3.2 சமூகப் புதினங்கள்

சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைக் களையும் நல்ல நோக்கத்தோடு எழுதப்படுபவை சமூகப் புதினங்கள் ஆகும். சமுதாயச் சிக்கல்கள், பிரச்சாரங்கள், சீர்திருத்தங்கள் என்னும் போக்குகளில் இவ்வகைப் புதினங்கள் அமையும்.

நாரண துரைக்கண்ணன், வ.ரா. விந்தன், வேங்கட ரமணி, கல்கி, கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், கோவி.மணிசேகரன், நா.பார்த்தசாரதி, மு.வ. அநுத்தமா, இந்துமதி, ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி, வாஸந்தி சிவசங்கரி, அனுராதா ரமணன், கு. ராஜவேலு, நீலபத்மநாபன், வாசவன் முதலியோர் சிறந்த சமூகப் புதின ஆசிரியர்கள் ஆவர்.

3.2.1 காந்தியச் சிந்தனைகள்

இருபதாம் நூற்றாண்டைக் ‘காந்தியுகம்' என்றே கூறலாம். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தின் போது நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமுதாய, சமயத் துறைகளிலெல்லாம், நேரடியாகவோ, மறைமுகமாகவோ காந்தியத்தின் தாக்கம் ஏற்பட்டது. அண்ணலின் பொதுவான, வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துகளை இக்காலப் புதினங்களில் காண முடிகின்றது. இன்றைய சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் நீக்கி, மனிதர்களை மனிதர்களாக வாழச் செய்வதே காந்தியப் பார்வையாகும்.

கே. எஸ். வேங்கடரமணி என்பார் மக்கள் மனதில் தேசபக்திக் கனலை மூட்டுவதற்காக, தேசபக்தன் கந்தன் என்ற நாவலை 1933-இல் எழுதி வெளியிட்டார். கல்கி, காந்திய வழியில் சிறந்த நாவல்களைப் படைத்தார். இவர் சாதிக் கொடுமை, விடுதலை வேட்கை, பொருந்தா மணம், விதவையின் வேதனை ஆகியவற்றைத் தம் கதைகளுக்குக் கருவாக்கிக் கொண்டவர். இந்திய சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் எழுதிய நாவலே அலையோசை ஆகும்.

காந்தியச் சிந்தனையின் அடிப்படையில் நம் நாட்டுச் சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை ஆராய்ந்து மனித நேசத்தோடு படைக்கப்பட்டவை அகிலனின் புதுவெள்ளம், எங்கே போகிறோம் என்ற புதினங்கள். 1942-ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுந்த நாவல் தியாகத் தழும்பு (நாரண துரைக்கண்ணன்). வாசவனின் அக்கினிக்குஞ்சு, புதுயுகம் பிறக்கிறது, வாழ்வின் ராகங்கள் போன்ற புதினங்களில் அண்ணலின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துகளைப் பரவலாகக் காண முடிகின்றது.

3.2.2 தனிமனிதனும் சமூகமும்

தனி மனிதர்களின் கூட்டம் சமுதாயம். எனவே சமுதாயத்தில் நல்லவர்களும் உள்ளனர்; பொல்லாதவர்களும் உள்ளனர். தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்கும் உள்ள உறவைப் புதினங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்வு எங்கே?, சந்திப்பு போன்ற அகிலனின் புதினங்கள் சாதிக் கொடுமையைச் சுட்டிக் காட்டுகின்றன. சித்திரப்பாவை புதினம் பணப் பேராசையால் நேரும் சீரழிவைக் காட்டுகிறது. ரகுநாதனின் பஞ்சும் பசியும் கைத்தறி நெசவாளர் பட்ட கொடுமைகளை எதார்த்த முறையில் சித்திரிக்கும் நாவல். இந்த நாவல் தந்த உந்துதலால் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்பட்ட கீழ்த்தட்டுப் பிரிவினராகிய ஏழைகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், பெண்கள் போன்றோர் பற்றிய பல நாவல்கள் தமிழில் வெளிவந்தன; வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அன்றாட அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியன இல்லாத நிலையில் மக்கள் வாடும் நிலையே வறுமை நிலை. வறுமையைக் கதைப் பொருளாகக் கொண்டு புதினங்கள் பல தோன்றியுள்ளன. வறுமையால் வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கை பல தமிழ் நாவல்களில் எடுத்துரைக்கப்படுகிறது. மு.வரதராசனாரின நெஞ்சில் ஒருமுள் என்ற நாவல் வறுமைக்காகத் தன் உடலை ஒரு பெண் விற்பதாகக் காட்டுகிறது. அவரின் ‘கயமையில்' பகட்டான வாழ்வை விரும்பி அதற்காகவே பலரையும் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக வசீகரம் என்ற பெண் கற்பை விற்பதாகச் சொல்கிறார்.

நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நிறைவேறாத காதலைச் சித்திரிக்கிறது. இவரே நெஞ்சக்கனலில் போலி அரசியல் வாதிகளையும், அவர்தம் திருவிளையாடல்களையும் எடுத்துக்காட்டுகிறார். அறிஞர் அண்ணாவின் பார்வதி பி.ஏ., ரங்கோன்ராதா ஆகிய நாவல்கள் சமுதாயச் சீர்திருத்த நாவல்கள் என்ற வரிசையில் சிறப்பிடம் பெறத்தக்கவை. அநுத்தமா

தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுகின்ற அநுத்தமா மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்ற புதினங்களை எழுதியுள்ளார். லக்ஷ்மி, சூடாமணி, சிவசங்கரி, இந்துமதி முதலியோர் குடும்ப நாவல்களை எழுதியுள்ளனர். கூட்டுக் குடும்ப முறையின் சிக்கல்களை உணர்த்தி இவை அகன்றால் நல்லது என்பது போன்ற எண்ணத்தை நாவலாசிரியர்கள் பலர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் நாவலாசிரியர்களில் தான் நினைக்கிற ஒரு கருத்தைப் பாத்திரத்தின் பண்புக் கேற்ப வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு சிலரில் ஜெயகாந்தன் குறிப்பிடத்தக்கவர். சில நேரங்களில் சில மனிதர்கள் கதாநாயகி கங்கா, பாலுறவுச் சிக்கல் காரணமாகச் சமுதாயத்தைத் துச்சமாக மதித்து எல்லை கடந்த தனிநபராகி வாழத்தலைப்படுகிறாள். எதிர்பாராமல் நடந்துவிட்ட நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவள் அவள். இவளைத் திருமணம் செய்து கொண்டு வாழும்படி கூறிய அவளின் நிலைக்குக் காரணமான பிரபுவுடன் காமம் இல்லாமல் பிள்ளை பெற்றுக் கொள்ள நினைக்கிறாள்.

இவரின் பாரிசுக்குப் போ நாவலின் கதாநாயகன் சாரங்கன் தனி மனிதப் போக்கின் காரணமாக இந்த நாட்டின் கலாச்சாரத்தோடு ஒட்டிப் போக முடியாதவனாக அந்நியமாகி விடுகிறான்.

ந.சிதம்பரசுப்ரமணியனின் இதயநாதம் ஒரு சிறந்த புதினம். இக்கதையில் ‘சங்கீதத்தை ஒரு யோகமாகவும், தபஸாகவும் பெரியவர்கள் கருதி வந்தார்கள்; ஆனால் தற்காலத்திலோ, பாடகர்கள் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அடைவதுடன் தங்கள் சாதனை பூரணத்துவம் பெற்றுவிட்டதாக நினைத்து விடுகிறார்கள்' என்று உள்ளார்ந்த உணர்வுடன் வேதனைப்படும் ஒரு பாகவதரை இலட்சியக் கதாநாயகனாக இந்நாவலில் இவர் படைத்துள்ளார்.

சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளுக்காகப் போராடுதல்

விடுதலைக்குப் பின்னர் முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. சமுதாயக் கொடுமை செடியாக முளைத்து, புதராக வளர்ந்து, இன்று காடாக மண்டிக் கிடக்கிறது. இந்தக் காட்டில் சமுதாயத்தின் மதிப்பீடுகளுக்கு மரியாதை இல்லை. எல்லாம் விலைப் பொருள்கள்தான். இந்த நிலையில் தோன்றியுள்ள சமுதாயப் பிரச்சினைகள் பல. இப்பிரச்சினைகளை முன்னிறுத்திப் பல நாவல்கள் தமிழில் படைக்கப் பெற்றுள்ளன.

மண்ணையே நம்பி வாழும் மாரப்பன், ஜாதிக் கட்டுப்பாட்டு உணர்வின் விளைவாக ஏழை ஹரிஜன விவசாய ஊழியர்கள் கொடுமைப் படுத்தப்படுவதற்கு உடந்தையாக இருக்கும் நிலையில், அவனுடைய மகன் பண்ணை முதலாளியை எதிர்த்துப் போராட முயலும் நிகழ்ச்சிக்கான காரணங்களை கு. சின்னப்ப பாரதியின் தாகம் என்னும் புதினம் விளக்குகிறது.

வறுமையின் கொடுமையால் வாடும் ஒரு குடும்பத்தின் மூத்த புதல்வன் செல்லப்பா; இவன் சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதைக் கருப்பொருளாகக் கொண்டது ஐசக் அருமைராசன் எழுதிய கீறல்கள்.

பொன்னீலன் எழுதியது கரிசல் என்ற புதினம். இது ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் கேட்பாரற்ற அதிகாரத்துடன் தம்முடைய நிலத்தில் உழைக்கிற மக்களுக்குப் போதிய கூலி கொடுக்காமல் வதைத்து அடக்கு முறையைக் கையாளும் பொழுது, கிராம மக்கள் விழிப்படைந்து உரிமைக் குரல் கொடுப்பதைக் கதைப் பொருளாகக் கொண்டது.