3.3 கட்டுரை நடை

பாரதியார் உரைநடையிலும், கவிதையிலும் வழங்கிய கருத்துகள் அனைத்துத் துறைகளையும் சார்ந்தவையாகும். சுருங்கச் சொன்னால் அவர் தொடாத துறையே இல்லை எனலாம். பல்வேறு பொருள்கள் பற்றிய பல்வேறு கட்டுரைகள் உரைநடைத் தமிழுக்கு அவர் வழங்கிய கொடைகளாகும். தத்துவம், கலைகள், மாதர், சமூகம் எனப் பல்வேறு தலைப்புகளில் அவருடைய உரைநடைக் கட்டுரைகள் அமைந்துள்ளன. உரைநடைப் பகுதியை ஆராயும்போது ஆசிரியர் அந்தக் கருத்தை எந்த நோக்கத்திற்காக யாருக்காக வெளியிட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நடைவகைகளை ஆராயும் இலக்கியத் திறனாய்வாளர்கள், நடை வேறுபடுவதற்குரிய காரணங்களைக் கூறும்போது ஆசிரியர் (Author), காலம் (Age),நோக்கம் (Purpose), கருத்து (Theme), இடம் (Geography), மக்கள்(Audience) முதலியவற்றால் நடையின் தன்மைகள் வேறுபடும் என்பர். இவ்வகையில் மக்களுக்குரிய செய்தியாகப் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் (முன்னுரை) கூறுவது இங்குப் பொருந்தும்.

‘எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்’,

‘பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு’

‘ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவது.’

ஆகியவற்றைத் தம் நோக்கமாகக் கொண்டுள்ளார் பாரதியார். பாரதியின் படைப்புகள் முழுவதும் இத்தகைய நெறியை அடிப்படையாகக் கொண்டு எளிமையும், இனிமையும் வெளிப்பட அமைந்துள்ளன. எனவே பாரதியின் எளிய நடைத்திறனுக்கு மூலகாரணமாக அமைவது எழுதும் அனைத்தும், மக்களுக்குப் புரியுமாறு எளிமையாக இருத்தல் வேண்டும் என்னும் உயரிய கருத்தேயாகும்.

3.3.1 ஞானரதம்

ஞானரதம் உயர்ந்த தத்துவங்களைக் கதைப் பொருளாகக் கொண்டு சமைக்கப்பட்டது. ஞானரதத்தின் கதையமைப்பு இலக்கிய வகையிலே மிகவும் புதுமையானது. தம்மையே மூலக் கதாபாத்திரமாகக் கொண்டு, தம் வெவ்வேறு வகையான அனுபவங்களை ஒன்றாக இணைக்கும் முறையும் புதுமையானதுதான். இவ்வாறு பல வகைகளில் ஞானரதம் ஒப்பற்றதொரு கற்பனைச் சித்திரமாக விளங்குகிறது.

பாரதியின் ஞானரதம் அவரது சிறந்த உரைநடைக்கு ஓர் எடுத்துக்காட்டு. "நெடிதோங்கி வளர்ந்த கோட்டைச் சுவர்களைக் கொண்ட உபசாந்திலோகத்திற்கு (பாரதியின்) ஞானத்தேர் செல்கிறது. அக்கோட்டை வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் வாயில் காப்போனின் கையிலே, நெருப்பு நிறங்கொண்டதும், இமயமலையைக் கூட ஒரேவெட்டில் பொடிப்பொடியாகச் செய்துவிடுமென்று தோன்றியதுமாகிய விவேகம் என்ற கண்ணைப் பறிக்கக்கூடிய சோதியெழுத்திலே எழுதப்பட்ட வாள் ஒன்று மின்னுகிறது. கவலையற்ற அந்த உலகத்திற்குள் நுழைவதற்கு மனமே தடையாக நிற்கிறது. ஆகவே மனத்தைக் கொன்றாலொழிய சாந்திலோக தரிசனம் கிடைக்காது" என்ற அனுபவத்தைப் பெறுகிறார் பாரதி.

மனத்தை மகிழ்விக்கும் பொருட்டுத் துன்பக் கலப்பற்ற இன்பவுலகமாகிய கந்தர்வலோகத்திற்குச் செல்கிறார் பாரதி.

பாரதி கந்தர்வப் பெண்ணாகிய பர்வதகுமாரியைப் பின்வருமாறு வருணிக்கிறார்.

“சந்திரகலை வீசும் முகம். அதன்மீது சிறியதும், மூன்று விரல் உயரமுடையதுமாய், மலர்களாற் செய்யப்பட்ட ஓர் கிரீடம். உயிரென்ற வண்டு வீழ்ந்து சிறகிழந்து தள்ளாடும் கள்ளூற்றுக்களாகிய இரண்டு கரிய விழிகள். தின்பதற்கல்லாது, தின்னப்படுவதற்கமைந்த போன்ற பற்கள்.... மண்ணுலகத்துப் பெண்களைப் பேசுமிடத்து கந்தர்வச் சாயலென்கிறார்கள். இவளது இயலையும், சாயலையும் என்னென்பேன்? தெய்வ இயல், தெய்வச் சாயல்.”

3.3.2 பாரதியாரின் தராசு

தராசு பாரதியின் வசன இலக்கியத் திறனைக் காட்டுவதோடு அவரை நடுநிலை கொண்ட சிந்தனையாளராகவும் எடுத்துக்காட்டுகிறது. தராசு எல்லா வஸ்துகளையும் நிறுத்துப் பார்க்கும் என்று பாரதி கூறுகிறார். தத்துவம், சமூகப் பிரச்சனைகள், இலக்கியம், அரசியல், கலைகள், வைத்தியம், சமயம் முதலான எல்லாவற்றையும் பற்றிய பல்வேறு ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் தராசு விடையளிக்கிறது. ஒரு பொருளைப் பற்றிய இருவகையான கோணங்களையும் துலக்கிப் பார்த்து இறுதியில் தீர்ப்பான முடிவைச் சொல்கிறது தராசு. கவிஞன் ஒருவனும், துணிக்கடை முதலாளி ஒருவனும் கேட்ட கேள்விகளுக்கு, இருவருக்கும் பொதுவான பொருத்தமான ஒரே பதிலைச் சொல்கிறது தராசு.

“நெசவிலே நாட்டு நெசவு மேல், விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால், பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டு போல பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய, கச்சைவேஷ்டி, போல நெய்ய வேண்டும். ‘மல்’ நெசவு கூடாது. ‘மஸ்லீன்’ நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்ந்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்.”

கவிதையில் இடம்பெறும் சிலேடையைப் போல உரைநடையிலும் அமைத்துப் பாரதியார் புதுமையைச் செய்துள்ளார்.