|  
   2.1 தமிழ்ப் புதினத்தின் தோற்றம் 
 மேனாட்டாரின் வருகைக்குப் பின்னர் பத்தொன்பதாம் 
 நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் புதினம் 
  பிறந்தது. 
 ஆங்கிலக் கல்வியைக் கற்று, ஆங்கிலப்  புதினங்களைக் 
 கற்றவர்களே முதல் புதினங்களைப் படைத்தனர். 
 ஆங்கிலக் 
 கல்வி கற்று, நீதிபதியாகப் பணியாற்றிய 
  மாயூரம். 
 ச.வேதநாயகம் பிள்ளை அவர்களே 1889-இல்  பிரதாப 
 முதலியார் சரித்திரம் எனும்   நாவலை 
 எழுதினார். 
 புதினத்திற்கு எழுதிய ஆங்கில முன்னுரையில், 
  ‘தமிழில் இம்மாதிரி உரைநடை 
 நவீனம், பொதுமக்களுக்கு 
 இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் 
 இந்நூல் 
 வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் 
 இருக்கலாம் எனப்  பெருமை 
 கொள்கிறேன்' - என்று 
 குறிப்பிடுகின்றார்.  
 வேதநாயகம் பிள்ளையைத் தொடர்ந்து 
  பலர் புதினங்கள் 
 எழுதினர்.  
 2.1.1 வளர்ச்சிக் 
 காலக் கட்டங்கள்  
 தமிழ் மொழியின் புதின 
 வரலாற்றை மூன்று காலக் 
 கட்டங்களாகப் பகுப்பர். அவை பின்வருமாறு. 
  
  முதற் 
 காலக் கட்டம் (1910க்கு முன்) 
 மாயூரம்  முனிசீப் 
 வேதநாயகம்  பிள்ளை, பண்டித 
 எஸ். எம். நடேச சாஸ்திரி,  பி. 
 ஆர். ராஜமையர், 
 சு.வை. குருசாமி  சர்மா, அ.மாதவையா ஆகியோர் 
 முதற் காலக்கட்டத் தமிழ் நாவல் படைப்பாளிகள் ஆவர். 
   இரண்டாம் 
 காலக் கட்டம் (1910-1940) 
      இக்காலக் கட்டத்தில்   
         வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர். 
        ரங்கராஜு, எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு, வை.மு. கோதைநாயகி அம்மாள் முதலியோர் 
        நாவல்கள் படைத்தனர். 
    மூன்றாம் 
 காலக் கட்டம் (1940 முதல் இன்று வரை) 
      இக்காலக் கட்டம் கல்கியிலிருந்து 
        தொடங்குகிறது. அகிலன், க. நா. சுப்பிரமணியம்,  
        தி. ஜானகிராமன், டாக்டர். மு.வ., அறிஞர் அண்ணா, நா.பார்த்தசாரதி, 
        சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், கு.ராஜவேலு, லக்ஷ்மி, கலைஞர் கருணாநிதி, விக்கிரமன், 
        இந்திரா பார்த்தசாரதி, நீல. பத்மநாபன், பாலகுமாரன், குமுதினி, அநுத்தமா, 
        ராஜம் கிருஷ்ணன், வாஸந்தி, விமலாரமணி, சிவசங்கரி, இந்துமதி, கிருத்திகா, 
        பாமா, அநுராதா ரமணன், சாண்டில்யன், கோவை. மணிசேகரன் முதலியோர் இக்காலக் 
        கட்ட நாவலாசிரியர்கள் சிலர் ஆவர்.  
      2.1.2 முன்னோடிகள் 
         
 செய்யுள் நூல்களை எல்லாரும் 
 படிக்க முடியாது 
 என்பதை உணர்ந்து, உரைநடை  வாயிலாக 
 நல்ல 
 கருத்துகளை உணர்த்த வேண்டும்  என்று 
  வேதநாயகம் 
 பிள்ளை ஆர்வம் கொண்டார். அவர் 
 நாவல்கள் 
 வாயிலாகத் தாம் உணர்த்த விரும்பியவற்றைப் படைக்க 
 முன் வந்தார். இவர் முதல்  தமிழ் 
 நாவலை எழுதிய 
 பெருமைக்குரியவர் ஆவார். 
  
   மாயூரம் 
 முனிசீப் வேதநாயகம் பிள்ளை 
   
      இவர் தமிழ் நாவலின் தந்தை என அழைக்கப்படுபவர். 
        இவர் தமிழின் முதல் புதினமான  பிரதாப முதலியார் 
        சரித்திரத்தையும், சுகுண சுந்தரி கதையையும் படைத்தவர்.  பிரதாப 
        முதலியார் சரித்திரம் அற்புதச் சம்பவங்கள் நிறைந்த ஒன்று.  
        சத்தியபுரி என்னும் கிராமத்திலுள்ள நிலமானியக் குடும்பங்கள் இரண்டின் 
        இணைவு பற்றியது அதன்  கதைக் கரு. சாதாரணக் 
        குடும்பக் கதைதான் இது என்றாலும், இடம் பெறுகின்ற நிகழ்ச்சிகள், திடீர் சம்பவங்கள் 
        போன்ற பல அம்சங்களால் துப்பறியும் கதை  போலவும், 
        தலைவி ஞானாம்பாள் மாறுவேடத்தில் சென்று அரசாளுதல் முதலியன செய்தலால் 
        வரலாற்றுப்  புதினம் போலவும், கிளைக்கதைகள் 
        நீதிக் கருத்துகள் இடம்பெறுதலால் நீதிக்கதை  போலவும் 
        அமைந்துள்ளது.  
       சுகுணசுந்தரி கதை, கதைத்தலைவியை 
  ஓர் அரசன் 
 கவர்ந்து செல்கிறான். தலைவி வழியில் கன்னி மாடத்தில் 
 புகுந்து கொள்கிறாள். அரசன்  தேடிக் 
 கண்டுபிடிக்கிறான். 
 அதற்குள் அந்த அரசனுடைய  ஆட்சியை 
 அமைச்சன் 
 கைப்பற்ற முயல்கிறான். போராட்டங்கள் வளர்கின்றன. 
 இவரின் முதல் நாவல் சமூக நாவலுக்கு 
 வித்திட்டது 
 என்றால், இவரின் அடுத்த நாவலான சுகுண 
 சுந்தரி 
 கதை வரலாற்று நாவலுக்கு அடிகோலியது எனலாம்.  
   பண்டித 
 எஸ்.எம். நடேச சாஸ்திரி
  
   
 இவர்,  தானவன், 
 தீனதயாளு,  மதிகெட்ட மனைவி, 
 திக்கற்ற  இரு குழந்தைகள், 
 மாமி கொலுவிருக்கை, 
 தலையணை மந்திரோபதேசம் போன்ற நாவல்களைப் 
 படைத்துள்ளார். இவரை  
 மர்ம நாவலின்  முன்னோடி 
 எனலாம். 
  
   பி.ஆர். 
 இராஜம் ஐயர் 
 1896-ஆம் ஆண்டு இராஜம் 
  ஐயர்  கமலாம்பாள் 
 சரித்திரத்தை வெளியிட்டார். இதுவே தமிழில்  தோன்றிய 
 முதல் தொடர் கதை. மதுரை மாவட்டம்  
 சிறுகுளத்தில் 
 வாழ்ந்த முத்துசாமி ஐயர் - கமலாம்பாள் தம்பதிகளின் 
 வாழ்வை இது சித்திரிக்கிறது. நகர நாகரிகம் 
 கிராம 
 வாழ்க்கையைப் பாதிக்கும் முறை, கூட்டுக் குடும்பச் சிதைவு, 
 பெண்ணுரிமை முதலிய செய்திகளை இந்த 
 நாவல் 
 உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.  
   சு.வை. 
 குருசாமி சர்மா  
 இவரது புதினம் பிரேமகலாவதீயம். 
 இக்கதை பிராமணக் 
 குடும்பச் சூழலில் படைக்கப் பெற்றுள்ளது. இப்புதினம் 
 நாட்டுப்புற ஆடல் பாடல்களைப் பதிவு  செய்வதாகவும் 
 உள்ளது. 
  
   அ. 
 மாதவையா 
 இவர் பஞ்சாமிர்தம் என்ற 
 மாத இதழ் நடத்தி வந்தார். 
 கோணக் கோபாலன் என்ற புனை பெயரில் 
  கவிதை, 
 கதை, கட்டுரை முதலியன எழுதியுள்ளார். 
  இவரது 
 பத்மாவதி சரித்திரத்தில் பல நிகழ்ச்சிகள் 
  ஒன்றோடு 
 ஒன்று பின்னிக் கிடக்கின்றன. 
 பத்மாவதியின் மேல் 
 அவளுடைய கணவனுக்கு ஏற்படும்   ஐயமே 
 நீண்ட 
 சிக்கலாய் வளர்ந்து முடிகிறது. விஜயமார்த்தாண்டம் 
 என்னும் கதையில்  நாட்டுக் 
 கோட்டைச் செட்டியார்களும், 
 வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் பல கோணங்களில் 
 காட்டப்படுகிறார்கள்.  முத்து மீனாட்சி என்னும் 
 நாவல் 
 அவற்றைவிடப் புதுமை  மிகுந்தது; புரட்சியானது.  இளம் 
 விதவை ஒருத்தி படும் துன்பங்களை 
 அவளே 
 எடுத்துரைக்கும் முறையில் இந்த நாவல் அமைந்துள்ளது.  
 இவர் கதைக் கருவிலும், 
  கட்டமைப்பிலும் புரட்சி 
 செய்தவர். இவரைக்  கைலாசபதி தமிழ்நாட்டின் தாக்கரே 
 எனப் பாராட்டுவார். (தாக்கரே - என்பவர் ஆங்கில நாவல் 
 படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.)  
  |