3.1 துப்பறியும் புதினங்கள்

துப்பறியும் புதினங்கள் - ஏதேனும் நிகழ்ந்த ஒரு மர்ம சம்பவம் குறித்து மக்கள் கொள்ளும் மேலோட்டமான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே படைக்கப் பெற்றுள்ளன. மேலும் இன்றியமையாத நிலையில், கதையில் மர்மங்களே அதிக இடத்தைப் பெறும்.

3.1.1 முன்னோடிகள்

தொடக்க காலம் முதல் துப்பறியும் புதினங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இத்துப்பறியும் புதினங்கள் பெரும்பாலும் மேனாட்டுத் துப்பறியும் கதைகளின் தழுவல்களாகவே விளங்கின. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே. ஆர். ரங்கராஜு முதலியோர் எண்ணற்ற துப்பறியும் புதினங்களை எழுதிக் குவித்தனர்.

ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்ற நாவல் இரத்தினபுரி இரகசியம் என்பதாகும். நாவலின் இறுதி வரையிலும், வியப்பும், திகைப்பும், மர்மங்களும், சிக்கல்களும், எதிர்பாராத திருப்பங்களும் இந்நாவலில் பொழுது போக்கு அம்சங்களாக நிறைந்துள்ளன. இதில் கிருஷ்ணாசிங் என்பவர் துப்பறியும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளார். வடுவூராரின் நாவல்களில் மருங்காபுரி மாயக் கொலை மிகவும் பிரபலமான ஒன்று. மருங்காபுரிக்கு வரும் ஜமீன்தார்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர்; காரணம் அறிய இயலவில்லை. காரணத்தை அறிய அமரஸிங்ஹர் என்ற துப்பறியும் நிபுணர் வருகிறார். அவர் துப்புத்துலக்கும் நிகழ்ச்சிகளே நாவல் முழுவதும் இடம் பெற்றுள்ளன.

ஜே. ஆர். ரங்கராஜுவின் சந்திரகாந்தா என்ற நாவல் சவுக்கடி சந்திரகாந்தா என்ற பெயரில் நாடகமாகவும், திரைப்படமாகவும் வந்து மிகவும் பிரபலமடைந்தது. இவரது எல்லா நாவல்களிலும் துப்பறியும் பாத்திரமாகக் கோவிந்தன் பாத்திரம் இடம் பெற்றுள்ளது. நாவல் கதைப் போக்கில் சம்பவங்களை மர்மங்களாக்கி, அவ்வப்போது எதிர்பாராத திருப்பங்களை அமைத்து, துப்பறியும் நிபுணனுக்கு மாறுவேடங்கள் பல கொடுத்து, அந்த மாறுவேடங்களை வாசகர்கள் தெரிந்து கொள்ளாத வகையில் மறைத்துக் கதையை நடத்திச் செல்கின்றார் ஜே.ஆர்.ரங்கராஜு.

முதல் நூல்

பண்டித நடேச சாஸ்திரியார் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் நிகழும் குற்றங்களைக் கண்டு பிடித்தற்குக் காவல் துறையினருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டார். மேனாட்டுத் துப்பறியும் கலைநுட்பத்தையும் பயன்படுத்தித் தானவன் என்னும் போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புதக் குற்றங்கள்' என்ற தலைப்புடன் துப்பறியும் நூலை வெளியிட்டார். இது தமிழ்ப் புனைகதை உலகில் குறிப்பிடத் தக்க ஒரு வகைமையைத் தோற்றுவிக்க வழி வகுத்தது. இதுவே தமிழ் நாவல் உலகில் தோன்றிய முதல் துப்பறியும் நாவல் எனக் கொள்ளத்தக்கது.

3.1.2 தற்காலத் துப்பறியும் புதின ஆசிரியர்கள்

தேவன் எழுதிய ஜஸ்டிஸ் ஜகந்நாதன் சிறந்த துப்பறியும் நாவல். இவரது துப்பறியும் சாம்பு நகைச்சுவை ததும்பும் துப்பறியும் புதினமாகும். தமிழ்வாணன் படைத்த துப்பறியும் நிபுணரான சங்கர்லால் என்ற பாத்திரம் வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது.

தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹட்லி சேஸ் என்று பாராட்டப் படுகின்ற சுஜாதா - மக்களின் மனங்கவர்ந்த துப்பறியும் எழுத்தாளர்களுள் ஒருவராவார். துப்புத் துலக்குவதில் புதிய பாணிகளைக் கையாண்டு பாராட்டுப் பெற்றவர். புதினங்களில் சிறந்து விளங்குபவை கொலையுதிர் காலம், கரையெல்லாம் செண்பகப்பூ, நைலான் கயிறு, காயத்ரி ஆகியவை.

ராஜேஷ் குமார் புதினங்களில் ஆங்கில மொழிச்சொற்களின் கலப்பு மிகுதி. இவர் படைத்தவை ஓடும் வரை ஓடு, ஏழாவது டெஸ்ட் டியூப், டிசம்பர் இரவுகள் முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள் ஆகும். பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், இந்திரா சவுந்திர ராஜன் முதலியோரும் தற்கால மர்மக் கதை எழுத்தாளர்களுள் புகழ் பெற்றவர்கள்.