3.5 பாரதியாரின் வசன கவிதை

தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்குப் பின் பாரதியின் சொல்லாட்சியில் தான் வேகமும் உணர்ச்சியூட்டும் திறனும் மிகுந்து காணக்கிடக்கின்றன. பழைய சொற்களுக்குப் புதிய வேகம் தந்தவர் பாரதி. பாரதியின் வசன கவிதையில் அவர் வழங்கியிருக்கும் சொற்களும், சொற்றொடர்களும் புதுமையானவை.

ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்?

ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?

. . . . . . . . . . . . . .

உணர்வே நீ வாழ்க

நீ ஒன்று நீ ஒளி

நீ ஒன்று நீ பல

நீ நட்பு, நீ பகை

உள்ளதும் இல்லாததும் நீ

அறிவதும் அறியாததும் நீ

நன்றும், தீதும் நீ

நீ அமுதம், நீ சுவை

நீ நன்று, நீ இன்பம்

பழைய சொற்களில் புதிய கற்பனைக் கோலங்களைப் பயன்படுத்தி அழகும் எளிமையும் உணர்ச்சியும் மீதூரப் பாரதியார் மொழியினைக் கையாளும் போதுதான் தமிழ்மொழியின் வலிவும் வனப்பும் நமக்குப் புலனாகின்றன.