3.5 வட்டாரப் புதினங்கள்
இன்று தோன்றும் வட்டாரப்
புதினங்கள் அந்தந்த
வட்டார நிலவியல், மக்களின் வாழ்க்கை முறைகள், பழக்க
வழக்கங்கள், பேச்சு வழக்குகள்
ஆகியவற்றை இயல்பாக
வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. இவ்வகையில் கதை
ஒரு குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த சிற்றூரிலோ
அல்லது
சின்னஞ் சிறிய நகரத்திலோ நடப்பதாகக்
காட்டப்படும்.
இதனுள் ஒரு சமூகத்தின் முழு வாழ்வையும்
அதன்
இருண்டதும், ஒளி மிக்கதுமான எல்லாப் பகுதிகளையும்
இயல்பு நவிற்சியாய்க் கலையழகுடன்
படைப்பாளர்கள்
தீட்டிக் காட்டுவார்கள்.
3.5.1 முன்னோடிகள்
வட்டார நாவல்களில் மண்ணின்
மணம் வீச வேண்டும் என்பர். தமிழில் இப்போக்கைத்
தோற்றுவித்த முன்னோடிகளாக கே.எஸ்.வேங்கடரமணி,
ஆர்.சண்முக சுந்தரம், சங்கரராம் முதலியோரைக்
குறிப்பிடலாம்.
வேங்கடரமணி,
தேசபக்தன் கந்தனை எழுதினார்.
சிற்றூர்கள் சீர்திருத்தப்பட வேண்டிய அவசியத்தை
அதில் விளக்கியுள்ளார். சங்கரராம்
எழுதியுள்ள
மண்ணாசை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த
வீரமங்கலம்
என்ற ஊரைப் பின்னணியாகக் கொண்டது. ஆர்.சண்முக
சுந்தரம் எழுதிய நாகம்மாள் தமிழ் இலக்கியத்தில்
ஒரு
புதிய பாதையை வகுத்தது. இயல்பான
ஒரு கோவை
மாவட்டக் கிராமத்துப்பின்னணியில், குறுகிய
இடத்துக்குள்
நிகழும் புகைச்சல்கள், ஆசைகள்,
வஞ்சகங்கள் எனப்
பல்வேறு உணர்வுகளால் பின்னி அமைக்கப்பட்ட
கதை
நாகம்மாள் என்ற விதவையின் வாழ்வு பற்றியது.
சட்டி சுட்டது என்ற
நாவல் எந்திர நாகரிகம் மிக உயர்ந்த நிலையில்
வளர்ச்சி பெற்ற கோவை மாவட்டத்தில், கட்டை
வண்டி கூட மிக எளிதில் செல்ல முடியாத ஒதுக்குப்
புறத்தில் பழமைக் கூறுகளையெல்லாம் கட்டுக்
குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்
செயல்பட்டு வந்த ஒரு வாழ்வோவியத்தைத் தீட்டிக் காட்டியது.
சி.சு.செல்லப்பாவின்
வாடிவாசல் மதுரை மாவட்டத்து
மறவர்கள்வாழ்வின் சிறுபகுதியையும், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்
தேன் நீலகிரி படகர்களின் முழு வாழ்வையும், ஹெப்சிபா ஜேசுதாசனின்
புத்தம் வீடு ஒரு குமரி மாவட்டக்
கிறித்துவக் குடும்பத்தின் வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன.
3.5.2 தற்கால
வட்டாரப் புதினங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில்
எட்டயபுரம், கோவில்பட்டி இவற்றைச் சுற்றி
உள்ள நிலப்பகுதி கரிசல் காடு எனப்படுகிறது. இந்தப் பகுதி பாரதியார் போன்ற
பல இலக்கிய மேதைகளைத் தந்தது. கி.ராஜநாராயணன் எழுதிய
கிடை என்ற சிறுபுதினம் (குறுநாவல்) வட்டார
நாவல்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அந்தக்
கரிசல் காட்டுப் பகுதிகளில் குடியேறிப் பல தலைமுறைக் காலமாக வாழ்ந்து வரும்
கம்மவார் நாயக்கர்களின் வரலாற்றை இரு நாவல்களாக
இவர் படைத்துள்ளார். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து
மக்கள் என்னும் இவை மிகச் சிறந்த படைப்புகளாகும். இவர்
கரிசல் இலக்கியத் தந்தை என்று போற்றப்படுகிறார்.
பூமணியின் - பிறகு, வயிறுகள் சிறந்த
கரிசல் வட்டாரப் படைப்புகள் ஆகும்.
தோப்பில்
முகமது மீரான்
தோப்பில் முகமது மீரானின்
முதல் புதினமான ஒரு கடலோரக் கிராமத்தின் கதை
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்
பரிசு பெற்றது. தமிழ்நாட்டின் தென் கோடியில்
அரபிக் கடல் கரையில் உள்ள ஒரு கிராமத்தில் பெரும்பான்மையாக
உள்ள இஸ்லாமியச் சமூகத்தினரின் வாழ்வு, அவர்களது
மொழியில் அற்புதமான நாவலாக உருவாகியிருப்பதைக்
காணலாம். இவரது சாய்வு நாற்காலி என்னும் புதினம் சாகித்திய
அகாதமி விருது பெற்றது. இவர் வட்டாரத் தமிழோடு,
மலையாள மொழியையும் பெருமளவு கலந்து எழுதியுள்ளார். நாஞ்சில் நாடனின்
தலைகீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை ஆகிய புதினங்கள்
குறிப்பிடத்தக்கவை.
|