணத்துப் 
              பூர்வ 
              கதைகள் (1880),  
              திராவிடப் பூர்வ காலக் கதைகள் (1886), 
              
              திராவிட மத்திய காலக் கதைகள் (1886) 
              என்ற தலைப்புகளில் 
              வெளியிட்டார். தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கி வந்த 
              தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதை 
              போன்ற 
              கதைகளும் தமிழில் அச்சாயின. அஷ்டாவதானம் வீராசாமி
              செட்டியார் தொகுத்த  விநோத ரச மஞ்சரி  
              என்ற கதை நூல் 
              1876இல் வெளிவந்தது. இதில் கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம்,
              ஏகம்பவாணன், ஒளவையார் போன்றோர் வரலாறு கதையாகச் 
              சொல்லப்பட்டுள்ளது. திருமணம் செல்வக்கேசவராய முதலியார் 
              அபிநவக் கதைகள் என்ற கதைத் தொகுதியை 
              எழுதி
              வெளியிட்டுள்ளார். இதில் கற்பலங்காரம், தனபாலன், கோமளம்,
              சுப்பைய்யர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்ற ஆறு கதைகள் 
              இடம் பெற்றிருந்தன. இவ்வாறு, தமிழில் சிறுகதை முயற்சிகள் அச்சு 
              வடிவில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் மேற்கொள்ளப்பட்டன 
              என்பதை அறிய முடிகின்றது.  |