5.0 பாட முன்னுரை

மனித உணர்ச்சிகளை அணுகி ஆராய்ந்து, கலைநயம் குன்றாமல் தம் கற்பனையை, உணர்ச்சி வெள்ள நடையிலே எழுதும் ஓர் உன்னத எழுத்தாளர் அகிலன். இவர் இந்திய விடுதலை இயக்கத்தைப் பின்னணியாக வைத்து நாவல்கள் எழுதியவர். நேதாஜியின் விடுதலைப் படையை மையமாக அமைத்து இவரால் எழுதப்பட்ட நாவல் ‘நெஞ்சின் அலைகள்'. மனிதப் பண்புகளையும், எழுத்தாளர்களின் போராட்டங்களையும் உணர்ச்சி கலந்த நடையில் விளக்கும் நாவல் பாவை விளக்கு.

இவர் பொருந்தாத திருமணத்திற்கு ஆட்பட்டு வருந்தும் ஒருத்தியைச் சிநேகிதியில் சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார். சித்திரப் பாவை என்னும் நாவலில் நாகரிகத்தின் குழப்பத்தையும், பணத்தின் ஆதிக்கத்தையும், அவை கலைஞனைத் தாக்கும் தன்மைகளையும் அகிலன் விளக்குகிறார். இவர் வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர் போன்ற வரலாற்று நாவல்களையும் எழுதியுள்ளார். முதன்முதலாக ஞான பீடப் பரிசை சித்திரப்பாவை என்ற படைப்பிற்குப் பெற்றவர். அகிலனின் சமுதாய நாவலான பொன்மலர் என்ற நாவலைப் பற்றி இப்பாடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.