3.4 அறிவியல் புதினங்கள் அறிவியல் கருத்துகளை அடியொற்றிய புதினங்கள் கற்பவர்க்குப் புதுமையும், அறிவியல் அறிவும் ஊட்டுபவை. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குப் பெருமாற்றம் பெற்றுவிடும் என்ற அடிப்படையில் கதை எழுதப்பலர் முன்வந்தனர். புதுப்புது விதமான இயந்திரக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைக் கற்பனை செய்து படைக்கப்பட்ட கதைகளே அறிவியல் கதைகள் (Science Fiction) எனப்பட்டன. இரண்டாம் உலகப் போர் தோன்றியதாலும், அறிவியல் மாற்றங்கள் ஏற்பட்டதாலும் புதினம் படைக்கும் கருத்திலும் இத்தகைய அறிவியல் போக்கு ஊடுருவியதில் வியப்பில்லை. விண்வெளி ஆய்வு பெருமளவுக்குத் தொடங்குவதற்கு முன்னரே மனிதன் அண்டவெளிப் பயணங்கள் பற்றிய கற்பனைகளின் வசப்பட்டான். வெளிக் கிரகங்களுக்குப் பயணம் போவதாகவும், வெளிக்கிரகத்துப் புதுமையான மனிதர்கள், விலங்குகள் நம் உலகுக்கு வருவதாகவும் கற்பனை செய்து பல புதினங்கள் ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்றவர்களால் மேல் நாடுகளில் படைக்கப்பட்டன. சந்திர மண்டலத்திற்கு மனிதனும் விண்வெளிக்கலங்களும் போய்வரத் தொடங்கியதிலிருந்து, அத்தகைய செயல்களில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களின் அறிவியல் புதினங்களும் மிகுந்தன. அறிவியலாளர்கள் மனித மூளையுடன் போட்டி போடும் ரொபோ என்னும் எந்திர மனிதனைப் படைக்கத் தொடங்கினர். அணு சக்தியால் செயல்படும் கருவிகளையும் பயன்படுத்த முனைந்தனர். இதன் தாக்கம் இலக்கியப் படைப்புகளுக்குள் நுழைந்தது. மேனாட்டு ஆர்தர் கிளார்க், ஹென்ரி ஸ்லேகர் போன்றவர்கள் எழுதிய அறிவியல் புனைகதைகளை நிறையப் படித்த பின்னர், தான் பணிபுரியும் மின்னணுப் பொறியியல் துறை அனுபவத்தையும் பயன்படுத்தியதால் சுஜாதாவின் சொர்க்கத் தீவு என்ற அறிவியல் நாவல் பிறந்தது. சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். இவர் அறிவியலிலும் பொறியியலிலும் வல்லவர். இவரின் அறிவியல் நாவல்கள் ஒற்றர்களின் வீரதீரமிக்க வெற்றிச் செயல்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கும். தனஞ்செயன் என்பவன் அமெரிக்கா சென்று விஞ்ஞானிகள் இருவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து அணு விஞ்ஞானச் சோதனைக்கும், செயற்கைக் கோள்களை வானில் பறக்கவிடும் முயற்சிக்கும் துணை புரிவதைக் கூறும் வகையில் கி. ராஜேந்திரனின் விண்ணும் மண்ணும் நாவல் உருவாகி உள்ளது. |