2.3 விடுதலைக்குப் பின்னர் நாவல்கள்

விடுதலைக்குப் பிந்தைய காலக் கட்டத்தில் தோன்றிய நாவலாசிரியர்கள் பலர். அவர்கள் அனைவரையும் பற்றி இங்குத் தனித்தனியாகக் கண்டால் அளவு விரிவுபடும். ஆயினும் நாவலாசிரியர்களின் பொதுத்தன்மை கருதி,

(1) வரலாற்று நாவலாசிரியர்கள்

(2) விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள்

(3) சமுதாயச் சீர்த்திருத்த நாவலாசிரியர்கள்

(4) குடும்பச் சிக்கல்களைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள்

(5) வட்டார நாவலாசிரியர்கள்

என்ற தலைப்பின் கீழ்த் தமிழ் நாவலின் மூன்றாம் கட்ட வளர்ச்சி குறித்துக் காணலாம்.

2.3.1 வரலாற்று நாவலாசிரியர்கள்

தமிழ் நாவல் வரலாற்றில் கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியின் வருகை இளஞாயிற்றின் உதயம் போன்றது. நாவலைப் பொதுமக்கள் இலக்கியமாக, எல்லார்க்கும் உரியதாக ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு. கல்கி தாம் ஆசிரியராகப் பணியாற்றிய ஆனந்த விகடன், கல்கி வார ஏடுகளின் மூலம் தொடர்கதைகள் பல எழுதிப் புதினத்தின் வாசகர் வட்டத்தை விரிவு படுத்தினார்.

மகேந்திர பல்லவன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது பார்த்திபன் கனவு. அடுத்த வரலாற்று நாவல் சிவகாமியின் சபதம். மாமல்லபுரம் செல்கிறவர்கள் சிவகாமியின் சபதம் படித்தவர்களாக இருந்தால் தவறாமல் ஆயனச் சிற்பியையும், அவன் மகள் சிவகாமியையும் நினைப்பார்கள். சிவகாமியின் சபதத்தில் அவ்வளவு சிக்கல்கள் இல்லை. ஆயினும் சிற்பியின் மகளான சிவகாமி என்ற ஆடற் கலையரசியின் - வளர்ச்சியும், வாழ்வுப் போராட்டமும்; இன்னலும், குறிக்கோளும் நாவலின் தரத்தை உயர்த்துவனவாக உள்ளன. நாட்டியக் கலையில் நிகரற்று விளங்கிய அவளுடைய கலைத்திறமை, அரசியல் போராட்டங்களில் சிக்கி அல்லல்படும்போது கதையைப் படிப்பவர்களின் நெஞ்சம் துன்புற்றுத் துடிக்கிறது.

இராசராச சோழனின் வரலாற்றைக் கொண்டு அமைந்த இவரின் பொன்னியின் செல்வன் கதையோட்டம் விறுவிறுப்பானது. கற்பனைச் சுவையிலும் இது இணையற்றதாக உள்ளது; பக்க அளவிலும் மிகப்பெரியது.

அகிலனின் சோழர் காலச் சூழ்நிலையை விளக்கும் வேங்கையின் மைந்தன்-சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற நாவலாகும். கயல்விழி, பாண்டியரின் ஆட்சியை விளக்குவது. வெற்றித் திருநகர் விஜயநகர ஆட்சியைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்று நாவல்.

ஜெகசிற்பியன் - இவர் படிக்கப் படிக்கச் சுவையும், திடீர்த் திருப்பமும் கொண்ட திருச்சிற்றம்பலம் என்னும் நாவலைப் படைத்துள்ளார். இவர் நாயகி நற்சோனை, ஆலவாய் அழகன், மகரயாழ் மங்கை, பத்தினிக் கோட்டம் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார்.

சாண்டில்யனின் மலைவாசல் ராஜமுத்திரை, யவனராணி, கடல்புறா ஆகிய புதினங்கள் குறிப்பிடத்தக்கவை. ராபர்ட் கிளைவ் பற்றிக் கூறும் வரலாற்று நாவலான ராஜபேரிகை வங்க மாநிலத்தின் பரிசை வென்ற பெருமைக்குரியது.

அரு. இராமநாதனின் - வீரபாண்டியன் மனைவி, அசோகன்காதலி; நா.பார்த்தசாரதியின் - பாண்டிமா தேவி, மணிபல்லவம்; விக்கிரமனின் - நந்திபுரத்து நாயகி, காஞ்சி சுந்தரி; பூவண்ணனின் - கொல்லிமலைச் செல்வி; கலைஞர் கருணாநிதியின் - ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம்; மு. மேத்தாவின் - சோழநிலா; கி. ராஜேந்திரனின் - ரவி குலதிலகன்; ஸ்ரீ வேணுகோபாலனின் - சுவர்ணமுகி ஆகியவை சில சிறப்பு வாய்ந்த வரலாற்று நாவல்களாகும்.

2.3.2 விடுதலை இயக்க நாவலாசிரியர்கள்

இந்திய மக்களின் தேசிய உணர்வும், அதன் விளைவாக எழுந்த விடுதலைப் போராட்டமும் இந்திய மொழிகளில் பல நல்ல நாவல்கள் பிறக்கக் காரணமாய் அமைந்தன. அவ்வழியில் தமிழிலும் தேசிய வீறு கமழும் நாவல்கள் பிறந்தன. இவ்வகை நாவல்களுக்கு உதாரணமாக கே.எஸ். வேங்கட ரமணியின் தேசபக்தன் கந்தன், அகிலனின் பெண், கல்கியின் தியாகபூமி, அலைஓசை, ர.சு. நல்ல பெருமாளின் கல்லுக்குள் ஈரம், ராஜம் கிருஷ்ணனின் வளைக்கரம், ந.பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

வேங்கடரமணி என்பவர் தென்னாட்டுத் தாகூர் என்று போற்றப்பட்டவர். இவரது தேசபக்தன் கந்தன் என்ற நாவல் இந்தியாவின் விடுதலை, கிராமங்களின் மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்துவதால் இதனை முதல் காந்திய நாவல் என்றும் கூறுவர். நாட்டின் விடுதலைக்குப் போராடி மடியும் கந்தனின் வீரச்செயல் இந்நாவலைப் படிப்போரை நெகிழச் செய்கிறது.

அகிலனின் பெண் என்ற நாவலும் தேசிய வீறு கமழும் நல்ல நாவலாகும். இக்கதையில் வரும் சந்தானம் தேசிய வீரனாக மாறி, நாட்டு விடுதலைக்காக உழைக்கிறான். கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களைத் தட்டியெழுப்பியதால் சிறைத் தண்டனை அடைகிறான். சந்தானத்தின் மனைவி வத்சலா மனத்திலும் சிந்தனைப் புரட்சி உண்டாகிறது. கிராம மக்களது இரங்கத்தக்க நிலை, அவளது மூடிக்கிடந்த விழிகளைத் திறந்து விடுகிறது.

கல்கியின் அலை ஓசையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. 1930-க்கும் 1947-க்கும் இடைப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளை இந்நாவலில் ஆசிரியர் சுவை குறையாமல் விளக்கிக் காட்டியுள்ளார்.

கல்லுக்குள் ஈரத்தில் திரிவேணி, தீக்ஷிதர் முதலிய கதைமாந்தர்களை வரலாற்றுத் தலைவர்களுடன் இணைத்துக் கதை நிகழ்ச்சிகளில் மெய்ம்மைத் தன்மையை நல்ல பெருமாள் திறம்பட உருவாக்கியுள்ளார்.

கோவாவின் விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் ராஜம் கிருஷ்ணனின் வளைக்கரம் சிறப்பானது. கோவா மக்களின் உள்ளத்தில் ஊற்றெனச் சுரந்து, பீறிட்டுப் பொங்கிய விடுதலை உணர்ச்சியையும், அதற்காக அவர்கள் செய்ய நேர்ந்த மகத்தான தியாகங்களையும் இந்நாவலில் அழகுற அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலே குறிப்பிட்டவை தவிர, வேறு பல நாவல்களிலும் விடுதலைப் போராட்டச் சாயல் படிந்திருப்பதைப் படிப்போர் உணரலாம்.

2.3.3 சமுதாயச் சீர்த்திருத்த நாவலாசிரியர்கள்

தமிழ் நாவலாசிரியர்கள் சமுதாய விடுதலையை மனத்தில் கொண்டு பல கலைப்படைப்புகளை உருவாக்கத் தொடங்கினர். தமிழ் நாவல்களில் சமுதாயச் சீர்த்திருத்த நோக்கு தொடக்கக் காலத்திலேயே அரும்பிவிட்டது. சமுதாயச் சீர்த்திருத்தத்திற்கு முதலிடம் கொடுத்தவர் மாதவையா. இத்தகைய நாவல்களில் பெண்ணுரிமை, சாதிபேத மற்ற சமுதாயம், பழமையிலிருந்து விடுபட்ட பகுத்தறிவுச் சிந்தனை முதலியன மிகவும் வற்புறுத்தப்படுகின்றன.

பெண்ணுரிமைக்காக வாதாடிப் போராடியவர் வ.ரா.(வ.ராமசாமி) இந்நோக்கத்திற்காக எழுதப்பெற்ற புதினங்கள் சுந்தரி, கோதைத்தீவு போன்றவை.

பி.எஸ். ராமையாவின் பிரேமஹாரம் நாவலில் கல்யாணி வரதட்சணைச் சிக்கலால் புகுந்த வீட்டாரால் நிராகரிக்கப்படுகிறாள். அவள் தங்கச் சங்கிலிக்காகத் தன்னை நிராகரித்த கணவனுடன் போக மறுத்துவிடுகிறாள். கல்யாணியின் தந்தை தன் மகளின் வாழ்வு மலர வேண்டுமே என்பதற்காக எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதையும் இவர் இந்நாவலில் சித்திரித்துள்ளார்.

கலப்பு மணம்

இன்றைய சமுதாயத்தில் கலப்பு மணம் செய்து கொள்வோருக்கு எத்தனையோ சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் கொண்டு இக்காலக்கட்டத்தில் சில நாவல்கள் எழுதப் பெற்றன. ஆர். வி. யின் அணையாவிளக்கு கலப்பு மணச் சிக்கலை எடுத்துப் பேசுகிறது. இலட்சியமும் நடைமுறை வாழ்க்கையும் முரண்பட்டு மோதிக் கொள்ளும் காட்சியைத் தஞ்சை மாவட்டப் பின்னணியில், கிராம வாழ்வின் உயிர்களை ததும்ப இந்நாவலில் எழுதிச் செல்கிறார் ஆர். வி.

திசை மாறிய பெண்கள்

வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கை பல நாவல்களில் காட்டப்படுகின்றது. மு.வ. நாவல்களில் இவ்வாறு வழுக்கி விழுந்த பெண்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தவறு செய்வதற்கான பல்வேறு காரணங்களையும் மு.வ. வெளிப்படுத்தியுள்ளார்.

விந்தனின் பாலும் பாவையும், டி.கே. சீனிவாசனின் ஆடும் மாடும் ஆகிய இரு நாவல்களும் இதே சிக்கலைத் தான் ஆராய்கின்றன.

ஏழைகள், தொழிலாளர்கள், உழைப்பாளிகளின் சிக்கல்கள்

நாடு விடுதலை பெற்ற பின் உழைக்காமலேயே சுகபோகங்களை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்களை ஏமாற்றி வாழும் போக்கும் மக்களிடையே உருவாகி விட்டது. டாக்டர். மு.வ.வின் கயமையில் கயவர்களின் செல்வாக்கும், போலி அரசியல் வாதிகளின் முன்னேற்றமும் விளக்கப்படுகின்றன.

பேராசையும், வாய்ப்பும் கொண்டவர்கள் சமுதாயத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை வசதிகளையும், உரிமைகளையும் பறித்துக் கொள்ளும் கொடுமையைப் பொன்மலரில் அகிலன் சித்திரிக்கிறார்.

அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள், அல்லலுக்கு ஆளாகி, அழுது மடிந்ததைப் பஞ்சும் பசியும் நாவல் காட்டுகிறது. தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சனையை அதன் அடி ஆழம் வரை சென்று, கண்டுணர்ந்து இந்நாவலில் வெளிப்படுத்துகிறார் ரகுநாதன்.

செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் விவசாயிகளின் போராட்டத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சிப் படிகளைச் சித்திரிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நாவல் ராஜம் கிருஷ்ணனின் அமுதமாகி வருக நாவல் ஆகும்.

சங்கரராமின் மண்ணாசை, லா.ச.ரா.வின் அபிதா, கி.ராஜநாராயணனின் கோபல்லபுரம், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, மணியனின் ஆசை வெட்க மறியும், இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், சூரியகாந்தனின் மானாவாரி மனிதர்கள் முதலியன சிறந்த சமுதாயப் புதினங்கள்.

2.3.4 குடும்பச் சிக்கல்களைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள்

வாழ்க்கையின் அடிப்படை அலகு - குடும்பம் என்ற கட்டமைப்பு ஆகும். மனித வாழ்க்கை நின்று கொண்டிருக்கும் அடித்தளம் குடும்பம். மனிதனுக்கும், புறவுலகிற்கும் தொடர்பு குடும்பத்தின் மூலம் ஏற்படுகின்றது. குடும்பம் - தனி மனிதன் என்ற இரண்டிற்கும் இடையேயான தொடர்பும், சிக்கலும் குடும்ப நாவல்களில் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன.

ஆண்-பெண் உறவு

ஆண் - பெண் உறவை, அதன் சிக்கலைக் கலைநோக்கோடு விமர்சிக்கும் தரமான நாவல்கள் பல தோன்றியுள்ளன. டாக்டர். மு.வ. வின் அல்லி, கரித்துண்டு, தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள், அகிலனின் சித்திரப்பாவை முதலியவற்றை இவ்வகையில் குறிப்பிடலாம்.

மேலும், கிருத்திகாவின் புதிய கோணங்கி, ஜெயகாந்தனின் ரிஷிமூலம், சிலநேரங்களில் சில மனிதர்கள், இந்திரா பார்த்தசாரதியின் மனக்குகை, வேஷங்கள், திரைக்கு அப்பால் ஆகிய நாவல்களில் இழையோடும் பிரச்சினை ஆண் பெண் உறவுகள் பற்றியதாகும்.

காதல் பற்றிப் பேசுவன

காதல், தாய்மை என்னும் இரு உணர்வுகளும் உலகிலேயே மிக உயர்ந்த உணர்வுகளாகப் போற்றப்படுகின்றன. பல நாவல்கள் காதலைப் பற்றியே பேசுகின்றன. அகிலன், நா. பார்த்தசாரதி, மு.வ., சு.சமுத்திரம், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோர் காதலின் மாண்பினை நயம்பட எழுதிக் காட்டியுள்ளனர்.

நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு என்ற நாவலும் நிறைவேறாத காதலைச் சித்திரிப்பதே. நா.பா.வின் பெரும்பாலான நாவல்களில் நிறைவேறாக் காதல் சித்திரிக்கப் படுகின்றது.

சு. சமுத்திரத்தின் ஊருக்குள் ஒரு புரட்சி, வேரில் பழுத்த பலா போன்றவை நல்ல நடையும் புரட்சி நோக்கமும் உடையவை. வாசவனின் வாழ்வின் ராகங்கள், அந்திநேரத்து விடியல்கள் போன்ற நாவல்களும் காதலைச் சித்திரிக்கின்றன.

காதல் உணர்வு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதையும், காதலுக்காக ஒருவர், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதையும், காதலில் ஆண் - பெண் இருபாலருள் ஒருவர் தோல்வி அடைந்தவர்களாகக் காட்டுவதையும் கருப்பொருள்களாகக் கொண்ட நாவல்கள் பல தமிழில் உள்ளன. அவை விரித்தால் பெருகும் இயல்பின.

பெண் எழுத்தாளர்கள்

குடும்ப நாவல்களைப் படைப்பதில் முன்னிற்பவர்கள் பெண் நாவலாசிரியர்களே. சமுதாய நலனுக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் உரம் ஊட்டக் கூடிய கருத்துகளையே இவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

லட்சுமி என்ற திரிபுரசுந்தரி - காஞ்சனையின் கனவு, மிதிலாவிலாஸ், அடுத்தவீடு போன்ற புதினங்களை எழுதியுள்ளார். அநுத்தமா குடும்பப்பிரச்சனையை ஒட்டி, கேட்டவரம், தவம், மணல்வீடு போன்ற நாவல்களை எழுதியுள்ளார். ஆர். சூடாமணி மனோதத்துவக் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். இவருடைய மனதுக்கு இனியவள், சோதனையின் முடிவு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்துமதியின் அலைகள், நிழல்கள் சுடுவதில்லை போன்றவை எண்ணத் தகுந்தவை. கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன், ஜோதிர்லதா கிரிஜா, வாஸந்தி, குயிலி ராஜேஸ்வரி, குமுதினி, கோமகள், அனுராதா ரமணன் போன்ற நாவல் ஆசிரியர்களும் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.

2.3.5 வட்டார நாவலாசிரியர்கள்

வட்டாரம் என்ற சொல் நிலவியலோடு தொடர்பு உடையது. ஒரு குறிப்பிட்ட பகுதியை நிலைக்களமாகக் கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டும் நோக்குடன் எழுதப்படும் நாவல்களையே வட்டார நாவல்கள் எனப்படுகின்றன. இவ்வகை நாவல்களில் கதை ஒரு சிற்றூரிலோ, அல்லது சிறிய நகரத்திலோ நடப்பதாகக் காட்டப்படும், வருணனைக் கூறு நிறைய இடம்பெறும்.

தமிழில் இப்போக்கைத்தோற்றுவித்த முன்னோடிகளாக கே.எஸ்.வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோரைக் குறிப்பிடலாம்.

மண்ணாசை (சங்கரராம்) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரமங்கலம் என்ற ஊரையும், நாகம்மாள் (சண்முகசுந்தரம்) கொங்கு நாட்டையும் பின்புலமாகக் கொண்டவை.

பின்வரும் நாவல்கள் வட்டார நாவல்களில் குறிப்பிடத்தக்கன. ஆர்.சண்முகசுந்தரத்தின் அறுவடை, சட்டிசுட்டது, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, நீல. பத்மநாபனின் தலைமுறைகள், பொன்னீலனின் கரிசல், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதை.

வாடிவாசல்-மதுரை மாவட்டத்து மறவர்கள் வாழ்வின் சிறுபகுதியையும், குறிஞ்சித்தேன்- நீலகிரி படகர்களின் முழு வாழ்வையும், தலைமுறைகள் நாஞ்சில் நாட்டு இரணியல் செட்டிமார்களின் வாழ்வையும் காட்டுகின்றன. புத்தம் வீடு - ஒரு கிறித்துவக் குடும்பத்தின் வாழ்வை, பனையேறிகளின் வாழ்வை எடுத்துக் காட்டுகிறது.

கோபல்ல கிராமம் - கோவில்பட்டி கரிசல் பகுதியைச் சார்ந்த கம்மவார் நாயக்கர்களின் வாழ்வை எடுத்துக் காட்டுகிறது. தி.ஜானகிராமனின் நாவல்களில் தஞ்சை மாவட்டத்து மண்ணின் மணமும், பேச்சு வழக்குகளும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.